இது ஓரான் பாமுக்கின் அரசியல் மற்றும் அவர் எழுதிய முதன் நாவலான `வெள்ளைக் கோட்டை` (The White Castle) பற்றிய பதிவு.
ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளனின் புத்தகத்தைப் பற்றி கொஞ்சம் பிதற்றலாம் என்ற எண்ணம். நான் படித்த புத்தகங்களைப் பற்றிய சில எண்ணங்கள் மட்டுமே இங்கு பதியப்படும். இவை அப்புத்தகங்களைப் பற்றிய முழு விமர்சனம் கிடையாது.
கதையின் முடிவைவிட, எழுத்தாளனின் எழுத்து சுவாரசியத்திற்காக மட்டும் இப்புத்தகங்களை அனுபவிக்கலாம் என்பதால், Spoilers ஆன கதைகளின் முடிவும் இருக்கும்.
***
வெள்ளைக் கோட்டை
ஓரான் பாமுக் எழுதிய முதல் நாவல். இதற்கு முன்பாகவே My Name is Red , Snow மற்றும் Other Colours படித்துவிட்டதால், இப்புத்தகம் சற்று ஏமாற்றமே. வாத்தியார் கூறியபடி, எல்லா எழுத்தாளனின் முதல் புத்தகத்தையும் படிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனாலும், ஓரான் பாமுக் எழுத்தில் நுழைபவர்கள் இப்புத்தகத்தை முதலில் படித்தால் ஏமாந்து போவது நிச்சயம்.
அப்படி என்ன இல்லை என கேட்கும் வாசகர்களுக்காக `இல்லாததைப்` பற்றி முதலில் எழுதுகிறேன்.
இப்புத்தகத்தின் நாயகனுக்கு பெயர் இல்லை. புத்தகம் முழுவதிலும் ஓர் இடத்தில் கூட உரையாடல் இல்லை. இயற்கை வர்ணணை, இஸ்தான்புல் பற்றி நிலவிவரணை கிடையாது. எந்த காலத்தில் நடக்கும் கதை என்பது பற்றிய நேரடி விவரம் இல்லை. கதையில் மூன்று கதாபாத்திரங்கள் தவிர யாருமே நேரடியாக வருவதில்லை.
சரி, என்னதான் இருக்கிறது?
கதை நிச்சயம் உண்டு. ஓரான் பாமுக்கின் அரசியல் தெளிவாக ஊன்றெடுக்கும் சம்பவங்கள் உண்டு. பின்நவீன பாணி குழப்பங்கள் உண்டு. முடிவில் நம்மிடையே தங்கிவிடும் ஏமாற்றம் உண்டு.
எதற்காக படிக்க வேண்டும்? பாமுக்கின் உலகில் நுழைய முற்படும் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாக பரிந்துரைக்கலாம். ஆனால், முதல் புத்தகமாக அல்ல. முதல் புத்தகமாக Snow அல்லது My Name is Red உசிதம். ஆனால், பாமுக் என்ற எழுத்தாளனின் பரிணாம வளர்ச்சியை கவனிக்க இந்நூல் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு எழுத்தாளனைப் பற்றி இலக்கிய ஜம்பம் அடிக்க குறைந்தது மூன்று நூல்களாவது படிக்க வேண்டும் என்ற சுயவிதி கொண்ட `நல்லவர்கள்` இம்மூன்றையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
முதலில், ஓரான் பாமுக் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
ஓரான் பாமுக் துருக்கி நாட்டு இலக்கிய அரசர். நோபல், வாயில் நுழையாத பிரான்ஸின் உயரிய விருதுகளை வாங்கியவர். அதனால் துருக்கியில் அவருக்கு வீட்டுக்கு வீடு போஸ்டர் அடித்திருப்பார்கள் என நினைக்க வேண்டாம். பழமைவாத துருக்கி ஆளுமைகள் இவரை தீவிர எதிரிகளாகக் கருதுகிறார்கள். மேற்கு நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய சிந்தனையில் ஊறியவர்; தன் இலக்கிய சிந்தனைகளை அங்கிருந்து தருவித்தவர் என்பதால் துருக்கியில் இவருக்கு வரவேற்பு குறைவுதான்.சொந்த நாட்டின் சிந்தனை மரபிலிருந்து பிரிந்தவர் என்பதால் துருக்கி நாட்டில் இவர் ஒரு அன்னியர்.
கிட்டத்தட்ட ஜப்பான் நாட்டில் வாழும் ஹருகி முரகாமியின் நிலைதான் இவருக்கும். மரபார்ந்த சிந்தனைகளை ஒதுக்கி, தங்கள் சிந்தனையின் வேரை மேற்கிலிருந்து தொடங்கியவர்கள்.
வெள்ளை மாளிகையில் இப்படிப்பட்ட இருவர் சந்திக்கிறார்கள். ஒருவன் பெயர் தெரியாத கதைசொல்லி. வெனிஸ் நகரத்திலிருந்து அடிமையாக துருக்கிக்கு அழைத்து வரப்பட்டவன். இவன் விஞ்ஞானம், கணிதம் பற்றிய அடிப்படை அறிவு கொண்டவன்.
ஹோஜா (கிட்டத்தட்ட வாத்தியார்) என்றழைக்கப்படும் துருக்கி அரண்மனை அறிஞரிடம் அடிமையாக இவன் விற்கப்படுகிறான். மேற்கு சிந்தனையுள்ள ஒருவன், துருக்கியின் மரபிலிருந்து ஒருவன்.
இங்கு, கதை நடக்கும் காலத்தைப் பற்றி சொல்ல வேண்டியது அவசியம். இது பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக மறைமுகமாக கதைசொல்லி தெரிவிக்கிறான்.
கதையின் தொடக்கத்தில் அடிமை சிறையில் அடைக்கப்படுகிறான். ஆனால், தன்க்கு மருத்துவ அறிவு இருப்பதாய் பொய் சொல்கிறான். அவன் மருந்து கொடுப்பதால், சிறைக் கைதிகள் சிலர் குணமாகிறார்கள். மெல்ல மருத்துவனாக, போர் வீரர்களுக்கும், கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் சேவை செய்கிறான். பலர் குணமடைகிறார்கள்.
அரசருக்கும் சில வியாதிகளைக் குணப்படுத்துகிறான்;அதனால் இவன் பெயர் பிரபலமாகிறது. மெல்ல தன் மேல் நம்பிக்கை அதிகமானால் தன்னை விடுவித்துவிடுவார்கள் என நினைக்கிறான். ஆனால், இஸ்லாமுக்கு மதம் மாறினால் மட்டுமே விடுதலை கிடைக்குமென அரசர் கூறுகிறார். இவனைக் கொல்ல ஆணையிடுகிறார். ஆனாலு, நம் நாயகன் மதம் மாற மறுக்கிறான்.
மருத்துவத் திறன் மற்றும் விஞ்ஞான அறிவு இருப்பதால், இவனைக் கொல்ல அரசருக்கும் மனம் வரவில்லை. இதனாலேயே ஹோஜாவுக்கு அடிமையாக விற்றுவிடுகிறார்.
ஹோஜா துருக்கி நாட்டு மரபின் அறிஞன். ஆனால், அதே சமயம் மேற்கு உலகின் விஞ்ஞான முன்னேற்றங்களை கண்டு ஆச்சர்யப்படுபவன். இந்த அடிமை மூலம், ஒரு மேற்கு மூளை எப்படி செயல்படுகிறது, எப்படி ‘அவர்களால்’ இவ்வளவு சாதிக்க முடிகிறது என வியக்கிறான். தொடர்ந்து ’அவர்களைப்’ பற்றிக் கூறுமாறு அடிமையை துன்புறுத்துகிறான்.
பதினேழாம் நூற்றாண்டில், குறிப்பாக Renaissance எனச் சொல்லப்படும் புத்தெழுச்சி காலம் மேற்கு சிந்தனைகளும், விஞ்ஞான அணுகுமுறைகளும் உருவான காலகட்டம். தனிச்சிந்தனைகளும், மனிதனின் தனித் தத்துவங்களும் உள்நோக்கி பயணம் செய்த காலகட்டம். கிழக்கில், விஞ்ஞான முன்னேற்றமும், தனிமனித சிந்தனைகளும் தொகுக்கப்படாததால் , அவை இல்லை என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்திருக்கிறார். இது சற்று குழப்பமே. இதைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
ஆனால், மேற்கு நாடுகளை பிரமிப்புடன் நோக்குவதும், அவர்களைப் பின்பற்றுவதும் கிழக்கின் அடிப்படை நோக்கங்களாக உருவாகி வந்தது என ஓரான் பாமுக் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைப் பின்பற்றத் தொடங்கிய காலகட்டமாக பதினேழாம் நூற்றாண்டு உருவானது என்ற வாதம் துருக்கிக்கு சரியாக இருந்திருக்கலாம், இந்தியாவுக்கு அல்ல என நினைக்கிறேன். இதைப் பற்றி அவ்வளவாக தெரியாததால், குட்டையைக் குழப்பாமல் கதையைத் தொடருகிறேன்.
இந்த இரு கதாபாத்திரங்களுக்குள்ள முக்கியமான ஒற்றுமை - அவர்கள் உருவம். இருவரும் ஒரே உருவ அமைப்பில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட கண்ணாடி பிம்பம் போல என கதைசொல்லி குறிப்பிடுகிறார்.
தினமும் ஹோஜா அடிமையிடம் ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்’ என்பதைப் பற்றி எழுதச் சொல்கிறான். அவன் சின்ன வயது சம்பவங்களையும், மேற்குலக வாழ்வு முறைப் பற்றி அடிமை தினமும் குறித்து வருகிறான். அதே போல், ஹோஜாவும் துருக்கியின் வாழ்வு குறித்து எழுதுகிறான். ஒவ்வொரு நாள் இரவும், வீட்டுப் பாடம் செய்யும் சிறுவர்கள் போல், ஒருவர் எழுதியதை மற்றொருவர் படிக்கிறார்கள். இதன் மூலம் மேற்கு மூளையின் சிந்தனை, மற்றும் செயல்பாடு பற்றித் தெரிந்து கொள்ளலாம் என ஹோஜா நினைக்கிறான். கடைசி வரை இது ஒரு கனவாக அவனுக்கு இருக்கிறது.
ஊரில் ப்ளேக் நோய் பரவுகிறது. தினமும் பலர் ப்ளேகினால் இறக்கிறார்கள். இதனால் துருக்கியே சோக மனநிலையில் இருக்கிறது. இந்த இருவரையும் இது பாதிக்கிறது. பல வருடங்கள் தொடர்ந்து எழுதி வந்தாலும், ஹோஜாவால் உருப்படியாக ஒன்றும் கற்றுக்கொள்ள முடியவில்லை. கணிதமும், வானவியல் ஆராய்ச்சியும், இத்தாலிய மொழியையும் கற்றுக்கொள்கிறான். ஆனாலும், மேற்கு சிந்தனையின் அடிவேரை அவனால் நெருங்கவே முடியவில்லை. இதனால் வெறுத்துப்போன ஹோஜா, அடிமையை அடிக்கத் தொடங்குகிறான். அடிமை தன்னிடம் ஏதோ ஒன்றை மறைப்பதாக எண்ணுகிறான்.
அடிமை ஒரு யோசனை சொல்கிறான். தங்கள் மனதில் உள்ள குற்றங்களை ஒப்புக்கொள்வது மூலம், தூய்மையான எண்ணங்களை உருவாக்க முடியும். இதனால், நம் மனதும், அறிவும் எழுதாத வெத்துத் தாள் போல மாறும் என யோசனை சொல்கிறான்.
ஹோஜா முதலில் இதை ஏற்றுக்கொண்டாலும், அடிமையின் குற்றங்கள் கடவுளுக்கு எதிரானவை என சினம் கொள்கிறான். ஆனால், அடிமனதில் இஸ்லாம் மதம் தனக்குள் செல்ல முடியாத படி கட்டுப்பாடு விதிப்பதை எண்ணியே அவன் கோபம் அதிகமாகிறது. தீய செயல்களை செய்தாலும் கிருஸ்துவத்தில் பாவ மன்னிப்பு உண்டு. அதனால், அடிமை தன் பாவங்களையும், தகாத உறவுகளைப் பற்றியும் எழுதிக்கொண்டேயிருக்கிறான். ஹோஜாவால் அப்படிச் செய்ய முடியவில்லை.
ஹோஜாவின் மரபார்ந்த எண்ணங்களும், மதக் கட்டுப்பாடுகளும் ’அவனுள்’ செல்லத் தடையாக இருக்கிறது. நாளாக நாளாக மிகவும் கோபம் கொள்கிறான். சின்ன வயது தவறுகளையும், தகாத உறவுகளையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. மனதளவில் மிகுந்த சோர்வும், மேற்கு அறிவை எட்ட முடியாத கோபத்தில் ஹோஜா அடிமையை தினமும் அடிக்கிறான்.
இதை ஒரு வெற்றியாக எண்ணிய அடிமை, புது பொய்களையும், கதைகளையும் சிருஷ்டித்து தன் பாவங்களின் வீரியத்தை அதிகரித்து மகிழ்கிறான்.
ப்ளேக் நோய் ஹோஜாவுக்கு தொற்றிக்கொண்டதாக அடிமை எண்ணி பயப்படுகிறான். இதை எதிர்பார்க்காத ஹோஜாவுக்கு வெற்றி. தினமும், அடிமையை சீண்டிக்கொண்டேயிருக்கிறான். ஒரு நாள் இரவு, ஆடை களைந்த இருவரும் நிலைக்கண்ணாடி முன் நிற்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமையைக் கண்டு அடிமை பயப்படுகிறான். அடிமை தன்னிடம் பயப்படுகிறான் என்பதால் ஹோஜாவுக்கு வெற்றி கிடைக்கிறது.
ஆனால், அரசர் தன்னிடம் நாட்டைப் பற்றி விவாதிப்பதில்லை, தனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என ஹோஜா பயப்படத் துவங்குகிறான்.இருவரும் துருக்கியில் அடிமைகளே. ஹோஜா தன் மரபு வழிகளுக்கு அடிமை, தன்னால் அதிலிருந்து முற்றிலும் விலகி மேம்பட்ட நிலையை அடைய முடியாது என எண்ணுகிறான். அதே போல், பல காலங்கள் துருக்கியில் இருந்ததால் தன் காதலியும், அம்மாவும் காத்திருக்க மாட்டார்கள் என அடிமை நினைக்கிறான். மெல்ல அடிமையும் அவனும் இந்த பொதுப் புள்ளியில் சந்தித்துக்கொள்கிறார்கள்.
முடிவில் கதைசொல்லி நடத்தும் நாடகம் அபாரம். ஓரான் பாமுக்கின் திறமை கடைசி சில பக்கங்களில் வெளிப்படுகிறது.
ஒரே உருவ அமைப்பு கொண்டதால், இருவரும் இடம் மாறிவிடுகிறார்கள். ஹோஜா வெனிஸுக்கு தப்பிக்கிறான். ஹோஜாவாக அடிமை அரசவை அமைச்சராகிறான். இப்படி சுலபமாக கதையை முடித்திருக்க முடியும்.
ஆனால், ஓரான் பாமுக் மிக முக்கியமாக திருப்பத்தை கொண்டு வந்து தன்னை ஒரு மாஸ்டராக நிறுவுகிறார்.
முடிவில், இப்புத்தகம் கதைசொல்லி எழுதிய புத்தகமாகிறது. ஆனால், இருவரும் இடம் மாறிவிட்டதால் யார் எழுதிய கதை எனத் தெளிவாகத் தெரியவில்லை. அடிமை நிலையிலிருந்து ஹோஜா கூட இக்கதையை எழுதியிருக்க முடியும். என்ன இருந்தாலும் மேற்கு சிந்தனைக்கு அவர் அடிமைதானே?
கதைசொல்லியைப் போலவே ஒருவன் வெனீஸ் நகரத்தில் பெரும் செல்வந்தனாக இருப்பதாக ஒரு பயணி துருக்கி நாட்டு ஹோஜாவிடம் கூறுகிறார். அவரை வீட்டுக்குள் அழைக்கும் ஹோஜா, வெள்ளை அரண்மனை என்ற புத்தகத்தைப் படிக்கச் சொல்கிறார். மிக வயதாகிவிட்டதால், தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு நடுவே ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து கொள்கிறார்.
கதையைப் படித்த பயணிக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. தோட்டத்தில் இருக்கும் மேற்கு உலகச் செடிகளைப் பார்க்கிறான்.
இத்துடன் கதை முடிகிறது.
****
நான் படித்த வரை ஓரான் பாமுக்கின் கதைகள் அடையாளத்தை இழந்த ஒருவனின் கதையாக இருக்கிறது. எல்லா அடையாளங்கள் இடம் மாறிவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் - ஓரான் பாமுக்கின் அரசியல். மேற்குலகை பிரமிப்புடன் பார்த்து வரும் மாணவனாகவே இவர் இருந்திருக்கிறார். மத்திய மற்றும் கிழக்கு சிந்தனைகள் இவர் எழுத்தில் குறைவாகவே வெளிப்படுகின்றன.
West Meets East என்ற பாணியில் இவர் எழுதிய ஒவ்வொரு வரியையும் படிக்க முடியும். இதனாலேயே அடையாளம் இழந்த பாத்திரங்கள் பல இவர் கதைகளில் உலவும்.
ஓரான் பாமுக் மிக அற்புதமான Stylist ஆக எனக்குத் தெரிகிறார். ஆனால், இவ்ர் எழுதியதில் நான் அதிகம் ரசித்தது My Name is Red மற்றும் அபுனைவு நூலான Other Colours. எளிமையாகவும், நேரடியாகவும் எழுதக் கூடியவர்.
மேலும் விரிவாக இவற்றை மற்றொரு பதிவில் இடுகிறேன்.



நாவலை குறித்த நல்ல அறிமுகம் கிரிதரன். எனக்கு இந்த நாவல் பிடித்தே இருந்தது. ஒரு உளவியல் த்ரில்லராக படிக்க முடிந்தது. Other Colors அறிமுகத்திற்கு நன்றி. படிக்க முயற்சிக்கிறேன்.
Posted by: சித்தார்த் | 01/10/2010 at 09:03 AM
அன்புள்ள கிரிதரன்
நல்ல அறிமுகம். நான் கூட இந்தச் சிறிய நாவலை முடிக்கச் சிரமப்பட்டேன்.
நாவலின் நுணுக்கங்களை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.
நான் இந்த நாவல் குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதியிருக்கிறேன்.
http://jegadeeshkumark.blogspot.com/2011/08/blog-post_08.html
Posted by: ஜெகதீஷ் குமார் | 02/16/2012 at 02:01 PM