அடுத்த சில வாரங்களுக்கு ஜெயமோகனின் புத்தகங்களைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். ஜெயமோகன் பன்முக ரசனை கொண்டவர். அது அவர் எழுத்திலும் தெரிவதுதான் ஆச்சர்யம். பெரிய கதை சொல்லி, சாகாத கதாப்பாத்திரங்களை படைத்தவர், Wilde போல பொன்மொழிகளை உதிர்த்தவர் , Chesterton போல தத்துவத்தை நுழைத்தவர் என பொய் சொல்ல முடியாது.
ஆரம்ப நாட்களில் ஜெயமோகன் கதைகளை படித்து தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கினாலும், இப்போதெல்லாம் கை அவர் கதைகளைவிட திறனாய்வுகளையும், விமர்சனங்களை மட்டுமே எடுக்கிறது. அவர் பல சிறுகதைகள் படிக்க சுவாரசியமாக இருந்தாலும், பிற்பாடு அசைபோடும் சமாசாரங்கள் கம்மியாகவே இருக்கும்.
பொதுவாக பிரச்சார எழுத்துகளும்,புனைவு சாத்திய சாதனைகள் (சுஜாதா) மட்டுமே நம் நினைவில் நிற்கும். இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.
இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது. அவர் சிறுகதைகள் நம்முடன் உரையாடாது. சிக்கலான புனைவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் விமர்சனப் பார்வை, நாவல் வடிவ சாத்தியம், கட்டற்ற எழுத்து மிஷின் - இப்படி பலவற்றில் அவருக்கு நிகராக தமிழில் எந்த எழுத்தாளரையும் பார்க்க முடியவில்லை. கறாரான விமர்சனத் தராசை இலக்கியத்துக்கு முன் வைத்தவர் இவர். க.நா.சு , வெங்கட் சாமிநாதன் போன்றோர் கட்டமைக்கத் தவறிய இலக்கிய தராசு. இதில் உலக இலக்கிய பார்வை, தமிழில் தொல்லியல் பார்வை, பல வடிவ மோஸ்தர்களின் சிந்தனைத்தளம் - இவை அத்தனையும் கருத்தில்கொண்ட அவதானிப்புகள் இருக்கும்.
வட்டார வழக்குகளை உபயோகப்படுத்துவது இவர் பலம். அது இவரின் turf , literally. எத்தனை எதிர்வினைகள் வந்தாலும், `இலக்கிய முன்னோடிகள் வரிசை` என இவர் எழுதிய பத்து புத்தகங்களை தாண்ட இதுவரை எந்த விமர்சனப் படைப்பும் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. இவர் நாவல்கள் புரியாமல் போகலாம், புனைவெழுத்து படிக்க சில சமயம் சுவாரஸ்யமற்றதாக இருக்கலாம் (அதற்கு அந்த விஷய அடர்த்தியும், சொல்ல வரும் கருத்தின் ஆழமும் காரணமாய் இருக்கலாம்) - ஆனால் இந்த விமர்சன நூல் வரிசை ஜெயமோகனின் தனித்துவ சாதனை என்றே சொல்லமுடியும்.
கொற்றவை, விஷ்ணுபுரம் - போன்ற தொல்தமிழ் இலக்கிய பழங்கதைகளுக்கு புது வடிவமும், அர்த்தமும் கொடுத்த படைப்புகள். தனிப்பட்ட விவாதத்தை உருவாக்கினாலும், இத்தகைய வடிவ சிக்கல்களை இந்த ஆக்கங்கள் எதார்த்தமாகவே எதிர்கொள்கின்றன. சாதாரண மொழியில் கொடுத்திருந்தால், mysticism குறைந்திருக்கலாம். இவர் உருவாக்கிய மீமொழி தொல்தமிழ் இலக்கியங்களை புது அர்த்தத்துடன் பார்க்க உதவும்.
மகாபாரதம், பின் போர் விளைவுகள் - இதைப் பற்றி மட்டும் குறைந்தது பத்து சிறுகதகளும், இரு நாடகங்களும் , ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியத்தில், ராமாயணத்திற்கு இருக்கும் மரியாதை மகாபாரத்திற்குக் கிடையாது. கம்பரின் ஆளுமை, மொழி காரணமாய் இருக்கலாம். இதையும் மீறி அரசியல் காரணங்களும் உண்டு. ராமாயணத்தில் தான் ராவணன், லங்கா போன்ற தமிழ் பாத்திரங்கள் உலவுகின்றன. மகாபாரதம் என்றவுடன் கீதை ஞாபகத்துக்கு வருவதால், வேதங்களும் அதற்குண்டான தாத்பரிய அரசியலும் நினைவிற்கு வரும். இதனாலேயே மகாபாரதம் தமிழ் இலக்கியத்தில் ஒரு நிகழ்வை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
மகாபாரதத்தையே ஒரு காட்சிப் படிமக் கோணத்தில் எனக்கு முதலில் பார்க்கச் சொல்லித்தந்தது ஜெயமோகனின் கதைகளே. அவர் எழுதிய வரிகள், என் ஞாபகத்திலிருந்து -
`யோசித்துப் பாருங்கள், ஒரு குருடனுக்கு கதை சொல்லப்படுகிறது. அவன் பிள்ளைகள் களத்தில் சண்டையிடுகிறார்கள். பல மாயாஜாலங்கள் நிகழ்கின்றது. குருடனின் மனைவியும் தன் கண்களை கட்டியுள்ளாள். அவளாவது அந்த குருடனுக்கு வழி நடத்தியிருக்கலாம். தன் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லியிருக்கலாம். ஆனால், உண்மையாகவே இவ்வளவு படித்திருந்த மக்களிருந்தும் கண்ணில்லாத குருட்டுத்தன்மையும் நடக்கும் நாடகத்தை இப்படித்தான் பார்க்க வேண்டுமென நினைத்திருப்பாள் போலும்`
இதைவிட பின்நவீன பார்வைக்களம் ஒன்றும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. Rashomon படக் கதை பாணியைப் போல், அவரவர்க்கு பிடித்த கோணத்தில் ஒரு காவியத்தை சொல்ல முடியுமா? அந்த படத்தில் வந்தது ஒரு கதை மட்டுமே. ஆனால், பல புனைவுகள். ம்காபாரத்த்தில் எவ்வளவு சாத்தியம்? இப்படிப்பட்ட கதை சொல்லி அம்சத்தை ஜெயமோகனின் கட்டுரைகளில் படிக்க முடியும்.
இனி வரும் பதிவுகளில், ஜெயமோகனின் படைப்புகளைப் பற்றி, நான் படித்த அளவில், எழுதலாமென்றிருக்கிறேன்.
முதலில் முன்னர் நான் எழுதிய ஜெயமோகன் சிறுகதைகள் பற்றிய விமர்சனம் இங்கே.


Comments