எல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறிந்து கேட்ட முதல் இசையே அதுதான்.
ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த ஒளி ஷூமன்னை ஊடுருவித் துளைத்தது. ஷூமன்னின் குடும்பம் பற்றி விசாரிக்கத் தொடங்கி, அவரது அபிலாஷை தோல்வி இழப்பு எனத் தொடர்ந்து ஐசக் நெருங்கினார். கடல் அலைகளின் பிரமிப்பு அடங்கி எவ்வளவு தூரம் மணலைத் தொடும் என விளையாட்டு கணக்காக மாறிப்போன பேச்சு அல்ல. ஐசக் போனபிற்பாடு அந்த இடம் சற்று முன் காட்சியளித்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாததுபோல் ஆனது. தனது குழப்பங்களுக்கு விடை அளிக்கும் சாவி அவரிடம் இருப்பது போல ஒரு பிரமையும் தீர்க்கமுடியாத கேள்விகளின் சுரங்கமாகவும் அவருக்குத் தோன்றியது.
'உன்னை பின்மதியமல்லவா வரச் சொன்னேன்? சீக்கிரமாக இருண்டு விடும்.’
சருகுகளின் மேல் கால்பாவிப்பாமல் வந்ததுபோல ஐசக்கின் வருகை அமைதியுடன் இருந்தது. அவரது குரல் அடிக்கிணறிலிருந்து வருவது போல கனத்திருந்தது.
'வழிதவறிவிட்டேன்..இது என்ன எல்பே நதியை ஒட்டியிருக்கும் பகுதி இல்லையா?’
'சத்தமாகப் பேசாதே, காட்டின் இசையை குலைத்துவிடக்கூடும். இதுவும் எல்பே நதியின் அங்கம் தான். ஆனால் சாதார்ணவர்களுக்கானது அல்ல; கலைஞனின் தினவுக்குள் கூட அடங்காத வெளி.’
முதல் சந்திப்பில் கூட ஐசக்கின் பேச்சின் போக்கு அனுமானிக்க இயலாத திசைகளில் பரவுவதை ஷூமன் உணர்ந்திருக்கிறார்.
'ஹே! காட்டுக்கென தனி இசை இருக்கா என்ன?’ - கனவான் வளர்ப்பையும் மீறி பதினாலு வயதுக்கான துடுக்குத்தனத்துடன் ஷூமன் கேட்டார்.
'உஷ்ஷ்..’, கேள்வி கேட்டு வாயை மூடும்முன் அவரது கையைப் பிடித்து சற்று தள்ளியிறுந்த சதுக்குப் பகுதிக்கு இட்டுச் சென்றார். சுற்றிலும் நகரச்சுவர் போல சுற்றிலும் அடர்ந்து உயர்ந்த மரங்கள்.
'நன்றாக உற்றுக் கேள். விலங்குகள் எப்படி கேட்கின்றன எனப் புரியும்.’
சிறிது கணங்களில், நீர்ப்பறவைகள் ஒரு திசையிலிருந்து ஒலி எழுப்ப காட்டின் மற்றொரு திசையிலிருந்து குயில் ஒலியாக பதில் வந்தது. மான், தவளை போன்ற மிருகங்கள் கூட அவ்வப்போது கிடைக்கும் இடைவெளியை நிரப்பிக்கொண்டிருந்தன. ஆம், இசைக்குழுவினர் போல ஷூமன் பார்த்திராத பூச்சி, பறவை, மிருகம் என கூட்டொலி அந்த வெளியெங்கும் வியாபித்தது.
'மிக உயர்ந்த இசைக்கலைஞனாக ஆசைப்படுகிறாயே! அதுக்கான தொடக்கம் எங்கிருக்கிறது தெரியுமா?’
'இசைக்குறிப்புகளில், வாத்தியங்களில், பாடல் வரிகளில்’, வேறெதைச் சொல்வது எனக் கேள்வி தெரியும் பாவனையோடு ஐசக்கைப் பார்த்தான்.
'பச்..இது எதுவுமே இசைக்குத் தேவையில்லை எனச் சொன்னால் குழம்பிப்போகமாட்டாயே? சரி, வேறு ஒரு கேள்விக்கு வருவோம்’, ஷூமன்னைப் பாராது காட்டின் வனப்பில் தொலைந்தது போல சுற்றும் முற்றும் பார்த்தபடி நகர்ந்தபடி இருந்தார். பல சமயங்களில் நடந்து சென்ற ஐசக்கை ஓடித் தொடர்ந்தார் ஷூமன்.
'இசை என்றால் என்ன சொல் பார்க்கலாம்..’
'அதை எப்படி வார்த்தையில் சொல்வது..ம்ம், உணர்வு, அழகு, மொழிப் பரிமாற்றம், காதல்..’, கடைசி வார்த்தையை சொன்னபின் தவறுதலாய் ஏதோ சொல்லிவிட்டது போல ஷூமன் தலையைக் கலைத்துக்கொண்டார்.
'ஆஹா, நீ ஏன் இசைக்குறிப்பு, பியானோ, வயலின், சேம்பர் இசை, கார்ட்ஸ் எனச் சொல்லாமல் உணர்ச்சி, அழகு எனச் சொல்கிறாய் தெரியுமா? பதில் சொல்லாதே, உனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி அது. மொழியால் வெளிப்படுத்தும் சங்கடத்துக்குச் செல்லாதே. உன் ஆழ்மனதுக்குத் தெரியும். அது என்ன என உணர்ந்துகொள்.’
புது வழி புலப்பட்டது போல ஒரு அடி பின்னால் சென்று இடதுபுறம் தெரிந்த சவுக்குமரப்பகுதிக்குள் நுழைந்தார். ஐசக்கின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காட்டு மிருகம் போல இருந்தது. அவர்கள் சந்தித்த இடத்தை விட இப்பகுதியில் மரங்கள் நெருக்கமான இருந்தன. ஒவ்வொரு திருப்பங்களும் காட்டின் மத்தியப் பகுதிக்குச் செல்வது போல ஷுமன்னுக்குத் தோன்றியது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் ஐசக்கைத் தொடர்ந்தார். கேள்வி சார்ந்த கற்பனைகளின் சுவாரஸ்யம் தாண்டி ஒரு சில நிமிடங்கள் தன்னை இழந்துவிட்டு பிரக்ஞை திரும்பியது போலத் தோன்றியது. வானம் எங்காவது தெரிகிறது எனப் பார்த்தார். கிழக்கு பகுதியில் கொஞ்சம் ஒதுங்கி இருந்தன. மனம் முழுவதும் காட்டின் அழகோடு குவிய மறுத்தது. ஏதோ விசித்திர நோய் பீடித்தவ்ன் போல எதிலும் ஒன்றாத இருப்பின்மை. ஐசக் கேட்ட கேள்விக்கான பதில் தெரிந்தாலும் இதுவரை எந்தவித விசாரமும் இல்லாமல் இருந்தது ஏன்? இனம் தெரியாத நம்பிக்கையின்மை ஒருவித பதற்றம் சுற்றிப் புகைந்துகொண்டு இருப்பது போல் தோன்றியது. எவ்வளவு தூரம் சென்றாலும் காடு முடிவடையாதது போலவும், வரும் ஒலிகலெல்லாம் ஏனோ தொலை தூரங்களிலிலிருந்து வருவது போலவும் தோன்றிற்று. திடீரென வரிசையாக ஒலிக்கும் பலவித குரல்கள் அலை போல திடமாகத் தொடங்கி எதிர் திசையில் மெல்லிய கேவலாகச் சரணம் அடைந்தன. துணையின் தேடல் உணவுக்கான கூவலாக மாறியது போலிருந்தது. காடு நிர்மானுஷ்யமாய் மாறியது.
'இன்னும் காதுகளை கூர்மையாகத் தீட்டிக் கேள்.’
நீண்ட மரங்கள் முடிவில்லாத வானை துழாவிக்கொண்டிருந்தன. எத்தனை தடிமனான கிளைகள்? எல்பே நதியை ஒட்டி நெடிது நிற்கும் மரங்கள் ஒடிசலானவை. குளிர் கால சூராவளிக்காற்றில் வளைந்தும் உடைந்தும் போகக்கூடியவை. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் காட்டின் உட்புறமாக இருக்கும் இப்பகுதி மரங்கள் எப்படி இத்தனை செழிப்பாக இருக்கின்றன? மண்ணை பிளந்து வேரின் நுனியை தொடர்ந்து சென்றால் நதியின் சென்று சேருமோ?
ஐசக்கின் ஓட்டம் தடைபெற்றது. பலவிதமான ஒலிகள் கூட்டறிக்கை போல தத்தமது கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டிருந்தன. அனைத்து பரிமாணங்களிலும் ஒலியே பிரதானமாகச் சஞ்சாரிப்பது போன்றதொரு பிரமை. மெல்ல ஐசக் பாடத்தொடங்கினார். ஆந்தைகளைக் கூட உறங்க வைக்கக்கூடிய மதுரக்குரல். இத்தனைக்கும் பாடல் வரிகள் ஷூமன்னை ஈர்க்கவில்லை. காட்டில் ஒலியோடு மற்றொரு மிருகம் போல் மிக லாவண்யத்துடன் ஐசக்கின் குரல் இயைந்துவிட்டது. அலைக்கழிப்பின் விசையை சரியாகச் சுண்டி விட்டது போல ஐசக் காட்டின் குழுவினரோடு ஒன்றாகிவிட்டார். மாலை வெயில் நன்றாக இறங்கியிருக்கவேண்டும். ஐசக் ஒரு மெல்லி வடிவமாகப் புலப்பட்டார். மெல்ல நீண்ட முறுகலான கொம்பை உடைய மான் அருகிலிருந்த மரத்துக்குப் பின்னிருந்து எட்டிப்பார்த்தது. எதிரே தெரிந்த புதரிலிருந்து கொழுத்த முயல், மரப்பொந்திலிருந்து அடர்த்தியான வால் கொண்ட மரங்கொத்திப்பறவை, தூரத்தில் நின்றிருந்த நரி என அவர்களைச் சுற்றி காட்டு மிருகங்களில் இசையில் மயங்கியிருந்தன. மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போலிருந்த ஷூமன்னுக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. ஐசக் உடன் இருக்கையில் இதை எதிர்பார்க்கக்கூடாது என உணர்ந்திருந்தார். அப்பொது அவருக்கு எஞ்சியிருந்த ஒரே ஆசுவாசம் தூரத்தொலைவில் கேட்டுக் கொண்டிருந்த அருவியின் ஓசைதான். கிட்டத்தட்ட புற உலகோடு ஷுமன்னுக்குத் தொடர்பிருந்த ஒரே இழை. எந்த திசை எனத் தெரியாது எனினும் அந்த அருவியின் ஓசையை விட ஐசக்கை சுற்றி நடப்பவற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து நின்றார்.
நிகழ்வில் ஒரு சுருதி மாற்றம் நடப்பது போன்ற பிரமை. மெல்ல அனைத்து மிருகங்களும் ஐசக் இருந்த இடத்தை சுற்றி நின்றிருந்தன. பெரிய தவறு செய்துவிட்டேனோ என ஷுமன்னுக்குத் தோன்றியது. புதிர் தன்மையுடன் பேசும் ஐசக்கின் வலையில் கிளுகிளுப்போடு ஏற்று விழுந்தது தவறோ என மனம் அரற்றத் தொடங்கியது. ஆனாலும் அந்த இடத்தை விட்டு நகர ஷூமன்னுக்கு மனம் வரவில்லை. விதியின் விசித்திரத்துக்கு அடங்கிவிட்டது போல் நின்றுகொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் சீராக ஓடினால் நதியையும் அதன் கரையைக் கடந்து தனது வீடு இருந்த பகுதிக்கும் விரைந்து தஞ்சம் புகுந்துவிடலாம் என்ற சாத்தியம் இருந்தாலும் அருவி ஓசை தவிர வேறேதுவும் உலகத்தோடு தொடர்பிலாதது போலிருந்தது.
ஐசக் அதை உணர்ந்தவர் போல பாடலை நிறுத்தினார். குயில்களும், ஆந்தைகளும், கோட்டான்களும் எண்ணற்ற பூச்சி இனங்களும் தத்தமது ஒலி உலகுக்குள் நுழைந்தன. மெல்ல பழைய இரைச்சல் மிக்க சமநிலை திரும்பியது. நீண்டப் பெருமூச்சை காடு இழுத்துவிட்டது போல சற்று முன் அமானுஷமாகத் தெரிந்த மரக்கும்பல்கள் சகஜமாயின.
'ஐசக், என்ன நடந்தது? என்ன..என்ன விதமான இசை இது?!’
'இங்கு நடந்ததை இசை என்றா நினைக்கிறாய்?’, தனது வீட்டுக்குள் நுழைவது போல சகஜமாக நகரத் தொடங்கினார்.
'ஷூமன், உன்னை சந்தித்த போது இசை என்றால் என்ன எனக் கேட்டபோது, உணர்ச்சி, இடப்பெயர்ச்சி, காதல் என ஏதேதோ சொன்னாய். இதுக்கெல்லாம் முதலாய் ஒன்று ரொம்ப முக்கியம், கேட்கும் விதம். அதை மறந்துபோனாய்?’
'கேட்பதில் என்ன இருக்கிறது? வாயிருப்போரெல்லாம் பேசுவது போலத்தானே? இங்கு நடந்ததுக்கு விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதேதோ பேசிகிறீர்கள்?’ - உண்மையான சீண்டல் ஷூமன் குரலில் இருந்தது. தன் புரிதல் எல்லைக்குள் வராத ஏதோ ஒன்றால் உலுக்கப்பட்டவனின் குரல் போல.
'இல்லை. காதிருப்பவன் கேட்பது போலல்ல. நாம் கேட்கும்போது இசையை பிரித்து வகைப்படுத்தத் தொடங்கிவிடுகிறோம். முக்கியமாக நமது ஞாபக அடுக்குகளை புரட்டிப் போட்டு இது என்ன இசை, இதுவரை கேட்ட இசையில் இது என்ன ரகம், அதன் பெயரை கண்டுபிடிக்க முடியுமா, யார் எழுதியது, எப்போது என கேள்விகள் நிரம்பி வழிகின்றன. இசை முடிந்ததும் யார் இசைத்தது, என்ன வகையான இசை எனத் தெரிந்துகொள்வதில் முதன்மையான முனைப்பு இருக்கும். பாதியில் கேட்கும்போது கூட நமது மூளையை நோண்டியது போல அருகில் இருப்பவர்களைச் சீண்டி கேட்கப்பார்கிறோம். கேள்விகள், பதில்கள், மேலும் அதிகமான கேள்விகள் என இசைக்கு போட்டியாக நமது நினைவுகள், வகுக்கும் திறமைகள், இசை நுணுக்கங்கள் என சில்வண்டுகள் போல நம்மைச் சுற்றி ரீங்காரமிடத் தொடங்குகின்றன. ஷூமன், இசைக்கு இத்தனை பாரம் ஆகாது.’
துவண்டுபோனவனின் கடைசி ஆயுதம் போல, ‘இசையை மிருகங்கள் போலக் கேட்பதற்கு நாம் ஒன்றும் உணர்ச்சி இல்லாதவர்கள் இல்லையே?’, என ஷூமன் கேட்டதும்.
'பார், இப்போது கூட என்ன பதில் சொல்லலாம் என உனது மூளை நோண்டிக்கொண்டேயிருந்திருக்கிறது. எனது முதல் கேள்வியைத் தவிர மற்றவை எதுவும் உனக்குள் இறங்கவில்லை. இசையைக் கேட்கவும் உணரவும் உருவாக்கவும் வாத்தியக்கருவிகள் கூடத் தேவையில்லை என சற்று நேரத்திற்கு முன் புரிந்திருக்கும். எந்த மிருகமும் ஒலி உண்டாக்க யோசிப்பதில்லை, ஆத்ம பலம் உள்ளதா என சோதிப்பதில்லை, ஏன் பலத்தை சோதிக்கவும் நிரூபிக்கவும் முனைவதில்லை. சரி உன்னிடம் மற்றொரு கேள்வி. இந்த மயிலும், குயிலும், மானும் காட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறதா?’
சம்பந்தமில்லாத கேள்வியால் சற்றே எரிச்சல் அடைந்தாலும் தனது மனது ஐசக்கோடு ஒத்துப்போவதை ஷூமன் உணர்ந்திருந்தார், ‘அப்படித்தான் நினைக்கிறேன். மிருகங்கள் என்ன நினைக்கின்றனவோ?’
'அதுதான் இல்லை. அவற்றின் இருப்பிடம் தான் காடு. காட்டில் வாழ்வதாக அவை நினைப்பதில்லை. காடே அவர்களில் வாழ்வில் ஒரு அங்கம். இசையும் அப்படித்தான். எல்லாவற்றோடு தொடர்புடையது இசை. ஆனால் அதை நேர்மையாக அணுகி இயல்பாக புரிந்துகொள்ள அதோடு நீ ஒன்ற வேண்டியது அவசியம். காதுகளால் மட்டுமல்ல, உனது ஒவ்வொரு இருப்பும், அசைவும் பொருந்தவேண்டியுள்ளது. அவற்றில் இருக்கும் இசையை நீ உணரவேண்டும். இங்கு நான் காட்டு விலங்குகளோடு ஒன்றானதால் மட்டுமே அவர்களது இசையை தன்னகப்படுத்த முடிந்தது. கேட்கத் தெரிந்தால் போதும். செவி அவசியமல்ல.’
வெகுநேரம் ஆகிவிட்டது. தாட்சண்யமற்ற காடு விலகி வழிவிடுவது போல அவர்களை நதிப்படுகைக்குக் இட்டுச் சென்றது. தூரத்திலிருந்து தனது வீட்டுப் பகுதியைப் பார்த்த ஷூமன்னுக்கு எமிலியும் தனது காதலும் நினைவுக்கு வந்தது சுகமாக இருந்தது. பாழ்வெளியின் ஆதார சுருதியோடு இணைந்திருந்தது போல என்னவொரு அனுபவம்! இதுவரை உணராத காட்டின் ஈர மணம், பறவைகளின் மணங்கள் சூழ்ந்துகொண்டன. தூரத்தில் தெரிந்த புல்வெளிகள் சூழந்த வீடுகள் அன்னியமாக இருந்தன. எவ்வளவு விலகி இருக்கிறார்கள்! பிரத்தியட்சம் மட்டுமே நினைவும் அண்டமும் என வாழும் துர்பாக்கியசாலிகள். ஷூமன் அடைந்த அனுபவம் கடலின் சிறு துளி தான் என்றாலும் பிரக்ஞை இழக்கவல்ல பேரனுபவம் தான் இது. உலகம் எனும் கற்பனையிலிருந்து தப்ப முடியுமா? காதல் அனுபவங்கள், முதல் முத்த வாசம் எல்லாம் அற்பமான செய்கைகள் போல ஷூமன்னுக்குத் தோன்றின. நாற்புறமும் மரங்கள் சூழ்ந்திருந்தாலும் திரும்பிய பக்கமெல்லாம் வெட்டவெளியை போல உணர்ந்திருந்தது எவ்விதம்? திடுமென கனவு வாழ்க்கைகுள் திரும்ப ஒரு வெறியும், கற்பனை எதுவெனப் புரியாத குழப்பமும் ஷூமன்னின் தசைநார்களை வலுவிழக்கச் செய்தன. மெல்ல துவளத் தொடங்கினார். திடுக்கிட்டு காட்டை திரும்பிப் பார்த்தார். கண் முன் காடு ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஓர் உடல் கொண்ட பிராணி போல சிலிர்ந்து அடங்கியது. விரிந்து விலகும் பெரிய கதவு போல காடு பச்சை நிற வாயோடு பிளந்து கிடக்கிறது. பிளவு முடியும் இடத்தில் ஒளிவீசும் தாட்சண்யமான கண்களுடன் காட்டு மிருகங்கள் ஷூமன்னைப் பார்த்தன.
(தொடரும்)
Recent Comments