நான்காம் நாளான இன்று நவீன பிரெஞ்சு இசையமைப்பாளரான பிரான்ஸிஸ் புலென்க் (1899-1963)அமைத்த இரு இசைப்பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இது ஹால்பர்ன் பகுதியில் இருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்றது.
டடாயிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி.
அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார். அதுவரை மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் டோனல் வகை இசையை மட்டுமே வழங்கி வந்தது. அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் அமைந்த சோபினின் A Major, செயிண்ட் சான்ஸின் G Minor போன்றவை ஒரு குறிப்பிட்ட கார்டை ஆதார ஸ்ருதி என வகைப்படுத்தி வைத்திருக்கும் இசை வடிவமாகும். அதாவது சோபினின் ட்ரியோ A Major கார்டை மையமாக வைத்திருக்கும். அதைச் சுற்றியே ஸ்வர அலங்காரங்களும், ஹார்மொனி துணுக்குகளும் அமைந்திருக்கும்.
அடோனல் எனும் இசை வகையில் ஆதார ஸ்ருதி என எதுவும் முக்கியத்துவம் பெறாது. எல்லா ஸ்வரங்களும் முக்கியமானவையே. மையம் என ஒன்றும் இல்லாமல் விளிம்பும் மையமும் மாறி மாறி அமைந்து ஒற்றை கருத்தைத் தகர்ப்பது பின்நவீனத்துவம் என்பது போல் இசையில் அடோனல் தான் பின்நவீனத்துவ பாணி. இதனால் எளிமையான வாசிப்பு உடைக்கப்பட்டது. அதுகாறும் வந்த மையம் முதல் வாத இசையை அடோனல் நிராகரித்தது. பொதுமக்களிடையே மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தைக் கொண்டு சேர்க்க முடியவில்லை என்ப்தால் டோனல் வகை இசையை ஆதரிக்கக் கூடாது எனப் பிரகடனப்படுத்தியது. அதற்கு மாற்றாக அடோனல் உருவானது. அதாவது மையக் கருத்தாக பெளராணிய கருத்துகளை கலை முன்வைக்கக்கூடாது, கலையின் தரிசனத்தை அவரவர்க்கு புரிந்தமாதிரி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதம். கலை கலைக்காக - இறையாண்மை, அதிகாரம், அழகியல் என எதுவும் கலையின் அடிநாதமாக இருக்கக்கூடாது.
ஆனால், மக்கள் ரசனைக்கும் இசைக்கும் இருந்த இடைவெளியைக் குறைக்கப் போகிறோம் என உருவாக்கிய இசையே மக்களை மேலும் அதிக தூரம் விலக்கியது தான் வரலாற்றின் முரண். கலை, இலக்கியம், விமர்சனம், தத்துவம் என இன்றுவரை இது தொடர்ந்து நிரூபணமாகிறது. நவீனத்துக்கு எதிர்ப்பாக உருவான பின்நவீனத்துவம் மக்கள் கலையிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்டது.
அக்காலகட்டத்தில் பல முக்கிய இசை நிகழ்வுகளிலெல்லாம் இக்கூட்டம் நுழைந்து கலாட்டா செய்யும். ஸ்ட்ராவின்ஸ்கியின் The Rite of Spring, Parade எனும் இசை நாடகம் போன்றவை இப்படிப்பட்ட கலாட்டக்களையும் கூச்சல்களையும் கண்டன. The Rite of Spring முதல் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே செயிண்ட் சான்ஸ் வெளியேறினாராம். சின்ன சத்தம் கூடப் போடாமல், தும்மல் வந்தாலும் அடக்கிவைத்திருந்த கும்பலுக்கு திடீரென என்ன ஆனது? அதற்கானக் காரணங்களை இன்றும் ஆராய்ந்து வருகின்றனர் - பொதுவாக மக்கள் ரசனையில் மாற்றம் வரத்தொடங்கியது ஒரு முக்கியமானக் காரணம். அதற்குப் பிரெஞ்சு புரட்சி முதல், ரஷ்யப் புரட்சி வரை பல சமூக தளங்களில் வரலாற்றாசிரியர்கள் காரணம் தேடுவார்கள்.
இசை விமர்சகர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘Music for every day use'. அதாவது அன்றாட நிகழ்வுகளையும், அடித்தட்டு மக்களின் வாழ்வையும் பிரதிபலிக்கும் கலை மட்டுமே எங்களுக்குத் தேவை எனும் கூக்குரல். வாக்னர், மாஹ்லர் போன்ற இசை மேதைகள் நாட்டின் தொன்மக் கதைகளையும், பழம் புராணங்களையும், நார்னியா போன்ற மிகுகற்பனை உலகங்களையும் இசைக்குள் கொண்டுவந்ததை இவர்கள் எதிர்த்தனர். பிரான்ஸிஸ் புலென்கைப் பொருத்தவரை இப்படிப்பட்ட மிகுகற்பனை உலகங்களை சிருஷ்டிக்கும் இவர்கள் அனைவரும் போலிகள். கலையின் அடிப்படையையே வாக்னர் போன்றவர்கள் குலைத்துவிட்டார்கள் என புலென்க் வாதிட்டார்.
இங்கிருந்துதான் நாம் புலென்கின் இசையை புரிந்துகொள்ள முடியும்.
முகமூடி அணிந்தவர்களது நிகழ்ச்சி (Le Bal Masque)
பாரிஸின் ஆன்மா உறங்கிவிட்டது. அரக்கன் சோம்பல் முறித்து எழுந்திருக்கும் நள்ளிரவு. மதுவிடுதிகளும், சுகப் பெட்டகப் பெண்களும், அவர்களை தேடும் தங்களைத் தொலைத்த ஆண்களும், சுயத்தைத் தேடும் தத்துவ மேதைகளும் மட்டுமே முழித்திருக்கும் இரவு. இரவு வாழ்க்கைக்குப் பெயர் போன பிகால் பகுதி.
ஒரு கபே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இடமில்லாமல் ஆட்கள் பிதுங்கியபடி உள்ளும் புறமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள், காலி மதுக்கிண்ணங்களும், உரத்த குரல் வாக்குவாதங்களும் உச்ச ஸ்தாயியில் நடக்கின்றன.
வழியும் எச்சிலுடன், வாயில் குழறலும், வயிற்றில் பல நாட்கள் பசியும், நெஞ்சில் புறக்கணிப்பின் வேதனையும் சுமந்தபடி மனம் நிறைய கவித்துவ புத்துயிர்ப்போடு ஒரு கவிஞன் உள் நுழைகிறான்.
சமூகத்தின் முகத்திரையை கிழிக்கும் கவிதைகளை அங்கதத்துடன் பாடத் துவங்குகிறான். மெல்ல அவனைச் சுற்றி இசைக்கலைஞர்கள் கூடுகிறார்கள். அவனை ஊக்குவிக்கிறார்கள். இலவசமாக இரண்டு கோப்பை மது கூட அவனுக்குக் கிடைக்கிறது.
அவனது மனதில் இருக்கும் சுயபச்சாதாப விரக்தியை, தன் சமூகத்தின் போலி முகத்தினை கிண்டல் செய்வதன் மூலம் தீவிரமான விஷயத்தை விளையாட்டாக சொல்லத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட கிங் லியரின் கோமாளி போல, சார்லி சாப்ளின் போல, அவனது சேஷ்டைகளும் குரலின் ஏற்ற இறக்கங்களும் அங்குள்ளவர்களைச் சிரிக்க வைக்கிறது.
கண் தெரியாத கிழவி வரையும் சித்திரம், ஒழுகும் வீட்டை அடைக்கும் முடவன் என அவனது கவிதைகள் அவலங்களைக் கூடத் தத்துவச் சிரிப்போடு சொல்லிச் செல்கிறது. அவனது வார்த்தைகளைத் தொடரும் இசையும் சிரிப்பும், கேலியுமாக சம்பந்தமிலாத அபத்த இசைத் துணுக்காக உருவாகிறது. எதிலும் ஒரு கோர்வை இல்லை. வேகமான தாளத்துடன் ஆக்ரோஷமான உணர்வு வெளிப்படும்போது வாழைப்பழத்தில் வழுக்கி விழும் முதிரா சிரிப்பொலிகள் கேட்கின்றன. திடீர் திடீரென மிலிட்டரி தாள இசை கேட்கிறது, மெல்ல கிண்டல் ஒலிகளாக அவை மாறுகின்றன. ஒழுங்கிலாத இசை வெள்ளம். இதையெல்லாம் தாண்டி, அந்த நள்ளிரவின் கூத்தை மேலிருந்து பார்க்கும் ஒருவன் ஒரு ஒழுங்கைக் கண்டடைவான். இவ்வளவு பல்கூசும் சத்தங்களிலும் ஒரு ஒழுங்கு குடிகொண்டுள்ளது. கலையின் அபத்தத்தையும் மேன்மையாக்கி அதையும் அபத்த தத்துவமாகப் பார்க்கும் ஒரு நோக்கு கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் அமைந்துவிடுகிறது.
அந்த கவிஞரின் பெயர் மாக்ஸ் ஜேகப்.
கீழுள்ள இசையைக் கேட்டுப் பாருங்கள். எத்தனைவிதமான இசை அலங்காரங்களும், குரல்களும் இணைகின்றன என்பதைக் கொண்டு கபேயின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது பாரிஸில் இருக்கும் ஒரு கபேயின் நிலைமை அல்ல. இது போலி உணர்வுகளை எழுப்பும் ஆடம்பர கற்பனை இசையின் முகத்திரையை கிழிக்க வந்திருக்கும் முகமூடி நாடகம்.
இதைக் கண்டு ரசித்துவிட்டு மீண்டும் அதே குட்டையில் விழுபவர்கள் தான் முகத்திரை அணிந்துள்ளார்கள். உண்மையைக் காணாமல் இருக்க முகத்திரை. the joke is on us.
புலென்குக்கு மற்றொரு முகமும் உள்ளது. பிகாலைப் போல பாரீஸின் Notre-Dame தேவாலயம் அவரது பிற்காலத்திய இறை நம்பிக்கைக்குப் புகலிடமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் பழைய பாணி தேவாலய இசைக்கு புது வடிவங்களும் கொடுத்தார். அடோனல் ஸ்வரங்களை அப்போதும் கைவிடவில்லை. சில சமயம் கேட்க கிறீச்சென இருந்தாலும், தேவாலய் இசையில் புது பாணியைப் புகுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உள்ளதென இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஐரோப்பிய இசையில் இருபதாம் நூற்றாண்டு நுழைந்த ஜாஸ் வகையின் அம்சங்களும் நவீன மேற்கத்திய இசையில் இணைந்துகொண்டு சாத்தியங்களை விரிவுபடுத்தியது.
இன்று அவரது Suite Francais எனும் இசையும் நிகழ்த்திக்காட்டப்பட்டது. சிட்டி ஆப் லண்டன் சிம்போனியா எனும் குழு இதை இசைத்துக்காட்டியது. ஹார்ப்ஸிகார்ட் எனும் தந்திப்பியானோ வகை வாத்தியக்கருவியைக் கொண்டு தேவாலய இசையில் பிரதானமாக இருக்கும் ஆர்கன் சத்தங்களைக் கொண்டுவந்தனர். இசை மிக எளிமையாகத் தெளிவாக இருப்பதை உணர முடியும். ஏனென்றால் டோனல் வகை இசையாதலால் அடிப்படை ஸ்ருதிக்கு இசை திரும்பிவும். மேலும் ஒத்துவராத கார்டுகளை இணைத்து வரிசை குலைந்த ஸ்வரஸ்தானங்களைப் பிரயோகப்படுத்தவில்லை. அதனால், பதினேழாம் நூற்றாண்டு பாக்கின் இசை போலத் தோன்றும். அதற்காகவே இன்றைய நிகழ்ச்சியில் பாக்கின் French Suite 5 in G Major துணுக்கையும் இசைத்துக் காட்டினர். இதன் மூலம் முன்னூறு ஆண்டுகள் இடைவெளியில் டோனல் இசை எவ்வகை புதுமைகளைச் சந்தித்துள்ளது என நிகழ்த்தினர்.
கீழுள்ள காணோளியில் இதைப் பார்க்கலாம்.
எனது அபிமான பியானோ கலைஞர் க்ளென் கோல்ட் இசைக்கும் பாக்கின் பிரெஞ்சு இசைக்கதம்பம் ஐந்து.
பாக்கின் பிரெஞ்சு நடன இசையைக் கேட்கும்போது, குறிப்பாக கீழுள்ள இந்த இடம் இளையராஜா அமைத்த புன்னகை மன்னன் தீமின் பியானோ போலத் தோன்றியது.பியானோ விரிவாக்கமும் கார்ட்ஸும் கிட்டத்தட்ட அதே சாயலில் இருந்தன. G Major ஸ்வரக்கூட்டணியின் லீலையாக இருக்கலாம். பாக்கின் தீவிர ரசிகரான ராஜா அவரது பாணி இசையை இது போல பல இடங்களிலும் பிரயோகப்படுத்தியுள்ளார். பாக்கின் தாக்க்கத்தை How to Name it ஆல்பத்தில் கூட வெளிப்படுத்தியுள்ளார். பல நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தாலும் இரண்டு மாஸ்டர்கள் இப்படி பேசிக்கொள்வது ரசிகர்களான நமக்குத் தானே கொண்டாட்டம்.
இன்றைய நிகழ்ச்சியை நான் மிகவும் ரசித்தேன். முக்கியமானக் காரணம் புலென்க்கின் இசை. அவரது இசையையும் பதினேழாம் நூற்றாண்டு இசையையும் அருகருகே வைத்துக் கேட்க முடிந்தது மிக இனிமையான அனுபவம். நவீன இசையைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் காணக்கிடைக்காத பலதரப்பட்ட இசை வடிங்களைக் கேட்க முடிகிறது. கேட்கக் கேட்க இசை எனும் கடலின் ஆழமும் அகலமும் ஆச்சர்யப்படுத்துகிறது. இத்தனை குறைவான ஸவரங்களைக் கொண்டு எத்தனை நுண்ணிய உணர்வு அலைகளை உருவாக்க முடிகிறது! ஒவ்வொரு நூற்றாண்டிலும் எத்தனை வகையான இசை வடிவங்களும், நுணுக்கங்களும் உருவாகின்றன என நினைக்க நினைக்க அளவிடமுடியாத வைரச் சுரங்கமே நம்முன் குவிந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.



Recent Comments