விட்டுப்போன வார்த்தைகள் - சொல்வனம் ராகசாகா விமர்சனத்திற்காக எழுதப்பட்டதில் ஆசிரியரின் கத்திரியில் கீழே விழுந்த சில வார்த்தைகள் -
சங்கம இசை என்ற ஃபூஷன் இசை வடிவங்களை இசைக் கலைஞர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகவே முயன்று வருகின்றனர். இருவிதமான இசை மரபுகளை இணைக்க பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில் வடிவேலுப் பிள்ளை முதல் மதுரை மணி அய்யரின் English Note போன்ற வால்ட்ஸ்(Waltz)) கலப்பு முயற்சிகளின் வழியே, இன்று வரை முயன்று வருவது ஆச்சர்யமானது. எந்த ஒரு கலாச்சாரத்தின் இசை வடிவங்களும் மற்றொன்றைப் போல் இருக்காதது ஒரு காரணமாயிருக்கலாம். ஐரோப்பா, ஆப்ரிக்கா, பெர்ஷியா, இந்தியா போன்ற நாடுகளில் தழைக்கும் இசை வடிவங்களில் அடிப்படை இசைக் கூறுகளான தாளம், ராகம் ஒன்றைப் போலவே இருந்தாலும், அதன் உபயோகங்களில் வித்தியாசமிருக்கும்;அவற்றை இணைக்க முற்படும் கலைஞர்களின் தேடல் இரண்டாவது காரணம்.
இந்த வித்தியாசமான சத்தங்களே சங்கம இசைக்கான காரணமாயிருந்திருக்கிறது. மெலடி, ஹார்மனி போன்ற அதளபாதாள வேறுபாடுகள் தவிர நுணுக்கமான இசையியல் பாகுபாடுகளும் சங்கம இசைக்கு துணையாக இருந்துள்ளது.
ஏழு ஸ்வரங்களை பலவித ராகங்களாகக் கட்டியமைத்து அதில் அலங்காரமாக நிற்கிறது கர்நாடக சங்கீதம். இதில் பிண்ணப்பட்ட பல கமகங்களும், நுணுக்கமான கால அமைப்புகளையும் குறியீட்டு (Notation) முறையில் கூட விவரிக்க முடியாதவை.ராக ஆலாபனைக்கு நேரம் ஒர் பொருட்டு கிடையாது. பல மணிநேரங்கள் கூட ஆலாபனை செய்யலாம். வார்த்தைகளால் கோர்க்க முடியாத விதிகளைக் கொண்டிருந்தாலும், கர்நாடக சங்கீதம் கறாரான இலக்கணத்தில் கட்டப்பட்ட கோபுரமாகும்.
ஐரோப்பாவின் செவ்வியல் இசை வடிவம் ஸ்வரக் கூட்டணியில் தன் அடித்தளமாகக் கொண்டது. இரண்டு நோட்களுக்கு மேற்பட்ட சேர்க்கையில் உருவானது ஸ்கேல்(Scale) - இது ஒரு ஒத்திசைவு வடிவம் (Harmony). பொதுவாகவே ஐரோப்பா இசையின் சிம்பொனி போன்ற வடிவங்களை பல வாத்தியக்கருவிகளால் இசைப்பர்.கான்செர்ட்டோ (Concerto), ஃபூக் (Fugue) போன்ற இசைப் பாணிகளில் முதன்மை (Lead) கருவியாக ஒரு இசைக்கருவியும், அதன் சேர்க்கை இசையாக பல வாத்தியங்களின் கூட்டணியும் இணையும். இப்படிப்பட்ட வடிவங்களில் முதன்மைக் கருவியே ராஜா போல பவனிவரும். மற்ற வாத்தியங்களெல்லாம் அலங்காரத்துக்கும், செய்நேர்த்தியுடன் முதன்மை இசைக் கருவியின் ஒலி பரிமளிக்கவும் துணை போகும்.
இப்படிப்பட்ட இசை வடிவங்கள் இந்திய இசை பாணியுடன் அற்புதமாக கூட்டு சேர முடியும். பண்டிட் ரவி ஷங்கரின் கான்சர்ட்டோவில் சித்தாரே முதன்மை வாத்தியமான இருந்தது. வயலின், செல்லோ, ட்ரம்பட் போன்றவை சேர்க்கை இசைக்காக மட்டுமே இருந்தன. 1960 களில் லண்டன் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பண்டிட் ரவி ஷங்கர் இசையமைத்ததே இந்திய இசையின் சங்கம பாதையை ஒருமுகப்படுத்தியது . கான்செர்ட்டாவும் சிம்ஃபொனி வகை சார்ந்ததே.
தென் இந்தியாவில் இளையராஜா "How to Name it" மற்றும் "Nothing But Wind" போன்ற சங்கம இசை அமைப்புகளை வழங்கியுள்ளார். பல இசைக் கலைஞர்கள் ஐரோப்பா, கர்நாடக இசைப் பாணியை இணைக்க பல விதங்களில் முயன்றுள்ளனர் என்றபோதிலும், அந்த பாணிகள் வெவ்வேறு வகையான இசைக் கூறுகளை தன் ஆரம்ப இடமாகக் கொண்டுள்ளன. எந்த இடத்தில் இரு இசை பாணிகளும் இணைய வேண்டும் என்பதில் பல வகைகள் உள்ளன. அதனாலேயே சங்கம இசையைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்.
முதல் பாணியில் - ஐரோப்ப இசை வடிவத்தை அப்படியே எடுத்துக்கொண்டு, அதில் சில ராக வடிவங்களை நுழைக்கலாம். எல்லாவிதமான ராகங்களையும் இதில் உபயோகப்படுத்த முடியாது. அந்த இசையின் ஸ்கேலுக்கேற்ற வகையில் ராகங்களை உபயோகப்படுத்தலாம். ஒரு இடத்தில் முடியும் ஒத்திசைவு வடிவத்தை (Allegro - முதல் பகுதி) தொடர்ந்து குறிப்பிட்ட ராகத்தின் பல்லவியை இசைக்க முடியும். இரண்டு பகுதிக்கும் பொதுவான ஸ்கேல் மற்றும் ஸ்வரங்கள் இருக்கும் எனில் இதை ஒரு முயற்சியாகக் கொள்ளலாம். மூன்றாம் பகுதியாக மீண்டும் Allegro வுக்கு சென்று சேரலாம்.
இளையராஜாவின் How to Name It இசைக்கோப்பு இந்த வடிவத்தில் கட்டப்பட்டது. மேற்கத்திய இசை வடிவத்தையோ, இந்திய ராக அமைப்பையோ அடிப்படையாகக்கொண்டு அதன் மேல் எஞ்சிய இசை அலங்காரங்களை ஏற்றுவது இந்த பாணியில் அடிப்படை இலக்கணமாகும். இது ஒரு சிக்கலான வடிவமாகும்.
ஐரோப்பா இசை பல்லிசை (Polyphony) வகையைச் சேர்ந்தது. ஒரே நேரத்தில் பல இசைக் கருவிகளோ, வாய்ப்பாட்டிசையோ தொடங்கும். அவை செல்லும் இடங்களும் , நோட்களும், ஸ்கேல்களும் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட ஸ்கேலான (Base Scale) எனக்கூறும் அடி நாதத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டோனல் (Tonal) வடிவம். பல சமயங்களில் இந்தப் பல்லிசைகள் Counterpoint எனப்படும் ஒத்திசைவின் ஒரு புள்ளியில் சேரும். அந்த இடத்திலிருந்து ராக அமைப்புகளை இளையராஜா How to Name it ஆல்பத்தில் கையாண்டிருப்பார். இதை செங்குத்தான (Vertical) சங்கம வடிவமெனலாம். இது இளையராஜா இசையமைத்த திரையிசைகளிலும் சாதாரணமாக பரிமாறப்படும் ராஜ விருந்து.
மற்றொரு சங்கம இசை பாணியில் - சங்கீத கீர்த்தனைகளை சுற்றி ஐரோப்பா இசைக் கூறுகளை தோரணமாய் கட்டுவர். குன்னக்குடி வைத்தியநாதன் தன் காவேரி(1970), Magic String(1998) போன்ற ஆல்பங்களில் இந்த பாணியைக் கையாண்டுள்ளார். அடிப்படையில் கர்நாடக இசை மட்டுமே ஒலிக்கும். ஆனால் அதன் அலங்காரமாய் ஒத்திசைவுகளும், வடிவ நேர்த்திக்காக சில நுணுக்கங்களும் கையாளப்படும். கேட்பவர்களுக்கு இது கர்நாடக இசை பாணியெனச் சட்டென புரிந்தாலும், ஒத்திசைவு சங்கதிகளால் மெருகேற்றப்பட்டவை எனப் புரியும். பல இசைக் கருவிகள் சங்கமிக்கும் இடமாக சில பகுதிகள் இடம்பெறும். அப்படி சங்கமிக்கும் இடங்களில் ஐரோப்பா இசைக் கூறுகளை இசைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
Recent Comments