புகைப் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்வோம் துறவோம் மறவோம் என இருந்தாலும் அவ்வப்போது நிறுத்தியிருக்கிறேன். முழு முற்றாக நிறுத்தி அப்பழக்கத்தை துறந்தது என்றால் கடந்த மூன்றாண்டுகளாகத்தான்.
இந்தப்பழக்கத்தை நிறுத்துவதால் வரும் விளைவுகளைத் தொகுக்கும் எண்ணத்தோடு, கீழுள்ள பதிவை அவ்வப்போது எழுதி வந்தேன். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
*
சிகரெட் பற்றவைத்தபின் ஊதி அணைக்கும் தீக்குச்சிப் புகை கண்ணில் புகுந்து கலக்கமுறச் செய்யாத புகைவாசிகளே இருக்க முடியாது. கடைசி சிகரெட் வரை இந்தப் பிரச்சனை எனக்கு இருந்தது. உரசிப் பற்ற வைத்தவுடன் கண்களை மூடியபடி குச்சியை அணைத்துவிடவேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இன்று அணைத்த கடைசி குச்சியும் கண்களைக் குளமாக்கியது. அது ஒரு எரிச்சல் தான். சுகமான எரிச்சல். முதல் இழுவைக்காக எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது! கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடப் பழக்கம். பழக்கத்தை விடும்போதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தப் பழக்கத்தை எதற்கு துறக்கவேண்டும்? இல்லை, இதைத் தொடர்ந்து செய்வதால் தான் என்ன பிரயோஜனம்?
பழக்கத்தை விட்ட நண்பர்களைக் கேட்டேன். விட்டேனா? எப்போது? எனக் கேட்ட பலரைத் தவிர ஓரிருவர் 'வெயிட்டு போடும் பார்த்துக்க..மத்தபடி நடுக்கம் குறைய சில மாசமாகலாம்' எனக் கூற, தைரியம் பிறந்தது. அதற்கு முன் எதற்கு விடவேண்டும் என சுயசோதனை கேள்வி பதில்கள், விடுவதற்காகப் புதுப் புது தேதிகளைத் தேர்ந்தெடுக்கும் பதற்றங்கள் என ஆயத்தங்களே வாழ்வைத் தின்றுவிடும்போலிருந்தது. தயாராகும் பிரஸ்தாபங்களைத் தவிர்த்து நேரடியாக கோதாவில் இறங்கலாம் - பூஜை சாமான்களைக் மீண்டும் கையிலெடுக்க யாருடைய சம்மதமும் வேண்டாம் - இந்த தைரியம் ஒன்றுமட்டும் போதும் பழக்கத்தைத் துறக்க;பழக்கத்தைத் தொடரவும்.
நாட்களின் வெறுமையை வென்றெடுக்க சில புதிய பழக்கங்களைக் கற்றுக்கொள். குரங்கை மறந்துவிடு. மருந்தை மட்டும் உட்கொள். போடாங்க..
*
உடல் எடை கூடுவது, நள்ளிரவில் வியர்ப்பது, பாறாங்கல்லைக் காலில் கட்டிவிட்டதுபோல் நடக்கச் சிரமப்படுவது, கைகள் நடுங்குவதேல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இந்த பாதிப்புகள் சில மாதங்களுக்குத் தான். முதல் சில மாதங்களுக்கு பார்க்குமிடமெல்லாம் குரங்குதான். ஒல்லி குரங்கு மற்றவர் வாயில் புகையும், தவிர்க்க முகத்தைத் திருப்பி ஓடினாலோ வாசனை நம்மைப் பிடித்துவிடும். பல மாதங்களுக்கு பின் குரங்கின் வால் மறைந்தாலும் ஆலிஸின் சிரிப்பு போல, அதன் அழிச்சாட்டியம் மட்டும் மறையாது, அடங்காது.
புகையை நிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு மூளையில் நடக்கும் மாற்றங்கள் தான் என்னை மிகவும் பாதித்தன. புகையில் இருக்கும் நிகோடின் எந்தளவு மூளையை பாதிக்கும் என அனுபவித்தால் மட்டுமே தெரியும். நிறுத்திய மூன்றாவது வாரத்திலிருந்து பலவிதமான பயம் என் நாட்களை ஆக்கிரமித்தன. நடக்கும்போது விழுந்துவிடுவேனோ என பயம், படுத்தால் கட்டிலிருந்து மிதப்பது போலத் தோன்றும், ஜீரோ டிகிரியில் கூட கைவிரல்களிடையே வியர்க்கும், ஒருவிதப் பதற்றத்தில் நள்ளிரவில் கால்கள் உதறிக்கொள்ளும்.
மனப்பிராந்தி. சிகெரெட்டை விட்டொழித்தால் பிராந்தி தரும் வியாதியா? கருமம். சில வாரங்களில் பயம் பல புதிய பரிமாணங்களை எடுத்தது. தனியாக லிப்டில் நுழைவதற்கு பயம், இரு ஸ்டேஷனுக்கு இடையே தரையடி ரயில் நின்றுவிட்டால் பதற்றம் அதிகமாகும். தனியாக மாட்டிக்கொள்வோமோ, உதவ யார் வருவார்கள்? யாருமே தேடாமல் போய்விட்டால் என்ன ஆவது என அடிப்படை பாதுகாப்பு சார்ந்த சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கின. சில நாட்களுக்குப் பின்னர் மறைந்தன.
பிறகு நடந்தது தான் உச்சகட்டம். இன்று நினைத்தால் கூட சிரிப்பு எல்லா வழிகளில் பிய்த்துக் கொண்டு போகும். ஆனால் அன்று அப்படியில்லை.
ஒரு சுபயோக சுபதினத்தில், அடுத்த ஜென்மத்தில் எப்படி பிறப்பேன் என்று பயம் வந்துவிட்டது.சிரிக்காதீர்கள். சத்தியமான பயம். படபடபடப்பு. கொடுமையான கொலைக்காரனாக சின்ன வயதிலேயே இருட்டு சிறையில் அடைபட்டால் என்ன ஆவது, வெளி உலகமே தெரியாத குகைக்குள் சாப்பாட்டுக்கே அல்லல்படும் மிருகமாக மாட்டிக்கொண்டால்? இப்போது படிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு வரலாம். எனக்கும் தான். ஆனால், அன்று நான் இருந்த மன நிலையில் இப்படிப்பட்ட பய உணர்வுகள் தாறுமாறாக என்னை அலைகழித்தன. படித்த படிப்பு, சுயமுன்னேற்ற சுலோகங்கள், தர்க்க அறிவு எல்லாம் காற்றில் காணாமல் போயின. ஓரிரு மாதங்கள் இப்படிப்பட்ட பலவிதமான பயம் என்னைத் துரத்தியது. சுற்றிலும் மனிதர்கள் இருக்கும் ரயிலில், அலுவலகத்தில், வீட்டில் என துரத்தித் துரத்தி என் நினைப்பில் தொற்றிக்கொள்ளும். பதற்றம் கூடிக்கொண்டே போகும், பின்னர் எதோ ஒரு நிகழ்வால் படபடப்பு குறைந்து சரியாகிவிடும். மருத்துவர் anxiety தான் என்றார்.
அக்காலகட்டத்தில், என்னளவில் உடலுழைப்பும், மன உழைப்பும் அதிகமாக செலுத்திக்கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கூட வெறுமையாக இருக்க அனுமதிக்கவில்லை. பல உடற்பயிற்சிகள் செய்தேன், ஜிம்மில் ஓடத்தொடங்கினேன். தொடர்ச்சியாக பாடல்கள், இசைத் தொகுப்புகள் எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன். தன்னம்பிக்கை தரும் விஷயங்களை மட்டும் செய்தேன் அதேசமயம் அன்றாட சோக நிகழ்வுகள் பற்றிப் படிப்பதை தவிர்த்தேன். நிராயுதபாணியாக இருப்பதுபோல் ஒரு தவிப்பு. ஏனோ அவற்றைப் பார்த்தால் பதற்றம் அதிகமாகுமோ என பயம் வந்தது. ஆனால் எதுவும் உடனடியாகப் பயனளிக்கவில்லை.
இந்த பயத்தைப் பெருக்கும் அன்றாட வாழ்வின் கவலைகள் தின்னத் தகாமல் பார்த்துக்கொண்டதில் நண்பர்களுக்கு மற்றும் இசைக்குப் பெரும் பங்கு உண்டு. நாட்கள் செல்லச் செல்ல உடம்பும் மனமும் ஒருவித கண்டிஷனில் வந்துவிட்டன. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என தைரியம் ஒரு பக்கம் அமர்ந்தாலும் மற்றொரு பக்கம் பயத்தின் நிழல் நினைப்பில் நுழைய சமயம் பார்க்கும். அதை அண்ட விடாமல் செய்யப் பெரும் பிரயத்தனங்கள் செய்யவேண்டும்.
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் இணையத்தில் புகைபழக்கத்தின் அதீத விளைவுகளைப் பற்றிப் படித்தேன். கைபேசியில், வீட்டில், அலுவலகத்தில் என ஒரு பக்கம் அதைப் பற்றி தேடிக்கொண்டே இருப்பேன். உடலில் ஏதேனும் வித்தியாசமாகப் பட்டால் உடனே கூகிள் தான். விசித்திரமாக இணையத்தில் படித்ததெல்லாம் எனக்கு வருமோ என பயந்தேன். ஒரு கட்டத்தில் எது எதைச் செரிக்கத் தொடங்கியது எனத் தெரியவில்லை. அடிக்கடி என் லோக்கல் டாக்டரைத் தொந்திரவு செய்து, என் பயத்தை எல்லாம் கேள்விகளாகக் கேட்டுத் தள்ளுவேன். அவரும் பொறுமையாக எனக்கு ஒன்றும் இல்லை என ஒவ்வொரு முறையும் விளக்கி விளக்கி ஓய்ந்து போய்விட்டார்.
அடுத்த பாதிப்பு பல் ஈறுகளுக்கு உண்டானது. புகை பழக்கத்தால் ஈறுகள் இறுகி ஜடம் போல ஆகிவிடுமாம். புகையை கைவிட்டபின் ஈறுகள் இளகி கருப்பு- வெள்ளை மாதரசிகள் போல தொட்டதுக்கெல்லாம் கசியுமாம். பல் துலக்கும்போது ஈறுகளிலிருந்து ரத்தம் வரத்தொடங்கியதைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு பல டெஸ்டுகளை எடுத்துக் கொண்டேன். பழக்கத்தை விட்டிருக்கக் கூடாதோ என எண்ணுமளவு உடல் உபாதைகள் தாங்க முடியவில்லை. புகையில்லாமல் உடம்பு பழகுகிறதாமாம். என்னத்த சொல்ல?
தெரிந்தவர் தெரியாதவர் என யார் பேசக் கிடைத்தாலும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு புகைப் பழக்கத்தைப் பற்றி பேசத் தொடங்கினேன். அவர்களது அனுபவங்களைத் தெரிந்துகொள்ள புதுப் புது வியூகம் வகுத்து கேள்விகளைக் கேட்பேன். பெரும்பான்மையானவர்கள், ஏதோ சரியில்லைன்னு தோணிச்சு சார் விட்டுட்டேன் என ஆபிஸ் போகும் வழியில் ஈபி பில் கட்டியது போல சர்வசாதாரணமாகச் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி சஞ்சலம் எனத் தோன்றும். ஒரு வேளை நாம் தான் அதிகமாகப் புகை பிடித்துத் தள்ளிவிட்டோமோ?
ஆனால், இரு விஷயங்களில் மட்டும் திடமாக இருந்தேன். ஒன்று, இந்தப் பழக்கத்தை விடுவதற்கு எதுவும் பேட்ச் அல்லது மருந்துகளை சாப்பிடக்கூடாது. தானாக அனுபவித்துச் சரியாக வேண்டும். ரெண்டு, இந்த விளைவுகள் நாளடைவில் சரியாகிவிடும் என்பதால், வீட்டில் யாரிடமும் சொல்லி பயமுறுத்தக் கூடாது.
இப்போது படிக்கும்போது இதெல்லாம் பெரிய பூ சுற்றல் போலத் தெரியலாம். அந்த சில மாதங்களை நினைத்துப் பார்க்கும் போது எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. சாதாரண சிகரெட் என்ன பெரிய போதைமருந்தா என்றெல்லாம் தோன்றியது. விளைவுகள் எல்லாம் ஓவராக இருக்கே என இப்போது தோன்றுகிறது. ஆனால், இவை அனைத்தும் உண்மை. எந்த கற்பனையும் இல்லாமல் எனக்கு நடந்தவை. எல்லாருக்கும் இவை நடக்கும் என நினைக்கவில்லை. இருபத்து ஐந்து வருடங்கள் நாளொன்றுக்கு ரெண்டு பாக்கெட் பிடித்த சிலர் சாப்பிட்டு கைகழுவி ஈரத்தை உதறுவது போல அனாவசியமாக இப்பழக்கத்தை உதறியிருக்கிரார்கள்.
உடலில் இருக்கும் கடைசி அவுன்ஸ் நிகோடின் வெளியேறியபின் சிக்கலில்லை என பலர் சொல்வதில் உண்மை இருந்தாலும், மூளையில் அவை நிகழ்த்தும் சாகசங்கள் பல மாதங்களுக்கு நீடிக்கின்றன. சிகரட்டில் எட்டாயிரம் ரசாயினத் துகள்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றில் சில மில்லிகிராம்கள் தான் நம் உடம்பில் தங்குகின்றன. ஆனால், பாதிப்பு அளவிடமுடியாதது. உடல் உழைப்பின் சாத்தியங்களை, மனதின் விநோதங்களை பெரிதளவு பாதிக்கிறது. மீண்டும் மீண்டும் நாம் புகைப் பழக்கத்திலிருந்து விலக முடியாமைக்கு இவை பெரிய காரணிகளாக இருக்கின்றன.
எது எப்படியோ இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு முறை கூட இப்பழக்கத்தை உதற மருந்து உட்கொள்ளவில்லை. பேட்ச் அணியவில்லை. எதுவும் இ-சிகெரெட் பிடிக்கவில்லை. சட்டென வந்ததுபோல, திடுப்பென விலகிவிட்டது எனச் சொல்லத்தான் ஆசை. ஆனால், பழக்கத்தை விட்டபின் ஒரு வருட அனுபவத்தினால் இப்படிச் சொல்ல மனமில்லை. இப்பழக்கத்தை விட்டவர்கள் சிகரெட் வாசனை ரசிப்பார்கள். யாராவது பிடித்தால் அந்தப் புகையை மட்டும் இழுத்து ஆஹா என்ன வாசனை என அனுபவிப்பார்கள். சிலர் அறுபது வயதுக்குப் மேல் மீண்டும் பிடிக்கத்தொடங்குவேன், அந்த அனுபவத்தை விடக்கூடாது எனச் சொல்வார்கள். நல்ல அனுபவம் தான், இல்லைஎன்று சொல்ல முடியாது. தனிமைக்குத் துணை.
பீட்டில்ஸ் குழுவினரின் ஒரு பிரபலமானப் பாடல் 'Hello,Goodbye'. அதில் வரும் வரிகள்,
You say "Goodbye" and I say "Hello, hello, hello".
I don't know why you say "Goodbye", I say "Hello, hello, hello"
சிகரெட்டைப் பொறுத்தைவரை, மனதுக்கும் உடலுக்குமான உரையாடலாக இவ்வரிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. போய்வா என நாம் கோபமாகச் சொன்னாலும் எப்போதாவது வேண்டும் எனும் நினைப்பு சிகரெட் பிடித்தவர்களுக்குப் புரியும்.ஒருவிதத்தில் சிகரெட் பிடிப்பது கூட பழைய நினைவுகளுடன் நாம் செய்யும் ஒரு நினைவுருட்டி எனத் தோன்றுகிறது. அதைப் பிடிக்கும்போது ஒவ்வொரு முறையும் நாம் இப்பழக்கத்தின் ஆரம்பகாலகட்ட சுகங்களை ஒருமுறை ஓட்டிப்பார்கிறோம். எனக்கு அப்படித்தான், நண்பர்கள், கல்லூரி சூழல் என ஒரு வட்டம் வரும். ஒவ்வொரு முறையும். ஆனால், மீண்டும் ஒரே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் எனும் எண்ணம் இதுவரை ஒரு முறை கூட எழவில்லை. பார்க்கலாம்.
Recent Comments