சொல்வனம் இதழில் மித்திலன் எழுதிய 'விலங்குகள் அறம்' கட்டுரையைப் படித்தேன். விலங்குகளின் பழக்க வழக்கங்களை கணக்கில் கொண்டு அவற்றின் அறம் பற்றிய பல முக்கிய கேள்விகளை முன்வைத்திருக்கிறார். இக்கட்டுரையைப் படிக்கும்போது தோன்றிய அடிப்படைக் கேள்விகளை பற்றி ஓரிரு எண்ணங்களை முன்வைக்கிறேன். இவை, எவ்வித அறிவியல் பின்புலமும் இல்லாத பார்வை கோணத்திலிருந்து மட்டுமே எழுந்த கேள்விகள்.
விலங்குகளின் பழக்க வழக்கங்களிலிருந்து அவற்றின் அறத்தை முன்வைத்திருக்கும் மித்திலன், குழு பாதுகாப்பு, சக குடும்பத்தின் மீதுள்ள பற்று போன்றவற்றை மட்டும் கணக்கில் கொள்கிறாரோ என ஒரு சந்தேகம் உண்டாகிறது. மேலும், அறம் என்பதை விலங்குகளின் உணர்வோடு மட்டும் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாரோ என்றும் தோன்றுகிறது.
சரி, தத்தம் குழு பாதுகாப்புக்காக விலங்குகள் செய்யும் செயல்களை அறம் என வகுத்துக் கொள்ள முடியுமா? அவை உணர்வுகளால் மட்டும் உந்தப்பட்டவையா?
சிம்பன்சி பற்றி ஆராய்ந்துவரும் விலங்கியல் நிபுணர் ஜேன் குடால் விலங்குகளின் அறம் என நாம் சொல்வதை பரிணாம வளர்ச்சி தூண்டிய உணர்வு எனக் குறிப்பிடுகிறார். ஜேன் குடாலின் கூற்றுப்படி, உயிர்களின் அறம் என்பது உணர்வுகளோடு மட்டும் உறவு கொண்டது இல்லை. அது அறிவின் துணை கொண்டு ஒரு குழுவின் இருப்பை நிலைநாட்டும் ஒரு முறைமை என விளக்குகிறார். அதாவது குழு விருத்திக்கான செயலாக்கம் எனப் புரிந்துகொள்ளலாம்.
மிருகங்களுக்கு இருக்கும் ஐந்தறிவில், அதன் செயல் எல்லையை விஸ்தரித்துக் கொள்ள முடியாது. அவற்றின் செயல் எல்லை மிகக் குறுகியது. மனிதனது எல்லை சற்றே அதிகம். தர்க்க அறிவு மூலம் அவனது எதிர்கால தேவையை அவனால் கணிக்க முடிகிறது. அந்த எதிர்கால சாத்தியம் கொடுக்கும் அபாய அறிவிப்பு கொண்டே அவன் தன் எல்லையை விஸ்தரிக்க முற்படுகிறான் என குட்ஹால் கூறுகிறார். இது எப்படி சாத்தியம்?
ஒரு உதாரணம் - நிலத்தில் கூட்டம் பெருகி தேவையானவை அரிதாகப் போனால் என்ன செய்வது எனும் எண்ணம் பறவையைக் கண்டு வியக்கும் அடுத்த நொடியில் அவனுக்குள் முளைத்துவிடுகிறதாம. அதனால் வானத்தையும் கைபற்ற முற்படுகிறான். இது மனிதன் தன் எல்லையை விரிவாக்கிகொள்ள நினைக்கும் ஒரு நிகழ்வு. ரிச்சர்ட் அட்டன்பர்ரோ காணொளியில் , பறக்கும் மீன்கள் பற்றி காட்டுகிறார். ஒரு ஹைப்ரிட் உயிரினம் போல், அவை எதிரிகளிடமிருந்து தப்பிக்க தண்ணீரிலிருந்து பறந்து சிறிது தூரத்தில் போய் விழுகின்றன. ஆனால், அப்படி பறக்கும் போது பறவைகளுக்கு இரையாவதை தடுக்க முடியாது. இதைப் பார்க்கும்போது, பரிணாம வளர்ச்சியால் காலப்போக்கில் அந்த மீன் தன்னுடைய எல்லையை நீட்டிக் கொண்டதாகத் தோன்றுகிறது.
அதே போல் மனிதன் தன் பரிணாம வளர்ச்சியின் மூலம், குழு பாதுகாப்பு எனும் எல்லையை தாண்டுகிறான். குழு பாதுகாப்பு மட்டும் தன் இனத்தை காக்காது. அதையும் தாண்டி சக மனிதனின் உதவி தேவை என்பதால் தன் இனத்தையே காக்க வேண்டும் எனும் உணர்வே அவன் எல்லையை அதிகரித்ததுக்கான சாட்சியாகப் பார்க்கலாம்.
தன் உற்றார், நண்பன் என்பதைத் தாண்டி, அவனது இருப்பை நிலைநாட்ட, மற்ற மனிதர்களின் தேவையை உணர்கின்றான். இது அற உணர்ச்சியை மட்டுமே நம்பியிருக்கிறது எனும் கூற்றை மித்திலன் முன்வைத்திருக்கிறார். ஆனால் உணர்வையும் தாண்டி அவனது பரிணாம வளர்ச்சியும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.
தன் குழு எனும் எண்ணத்திலிருந்து, தன் இனம் எனும் சமூக பொறுப்புணர்வு இதனால் உருவாகிறதா? இதுவும் ஒரு பரிமாண வளர்ச்சியாக பார்க்கலாமா?
பரிணாம வளர்ச்சியில் மனிதனின் நியாய தாத்பரியங்கள் மாறியபடி இருப்பதாக எடுத்துக்கொள்ள முடியுமா? கீழ்வரும் சம்பவம் இவ்வளர்ச்சியின் போக்காக இருக்கலாமா?
சமீபத்தில், மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் போது நடந்த ஒரு சிறு நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது. தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், சமையல் அறையில் வேலை செய்த எல்லாரையும் சுடத் தொடங்கினர். அதில் அடிபட்ட ஒரு சிம்பந்தி குண்டு காயங்களோடு பதுங்குவதற்கு இடம் தேடினார். ஹோட்டலில் சாப்பிட வந்திருந்த மருத்துவ தம்பதிகள், தாக்குதலுக்குப் பயந்து, சமையலறை அடுப்பு இருந்த சிறு பகுதியின் கீழே பதுங்கியிருந்தனர். சிம்பந்தி அடிபட்டு ஒளிந்துகொள்ள இடம் தேடுவதைப் பார்த்துவிட்டு, அவருக்கு அடைக்கலம் கொடுத்தனர். மிகக் குறுகலான இடம். இரண்டு பேருக்கு மட்டுமே இடம் இருந்தது என்றாலும் , தங்கள் இடத்தைக் குறுக்கிக்கொண்டு, அடிபட்ட சிம்பந்திக்கு இடம் கொடுத்தனர். அதோடு மட்டுமல்லாது கிட்டத்தட்ட பதினெட்டு மணிநேரங்கள், ரத்த கசிவோடு இருந்த அவருக்கு தங்கள் கைப்பையில் இருந்தவற்றைக் கொண்டு முடிந்தளவு முதலுதவி கொடுத்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். இத்தனைக்கும், அவர்களது அறைக்கு வெளியே தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல் நடந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு அறையாகத் தேடி ஒளிந்துகொண்டிருந்த மக்களை தேடிக்கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள்.
தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், பாதிக்கப்பட்ட யாரோ ஒருவனுக்காக அத்தம்பதி உதவி செய்திருகிறார்கள். பின்னர் இம்மூவரின் பேட்டியின்போது, அச்சிம்பந்தி மிக உருக்கமாக அந்த பதினெட்டு மணிநேரங்களைப் பற்றிப் பேசினார். அதுவரை சம்பவத்தை வெறும் செய்தி போல் பார்த்து வந்த நான் அழத் தொடங்கினேன். மனிதனின் கீழ்மையும், மேன்மையையும் ஒரே சம்பவத்தின் மூலம் வெளிப்படுவது சாதாரண விஷயமாகத் தோன்றவில்லை. எத்தனை நூல்கள் தர்ம சாஸ்திரங்களைப் பற்றி எழுதினாலும், படித்தாலும் அந்த கணத்தில் தம்பதிகள் சந்தித்த தர்ம விசாரத்துக்கு ஈடு இணையே கிடையாது எனத் தோன்றியது. அந்த இடத்தில் கடவுள் நடந்து போனார் என ஒரு நாவலில் வரும் வாசகத்தின் முழு அர்த்தத்தை உணர முடிந்தது.
இது ஒரு மிகு உணர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால், தேவையான போது மட்டும் நண்பர்கள், உறவினன், தெரிந்தவன் எனும் அடையாளங்களை பயன்படுத்த நினைக்கும் இன்றைய காலகட்டத்தில், இச்சம்பவம் தரும் வியப்புக்கு எல்லையே இல்லை. ஒரு குழுவைக் காத்துக்கொள்ளாமல், முன்பின் அறிமுகமில்லாத தன் இனத்தவனையும் காக்க வேண்டும் எனும் உணர்வு, மனிதனுக்கு மட்டுமே இருக்கும் அற உணர்வாகத் தோன்றுகிறது.
அறம் உருமாறுவதற்கு உணர்ச்சி மட்டுமல்லாது, மனிதனின் பரிமாண வளர்ச்சியும் தேவை என்பதுக்கு சமூக பழக்க வழக்கங்களிலும் உதாரணம் தேடலாம்.
உதாரணம் - 'சதி' வழக்கம். வரதட்சனை மற்றும் சதிக்கு எதிராக ஒரே நேரத்தில், பல இயக்கங்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், சதி மட்டுமே காணாமல் போனது. மனிதனுக்கு தேவையில்லாமல் போனது. அரக்கத்தனம் எனப் புரிந்ததால் இருக்கலாம். ஆனால் வரதட்சணைக் கொடுமை இன்னும் இருப்பதற்கு, அதன் சாதக/பாதகங்கள் அளவு கருப்பு/வெள்ளை போல் தெளிவில்லாமல் பழுப்பு நிறத்தில் இருப்பதுதான் காரணமா? சதிக்கு எதிராகத் தெளிவாக தீர்ப்பை வழங்கிய நம் சமூகம், வரதட்சணையை பிடித்துத் தொங்குவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? கட்டாய சதி காணாமல் போனதற்கு நம் அற உணர்வு காரணமாக இருந்திருக்கலாம்.
அடுத்த கேள்வி : விலங்குகளின் உணர்வுகளைப் பற்றி தொகுத்துக் கூறும்போது, அவற்றை மனித உணர்வுகளின் நீட்சியாக மட்டுமே பார்த்து வருகிறோம். நம்மைப் போலவே உண்டு, சுகித்து, சண்டையிட்டு வாழ்வதினால் அவற்றின் உணர்வுகளும் நம்மைப் போலவே இருக்கும் என யோசிக்க முடியுமா?
Birds of India - A literary anthology
எனும் புத்தகம் இப்படித்தான் தொடங்குகிறது
'Deliberate attempts to portray the life of nature in prose face a huge philosophical barrier.here after all, is language, one of the most exquisite human inventions, resonant with the structures of human consiousness,being used to describe a world about whose inner states and meanings we can know virually nothing.It forces us to relay on external clues, on empathy and most notoriously on anthromorphism, the assumption that nature shares human motives and feelings. Yet,attempts to sidestep this by, for example, denying any inner lives to speceis other than our own, or attmpting to contain their bvehaviour within apparently objective description (based on our defitions) can also suffer from a kindof backdoor human-centerdness.'
இந்த பறவையியலாளர் சொல்வது போல், விலங்குகளின் உணர்வுகளை அளக்க சரியான வழிமுறை நமக்கு இன்னும் அமையவில்லை என்பது ஒரு உண்மையாக இருக்கலாமோ? பார்வை இல்லாதோர் யானையை விவரிப்பது போல் நாமும் விலங்குகளின் உணர்வுகளுக்கு நமக்கு தோன்றியபடி அர்த்தம் கொடுக்கிறோமா?
பல வார்த்தைகளில் நிரப்ப முயன்றாலும் ,ஊமை கண்ட கனவு போல் விலங்குகளின் எண்ண ஓட்டம் விளக்க முடியாததாகவே இருக்கிறது. ஜேன் குடால் பற்றி ஒரு கார்ட்டூன் மிகப் பிரபலம். மிகத்தீவிரமாக மோட்டு வளையத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சிம்பன்சியைப் பார்த்து அதன் தாய் சிம்பன்சி 'என்ன? இன்னும் ஜேன் குடாலை ஆராய்ந்து முடிக்கவில்லையா? இன்னும் எவ்வளவு நபர்களைத் தான் உனக்கு சோதனை செய்ய வேண்டும்?' எனக் கேட்பது போல் இருந்த கேலி சித்திரம் மிகப் பிரபலம்.
விலங்குகளைப் புரிந்து கொள்ள நாம் வகுத்துள்ள அறிவியல் வழிமுறைகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும்? நம்மைப் போலவே செயல்கள் செய்யும் போனோபோ, சிம்பன்சி போன்றவற்றைப் பார்த்து, அவை மனிதன் போலவே சிந்திப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். அவை என்ன மனதில் நினைத்துகொண்டிருக்கிறதோ? எலி சோதனை என நாம் செய்வது உண்மையில் யாருக்கான சோதனை?



Recent Comments