கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு? முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான்.
முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன்.
சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை சார்ந்த பாதிப்புகள் கொஞ்சமும் இல்லை. ஒரு ஹோட்டலில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதையே எனக்கொண்டாலும், காலனிய பாதிப்பைக் கொண்டு கல்கத்தாவைக் கற்பனை செய்யும் நகரத்தின் அடிமட்ட ஊழியர் போஸ் போன்றவர்களின் விவரணைகள் பெரிதளவு இதில் காணப்படவில்லை. இத்தனைக்கும், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலேய பாரிஸ்டர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிடுவதால் போஸ் போன்றவர்கள் வேலையில்லாத பட்டதாரிகளாக கைவிடப்படுகிறார்கள். ஆசிரியர் சொல்ல முற்பட்டது ஒரு நகரின் கதை;அதை பாதித்த ஆங்கிலேயரின் வருகை, நகரின் சீரழிந்த ஆத்மாவினுடைய ஓலம். இந்து-இஸ்லாமியப் பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்த நாட்களில் நடக்கும் கதையில் அவற்றின் பாதிப்பு கொஞ்சம் கூட இல்லாதது ஆச்சர்யப்படுத்துகிறது.
ஷங்கரின் எழுத்துகளில் கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கம் நிறைய தெரிகிறது. அதுவும் ஒரு இந்தியனாக இல்லாமல் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கல்கத்தா மீதிருக்கும் காதலாக. ஆங்கிலேய வாழ்வு முறையை பிரதியெடுக்க முனையும் மேல் தட்டு இந்திய வர்க்கங்கள் பற்றிய எள்ளல், ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை, நடுத்தர வங்காளியின் 'பண்டைய இந்திய' கனவு ('அக்னி நதி' போல) என பல திசைகளில் விரிந்து வளரத் தகுதியான நாவலாக இது இருந்தாலும், மேற்சொன்ன எந்தொரு வாழ்வையும் நேர்மையோடு ஆசிரியர் அணுகவில்லை எனத் தோன்றுகிறது. செளரிங்கி ஹோட்டலை விட்டு வெளியே அவரது பார்வை செல்லவில்லை என்பது பெரும் குறை.
இதே ஹோட்டல் லண்டனிலோ, அமெரிக்காவிலோ இருந்தால் இப்படி ஒரு உள்முகமான பார்வையை ஆசிரியர் வழங்கியிருப்பாரா என்பது வாதத்துக்கு உரியது. அப்படி வழங்கியிருந்தாலும் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், கருவின் அடியோட்டத்தை எந்தளவு விவரித்திருக்க முடியும் என்பதும் கேள்விக்குரியதே. அதுவும் ஒரு நகரத்தின் வரலாறு எனும் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் ஷங்கர் அணுகியுள்ளவிதம் குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது.
ஆர்தர் ஹைலி எழுதிய ஹோட்டல் நாவலுடன் இதை பலர் ஒப்பிடுகிறார்கள். ஹோட்டல் எழுதப்பட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னரே செளரிங்கி வெளியாகிவிட்டது என இணையத்தில் ஒருவர் கூறியிருக்கிறார். இது சரியான ஒப்பீடாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு ஹோட்டலின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய மிக விரிவாக நுணுக்கமானப் பார்வையை ஆர்தர் ஹைலி வழங்கியிருப்பார். ஹோட்டல் என்பது ஒரு பெரிய இயக்கம். அதுவும் ஐந்து நட்சத்திரங்களைத் தாங்கி இருப்பவை பல ராட்சச கைகளைக் கொண்டு இயங்குபவை. அத்தகைய ஒவ்வொரு இயந்திரத்தின் அமைப்பையும், இயக்கத்தையும் ஆர்தர் ஹைலி மிக விரிவாக எழுதியிருப்பார். அதாவது, அந்த நாவலைக் கொண்டு ஒரு ஹோட்டலின் சகல இயக்கங்களையும் புரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, 'ஹோட்டல்' நாவலில் குப்பைகளின் சுழற்சி பற்றி பல பக்கங்களில் விஸ்தாரமாக வரும். வெறும் தகவலாக இல்லாமல் கதையில் மிக முக்கியமான குறிப்பு அந்த குப்பைகளில் தான் அகப்படும் என்பதால் கதைக்கு கதையும் ஆச்சு, உண்மையான தரவுகளைத் தெரிந்துகொண்டதாகவும் ஆச்சு. ஆசிரியரின் குறிக்கோளும் இதைச் சுற்றித் தான் இருக்கும். அதனால், நம் புரிதலில் 'இலக்கியமாக' இல்லாமல் போனாலும், படிப்பதற்கு 'ஹோட்டல்' மிக விறுவிறுப்பான நாவல். பல நல்ல நாவல்களைப் போல, நடைமுறை உண்மைக்கு நெருக்கமானத் தகவல்களைக் கொண்டு புனையப்பட்டதால் கூடுதல் ஏற்றம் பெறுகிறது.
ஒரு ஹோட்டலின் கண்ணுக்குத் தெரியாத இயக்கங்கள் பற்றி செளரிங்கியில் பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை. ஒரு நாவலாக, குறிப்பாக ஹோட்டல் பற்றிய நாவலாக இது மிகப் பெரிய குறை. அதே போல, இந்திய காலனிய வரலாற்றில் மிக முக்கியமான நகரமாக அமைந்திருந்த கல்கத்தாவின் கதையையும் இது விரிவாக முன்வைக்கவில்லை. பெரும் நாவலாக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நாவலுக்குத் தேவையான தத்துவ பார்வைகளோ, தகவல்களோ, வரலாற்று பின்புலமோ இல்லை. செவ்விலக்கிய நாவல் மரபின் உச்சாணிக்கொம்பாகத் திகழும் இந்திய இலக்கிய வரிசையில் (அக்னி நதி, பாவா) இந்த நாவல் அமையாமல் போவதற்கு இவை முக்கியமான காரணங்கள்.



Recent Comments