சொல்வனம் இதழில் 'மித்திலன்' நித்ய கன்னி நாவலை அறம் பற்றிய விசாரணையாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை கச்சிதமாக முன்வைத்துள்ளார்.
அக்காலகட்டச் சமூகப் போக்கையும் இன்றைய விழுமியங்களையும் ஒப்பிட்டால் நித்ய கன்னி மேலும் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறாள் எனப்படுகிறது. இதற்குத் துணையாக ராஜ் கெளதமன் முன்வைத்த தமிழ் சமூக அறம் குறித்த பார்வையை போட்டுப்பார்க்கலாம் ('தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்').
நித்ய கன்னி, புராண மகாபாரத மாதவிக் கதையின் மறு உருவாக்கம். இந்த நூற்றாண்டுக் கண்ணோடு முரணியக்க முறையில் அறத்தையும், அழகியல் நோக்கையும் விவாதப் பொருளாக உட்படுத்துகிறார் எம்.வி.வெங்கட்ராம்.
மகாபாரத மாதவி காலகட்டம் இனக்குழு சமூகத்திலிருந்து, உடைமைச் சமூகமாக (அதிகாரம், மன்னராட்சி) மாறிய காலகட்டம்.
இனக்குழு சமூகத்தில் இருந்த அறம் எப்படிப்பட்டது - அதிகாரத்தை நோக்கிக் குவியாத, உணவு விளைச்சல் செய்யாத காலம். பாணர்கள், விறலிகள் போன்றவர்கள் ஒன்றாகப் பகிர்ந்து உணவை உண்ட காலம். அதாவது உணவு சேகரிப்பு இருந்தாலும் உணவு சேமிப்பு பற்றித் தெரியாத காலகட்டம். அன்றைய அற விழுமியங்கள் வேறு - அங்கு ஈதல் என ஒன்று கிடையாது, காமம் காதலாக மேம்படுத்தப்படவில்லை , அதிகாரம் வழி கட்டுப்பாடு இல்லை. சுருக்கமாக, ஜாதி, பால், உடைமை கொடுக்கும் வசதி போன்ற வித்தியாசங்கள் இல்லாத சமூகம்.
உடைமைச் சமூகத்தில் உணவு விளைச்சளோடு, உணவு பராமரிப்பும் உண்டானது. உணவைப் பகிர்வது நல்லது செய்வது எனும் அறம் உண்டானது. ஈதல் பெருமைக்குரிய அம்சமாக இருந்தது. பகிர்ந்து உண்பதோடு , உணவைக் கொடுத்தால் உணவு பெருகும் என்ற லாப நம்பிக்கைகள் பிறந்த காலகட்டம். அரசாட்சி உண்டாகி, அதிகாரக் குவிமையங்கள் உருவானது. அதனால் ஒருவித நேர்வரிசை (hierarchy) சமூகத்தில் உண்டானது. அதிகார குவிமையங்கள் ஆண் சார்ந்தவையானது. பால் சமத்துவம் குலைந்தது. கற்பு நெறி உண்டானது. காமம் உடைமையாகப் பார்க்கப்பட்டு காதலாக உருவமெடுத்தது. பாணர்கள் புலவர்களாக மாறினர். உணவுக்காக, செல்வத்துக்காகப் பாடல்கள் புனையப்பட்டன. இரத்தல் இழிந்தது, ஈயேன் எனச் சொல்லுதல் அதனினும் இழிந்தது என அறக் கோட்பாடுகள் உண்டானது.
இவற்றின் தொடர்சியாக தர்மம் செய்தால் குடும்பம் தழைக்கும், விளைச்சம் அதிகமாகும் என வைதீகக் கோட்பாடுகள் உருவாயின. மதக் கோட்பாடுகளாக, தண்டனைக்குரியவையாக அற விழுமியங்கள் வைதீகப் பழக்கங்களாக மாறின (தீயினால் சுட்ட புண், நா காக்க போன்ற நாக்கு சார்ந்த புலன் கட்டுப்பாட்டுகள் தோன்றியது). இந்த காலட்டத்தில் வைதீக எதிர்ப்பாக, சமண மதம் அறக்கோட்பாடுகளை முன்னிறுத்தியது. இந்தப் பின்புலத்தில் நாம் மாதவி கதையைப் படிக்கலாம்.
இப்போது கட்டுரை சொல்லும் நாவலின் மூன்று பாத்திரங்களை அவரவர்விழுமியங்களுக்கேற்ப எம்.வி.வி உருவாக்கியுள்ளதைப் பார்க்கலாம்.
இந்த சமூக மாற்றமடையும் காலகட்டத்தில் மூவகை மக்கள் இருந்திருக்கிறார்கள்.
வைதீக விழுமியங்கள் உருவாக்கியவை (ஆசார சீலர்கள்), இனக்குழு விழுமியங்கள் உருவாக்கியவை (காமுகர்கள் - காதல் அறியாதவர்களாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அதாவது காமம் காதலாக மாறாத சமூகம்) எனப் பிரிக்கலாம். மூன்றாவது எழில் சீலர்கள் (aesthetician) - இதற்கு இருபதாம் நூற்றாண்டு உசீதரன் தான் பிரதிநதி.
இப்போது இவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள் தான் கதை. இன்றைய நோக்கில் எழில் ரசிகரான உசீதரன், மற்றக் காதாபாத்திரங்களின் சமூக உலகை எப்படிப் பார்க்கிறார் என்பதே எம்.வி.வியின் நோக்கம்.
நாவலின் அடி நாதமாக கட்டுரையாசிரியர் சொல்வது -
"பெண்மையை ஆக்கத்தின் உருவகமாகக் கொண்டால், படைப்பின் இருமுனையும் கூர் கொண்ட தன்மையை அறியாதவர்களின் அறிவீனத்தைக் கண்ட கசப்பு;, அதை முரட்டுத்தனமாகக் கையாள்வோர் தற்சார்பால் கட்டமைத்த அறக்கொள்கைகளின் மேல் சினம் - இந்த கசப்பும் சினமும் நித்ய கன்னியின் அடிநாதமாக இருக்கின்றன."
ஆனால்,சமூக மாற்றங்களைக் கணக்கில் கொண்டால் நித்ய கன்னி எதைச் சொல்வதாக நாம் புரிந்துகொள்வது?
இனக்குழு மக்களும் பெண்மையைப் புரிந்துகொள்ளவில்லை (ஏனென்றால் அவர்களுக்கு காதல் இல்லை), ஆசார சீலர்களும் புரிந்துகொள்ளவில்லை (ஏனென்றால் அது ஆதிக்கத்தின் மறு உரு). இவர்கள் இருவரைப் பொறுத்தவரை பெண்கள் உடைமைகள் மட்டுமே. இந்த இரு முனையும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், . அதை உணர்வுபூர்வமாக கையாலத்தெரியாததால், அவர்களைப் பொறுத்தவரை பெண்மை என்பது கைக்கு சிக்காத, புரிந்துகொள்ள முடியாத விசித்திரமாக இருக்கிறது(கானல் நீர்) - அதனால் அப்பெண்கள் இந்த இரு சமூகத்துக்கும் நித்தியகன்னிகள் தான். உடம்பைத் தீண்டினாலும், பெண்மையைத் தீண்ட முடியாததால் அவர்கள் நித்தியகன்னிகள்.
"மனுதர்மமே முடிவான தர்மம் அல்ல. தர்மம் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி வளைந்து கொடுக்க வேண்டும். மனிதனுக்காக, மனிதன் உயர்வு பெறுவதற்காகத்தான் தர்மம்; தர்மத்திற்காக மனிதன் அல்ல..."
உசீதரன் சொல்லும் இந்த வார்த்தைகள் வழி அவன் இருபதாம் நூற்றாண்டு மனிதன் எனக் கட்டாயமாகச் சொல்லிவிடலாம். தர்மம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பது உண்மைதான் என்றாலும், மனிதன் உயர்வு பெறத்தான் தர்மம் எனும் வாக்கியம் பழைய சமூகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. உசீதரன் கூறுவது ஒரு பெரும் கனவு மட்டுமே. அது இனக்குழு, உடைமை சமூகம் என்ற எதிலும் நடக்காது. அதனால், உசீதரன் முன்வைப்பது இந்த நூற்றாண்டுக்கான கனவு. எம்.வி.வியின் கனவு.
உசீதரன் சொல்லும் அறம் மனிதனை உய்விக்க வந்த அறமல்லவா? உடமைச் சமூகத்தில் பலிகடா ஆகாத மனிதக் குழு சாத்தியமில்லை. அந்தப் பலியை குறைவாக்கும் செயலைத்தான் ஒவ்வொரு சமூகமும் அந்தந்த காலகட்டத்தில் செய்ய முற்படுகிறது. அதனால் முழுமையாக மனிதனை உய்விப்பது சாத்தியமேயில்லை. அதனால் தான் எம்.வி.வி உசீதரனின் மரணத்தைச் சொல்கிறார் போலும்?
எம்.வி.வி முன்வைக்கும் பூரண அறமும் ஒரு மிகுகனவு தான். அது சமூகத்தில் ஆழ் மனதின் (கூட்டு நனவிலி) கனவு மட்டுமே. சமத்துவ சமூகம் போல. நூற்றாண்டு காலமாக மனிதன் அதை நோக்கி தான் நகர்ந்துகொண்டிருக்கிறான். ஏனோ, பிடிபடாத கனவாகவே இருக்கிறது, பெண்மையின் ஆழத்தைப் போல.
உசீதரன் முன்வைக்கும் ஆண் அறம், வைதீக உடைமைச் சமூக விழுமியங்களால் புனையப்பட்டது. அது ஆண் மைய சமூகமாக இருந்ததால் வந்த விளைவு. கற்பு, ஒழுக்கம், அதிகாரம், நேர்வரிசை (hierarchy ) என்பது இந்த அமைப்பின் பண்புகள் ஆண் அறம் எனும் சிக்கல் இனக்குழு சமூகத்தில் இல்லை. பொதுமையான அறம் மட்டுமே இருந்தது. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும் இன்றையச் சமூகத்தில் பகிர்ந்து பூரணமாகும் அற விழுமியங்களே சாத்தியம். அதற்கு உசீதரன் போல, பிற மனங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது சரியானத் தொடக்கமாக இருக்கலாம்.
ஒருவிதத்தில் சமூகத்தில் அறத்தின் பயணத்தை எம்.வி.வி உருவகப்படுத்தியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. கைக்கு சிக்காத முப்பரிமாணப் படப் பொருட்கள் போல, தொடமுடியாத அறச் சமூகத்தைத் தான் நித்தியகன்னி என எம்.வி.வி உருவகப்படுத்துகிராரோ? இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நூற்றாண்டு காலத் தமிழ் சமூகத்தின் மேல் வைக்கப்படும் தீவிர விமர்சனமாக நாவல் எனக்குத் தெரிகிறது. ஆதி காலச் சமூக ஆர்கிடைப்புகளிலிருந்து, தற்கால அணுகுண்டு மனிதன் வரை எம்.வி.வி அலசியிருக்கிறார் போலத்தோன்றுகிறது.



Recent Comments