சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் இருந்தபோது 'சிகப்புக் கம்பளம்' (
The Red Carpet) எனும் சிறுகதைத் தொகுப்பை படித்தேன். லாவண்யா சங்கரன் எனும் அமெரிக்க இந்தியர் எழுதிய பதினைந்து கதைகளின் தொகுப்பு. பெங்களூரை முன்வைத்து எழுதியதால் கதைகளோடு மிக நெருக்கமாக உணரமுடிந்தது. மாறிவரும் நகர்புற பெங்களூர்,மென்பொருள் மின்னணு நிறுவனங்களின் நிலை, சிற்றூர்களிலிருந்து நகரத்தில் இருக்கும் அதி-நவீனமான நிறுவனங்களில் தங்களைப் பொருத்திப் பார்க்கும் இளையவர்களின் நிலை பற்றி மிக அழகாக எளிமையாகச் சொல்லப்பட்ட கதைகள்.சிகப்புத் தரைவிரிப்பு என்பது ஒரு உலகத்திலிருந்து மற்றொரு மேலான உலகுக்கான வெத்திலை தாம்பூல அழைப்பு மட்டுமல்ல, அது இரு உலகுக்கு இடையேயான ஊசலாட்டம் என்பதை அழகாக கதைகளில் காட்டியிருப்பார் .
ஆனாலும் நவீன இந்திய - ஆங்கில நாவல்கள் மேலிருந்த கசப்பு குறையாமலிருந்து. இந்தியாவின் ஆன்மாவை சரியாகக் காட்சிபடுத்தும் சில இந்திய-ஆங்கில புனைவு/அபுனைவு நூல்களைப் படிக்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வரும். திடீரெனப் இதுதாண்டா பெஸ்ட்செல்லர் என அடிபடும் இந்திய-ஆங்கில புனைவு/அபுனைவு அதைக் குலைத்துவிடும். அரவிந்த் அடிகாவின் 'வெள்ளைப் புலி' படித்தவுடன் வந்த எரிச்சலில் அந்தப் பக்கமே தலைவைக்காமல் இருந்தேன்.
சில மாதங்களுக்கு முன் '
செளரிங்கி' எனும் நாவலைப் பார்த்தபோது வெள்ளைப் புலி நினைப்பு வாங்க விடாமல் தடுத்தது. அடுத்தடுத்து பல பழைய புத்தகக் கடைகளில் புதிதாகக் கிடைத்த இந்த புத்தகத்தைப் பார்க்கும்போதெல்லாம் 'சரிதான், யாருக்குமே பிடிக்காமல் சாரிடிக்கு கொடுத்து விட்டாங்க' என்ற எண்ணத்தைக் கலைக்க முடியவில்லை. எதிர்பாராத விதமாக அலுவலக சாரிடி சேலில் அதே புத்தகம் விடாது கருப்பாக வந்ததில் புரட்டிப் பார்த்தேன். நான் நினைத்தது போல இல்லாமல்,1962ஆம் ஆண்டு வெளியான வங்காள நாவலின் மொழிபெயர்ப்பு (2007) எனத்தெரிந்ததும் பட்டென அமுக்கிப்போட்டேன்.
ஷங்கர் (மணி ஷங்கர் முகர்ஜி) என்ற எழுத்தாளர் எழுதியது. கல்கத்தாவின் செளரிங்கி எனும் இடத்தில் இருக்கும் ஷாஜஹான் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் கதைதான் இது. ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' (
The Midnight's Children) நாவலின் சலீம் சினாய் தனது சுயசரித்திரம் தான் இந்தியாவின் சரித்திரம் எனப் பிரகடனம் செய்வது போல, ஷாஜஹான் ஹோட்டல் நிகழ்வுகள் வழி கல்கத்தாவின் காலனிய மற்றும் பின்காலனியச் சரித்திரத்தை ஷங்கர் எழுதியிருக்கிறார்.

பலரின் கதையைப் பேச ஹோட்டல் சூழல் மிக சவுகரியமாக அமைந்திருக்கிறது. அதே போல கதை நடக்கும் ஐம்பதுகளின் காலகட்டமும் மிக முக்கியமானதுதான். சிகப்பு கம்பளம் வழி நுழைந்த ஆங்கிலேயர்கள் விக்டோரியா பாணிக் கட்டடங்களையும், இந்திய மத்திய/ மேல் தட்டு வாழ்வில் 'ஆங்கிலேய பாபு' தோழர்களையும் உருவாக்கிவிட்டு லண்டனுக்கு வெளியே ஆங்கிலேயரின் தலைநகரமாக இருந்த கல்கத்தாவை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த காலகட்டம். வெளியேறினாலும் ஆங்கிலேயர்கள் புழக்கத்தில் விட்டிருந்த விழுமியங்கள், கலாசார தாக்கங்கள் பல காலத்துக்கு கல்கத்தா காற்றில் மிதந்துகொண்டிருந்தன. கதை அதைப் பற்றியதுதான்.
பழமைவாதத்தை பின்காலனிய எச்சங்களோடு மோதவிட்டிருக்கிறார் ஆசிரியர். ஷாஜஹான் ஹோட்டல் வரவேற்பறையில் வேலை செய்யும் ஷங்கர், போஸ், மார்கோ போலோ (மேனேஜர்) போன்றவர்களின் பார்வையில் கதை விரிகிறது.காலனிய கல்கத்தாவிலிருந்து விடுபட முயற்சிக்கும் மக்கள் , அதை விடாப்பிடியாக பிடித்திருக்கும் 'ஆங்கிலேய பாபு'களின் மனோபாவத்தையும் ஆசிரியர் விவரிக்கிறார்.
ஆங்கிலேய நீதிபதியின் காரியதரிசியாக வேலைப் பார்த்த ஷங்கர் அவரது இறப்புக்குப் பின் வேலையில்லாமல் கல்கத்தாவில் சுற்றி வருவதோடு நாவல் தொடங்குகிறது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கட்டடங்கள், பாலங்கள், கர்சன் துரை, மெகாலே துரை போன்றோரின் சிலைகளை ஷங்கர் ஏக்கத்தோடு பார்க்கிறான். ஆங்கிலேயர்கள் ஊரை விட்டுச் சென்றதால் அவனைப் போன்ற ஆங்கில 'பாபு'களுக்கு வேலை கிடைப்பதில்லை. திடுமெனப் பெரிய வெறுமை சூழ்ந்தது போல காலனிய வாழ்வை நினைத்துருகிக்கொண்டிருக்கும் வேளையில் ஷங்கரின் பழைய நண்பர் ஷாஜஹான் ஹோட்டலில் வேலை வாங்கித் தருகிறார்.
ஷாஜஹான் ஹோட்டல் நாவலின் மிக முக்கியமானப் பாத்திரமாக அமைந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அவரது ஆவி ஹோட்டலை ஒழுங்குப்படுத்த இரவில் வளம்வருவதாக அங்குள்ளவர்கள் எப்போதும் நம்புகிறார்கள். ஆங்கிலேய ஆட்சியின் மேலோட்ட படோபடத்தின் சாட்சியாக ஷாஜஹான் ஹோட்டல் சவுரிங்கீயில் நிற்கிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஏற்ற வண்ண விளக்குகளும், வழுக்கும் தரை, சிகப்பு தரைவிரிப்பு, அன்றாடம் சாப்பாட்டு மேஜையில் வைக்கப்படும் புது சாப்பாட்டுப் பட்டியல், அறைகளில் தினந்தோறும் மாற்றப்படும் திரைச்சீலைகள் விரிப்புகள், வாரயிறுதியில் நடக்கும் பான்கட் கேளிக்கை, மேற்கத்திய இசை, வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படும் கேபரே நடன மங்கைகள், கல்கத்தாவின் மேல்தட்டு மக்களின் கரிய இரவு வாழ்க்கை என ஹோட்டலில் நடப்பவையே கல்கத்தாவின் ஆன்மாவாக விரிகிறது.
ஐம்பதுகளின் கல்கத்தாவை நம்மால் வியப்போடு வேடிக்கைப் பார்க்க முடிகிறது. இதுதான் நாவலில் மிகப் பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.ஷங்கர் மற்றும் அவரது நண்பராக வரும் போஸ் இருவரும் ஹோட்டலின் வரவேர்பாளர்கள்.
கடப்பவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி அவை எதுவும் தனது சுயத்தைப் பாதிக்காத கதாபாத்திரம் போஸ். ஹோட்டலின் நிழல் நடவடிக்கைகள் அவனைக் கலங்கச் செய்வதில்லை. கல்கத்தாவின் மேல்தட்டு குடும்பப் பெண்கள் தங்கள் காதலர்களைச் சந்திக்க அறை கேட்கும்போது அவனால் உணர்ச்சிவசப்படாமல் ஏற்பாடு செய்யமுடிகிறது. கேளிக்கை விருந்தில் கலந்து கொள்ளும் குடிகாரப் பணக்காரர்களின் இந்திய வெறுப்புப் பேச்சை மீறி அவர்களது கோப்பையை அவனால் நிரப்ப முடிகிறது. ஹோட்டலின் எல்லா அலுவல்களிலும் அவனது கருத்தை எதிர்பார்த்து மரியாதை செய்கிறார்கள். ஒருவிதத்தில் அவனது விலகல் சுபாவம் அந்த ஹோட்டலின் சொத்து. அவன் எதிர் கருத்து சொல்லாதவன் என்பதால், பல வாடிக்கையாளர்கள் அவனிடம் பேசுவதை விரும்புகிறார்கள்.
இதெல்லாம் ஷங்கருக்கு ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை கொடுக்கிறது. ஹோட்டல் நிழலாட்டங்களில் அவனது சுயமரியாதை பாதிக்கப்படுகிறது. வெளிப்பூச்சோடு வாடிக்கையாளர்களிடம் பேசினாலும், இரவு அறைக்குத்திரும்பியதும் போஸிடம் வெடித்து விம்முகிறான். மேலும் ஒரு நாள் கூடத் தங்க முடியாது என ஒவ்வொரு நாள் இரவிலும் புலம்புகிறான்.
பல சின்னச் சின்ன கதைகளின் மூலம் நாவலை முன்னகர்த்தியுள்ளார் ஆசிரியர். ஒரு பொதுவானக் கதைஎன்றில்லாமல், வாடிக்கையாளர்களின் வாழ்வும் சிக்கலுமே நாவலுக்கான அடித்தளத்தைக் கொடுத்திருக்கிறது. காதலனைச் சந்திக்க வரும் மேல்தட்டுக் குடும்ப மாதரசி இந்தியாவின் கீழ்மைக்கானக் காரணங்களை மேடை போட்டுப் பேசுகிறாள். அவளது மகன் அதே ஹோட்டலில் வேலை செய்யும் விபசாரியிடம் காதல் வயப்படும்போது அவனைக் கண்டிக்கிறாள். அவளை மிரட்டி தற்கொலைக்குத் தள்ளிவிடுகிறாள். இவற்றை ஆங்கிலேயர் விட்டுச் சென்ற எச்சங்களாக ஷங்கர் பார்த்து வெறுக்கும்போது, போஸ் அவற்றை எந்தொரு சமூகத்தின் கீழ்மையில் உள்ளவைதான் என காரணம் சொல்கிறான். கல்கத்தாவின் பாரம்பரியத்தோடு போஸ் ஒட்டுவதில்லை; ஆங்கிலேயர் உருவாக்கிய கல்கத்தா மட்டுமே அவனது உலகம்.
ஒரு நகரத்தின் சீரழிவுக்கானக் காரணத்தை பாரம்பரியத்திலும்,காலனி வாழ்விலும் ஆசிரியர் தேடுவதால்,இந்தியாவின் பின்காலனிய நாவலாக ஆழமாகக் காலூன்றி நிற்கிறது.
ஆனால், இப்பெரு நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை.
(தொடரும்)
என்னங்க இது, நாவலைப் படிச்சுட்டு தொடர் விமரிசனம் போடறீங்க!
இப்படிதான் ஆஸ்லோவும் பாதில நிக்குது- இட்லி கிடைச்சுதா, மிளகாய்பொடி தொட்டுக்க தருவாங்களா என்ன, ஒண்ணும் சொல்லல.
இப்ப இது :(
Posted by: Kalimankalayam | 10/12/2011 at 05:07 PM
என்னங்க சரக்கு அவ்வளவுதான் இருந்தது..அதான் ஒரு தொடரும் கார்டு..:)))
கிரி
Posted by: BeyondWords | 10/12/2011 at 07:12 PM