கடந்த சொல்வனம் இதழில் வெளியான ‘வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்’ எனும் விவரணப்படத்தின் அறிமுகம் இங்கே.
ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையின் மிக முக்கியமானத் திருப்புமுனை வாக்னர் முதல் தொடங்கியது எனலாம். வாக்னரைப் பற்றித் தெரிந்துகொள்வது இசையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சி மட்டும் அல்ல. அது ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான போக்கையும் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அலகும் கூட.
இத்தனைக்கும் இஸ்ரேலில் இவரது இசை தடை செய்யப்பட்டுள்ளது. பல யூத குடும்பங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் கூட மானசீகமாக அவரது இசையை கேட்காமலேயே வெறுக்கத் தலைப்படுகின்றனர். ஆனாலும் மேற்கத்திய இசையில் மட்டுமல்லாது, ஜெர்மன் நாட்டு தேசியவாத எழுத்தின் முன்னோடி, இசை நாடகத்தின் சகல பரிணாமங்களையும் வெளிக்கொணர்ந்த மேதை, ஹிட்லரின் முதன்மையான குரு என வாக்னரின் ஆளுமை சிதறிக்கிடக்கின்றது. இத்தனை முரண்பட்ட ஆளுமையான இவரைப் பற்றி பல ஆவணப்படங்கள் உள்ளன. அதில் பிபிஸி குழுவினர் உருவாக்கிய ‘Great Dates’ மிக முக்கியமானது. அவரது ஆளுமை மட்டுமல்லாது இசையின் முக்கியத்துவத்தையும் சேர்த்து அளிப்பதால் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
இந்த விவரணப்படத்தில் ஸ்டீபன் ஃப்ரை சொல்லும் செய்தி மிக முக்கியமானது.
‘வாக்னரின் ’யூத வெறுப்பாளன்’ எனும் அடையாளம் மிகவும் முக்கியமான விஷயம். அதற்கு நேரடியான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அவரது நாடங்களில் சில பாத்திரங்கள் அப்படிப்பட்ட சாயலுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. அது அந்தக் கால ஜெர்மன் நகரத்து சமூக மனச் சாய்வாக இருக்கலாம். ஆனால், பல வருடங்களாக அவரது இசையைக் கேட்கும் ரசிகன் என்ற முறையில் என் மனதுக்குத் தெரியும், வாக்னர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவரை இப்படிப்பட்ட அடையாளங்களில் குறுக்க முடியாது. அதையும் மீறி உலகம் இதுவரை காணாத இசை மேதை அவர் என்பது எனக்குத் தெரியும்.’
வரலாற்றில் நடந்தவற்றுக்கு ஒவ்வொரு தலைமுறையும் பொறுப்பு ஏற்க வேண்டுமா எனும் அடிப்படைக் கேள்விகளை பேசுபொருளாக எடுத்துகொண்டால் வரலாற்றையே முழுவதாக அலசினாலும் விடை கிடைக்காது என்கிறார் ஸ்டீவன். முடிந்துபோனவை என்பதால் வரலாற்றின் கோர முகங்களுக்கு இன்று எதுவும் மதிப்பில்லை என தீர்ப்பெழுத முடியுமா? அல்லது, பதிலுக்கு பதில் கொடுக்கும் பணியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மெல்ல அந்த பொறுப்பைத் தட்டிக் கழித்து நம் வருங்காலச் சந்ததியினருக்கு சொத்தாகக் கொடுக்கலாமா? இல்லை அவற்றை மறந்துவிடத்தான் முடியுமா? பழைய நிகழ்வுகளுடன் நாம் ஒவ்வொருவரும் கொள்ளும் ஒப்பந்தம் தான் நமக்கான வரலாறு எனக்கொண்டால், ஸ்டீவனுக்கு மட்டுமல்ல நம் எல்லாருக்குமே அந்த பொறுப்பு இருக்கிறது. கதவு ஜன்னல்களை அடைத்துவிட்டு நம் வேலையைப் பார்த்தாலும் நம் உள்ளத்திலிருக்கும் கேள்விகளை என்றாவது எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பதும் நம் சரித்திரம் தான்.
ஐந்தாம் நாளான இன்று லண்டன் இசை நிகழ்ச்சிக்காக யூஸ்டன் எனும் பகுதியில் இருந்த புனித மேரி மேக்தலின் தேவாலயத்துக்குச் சென்றேன். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. வழியும் தெளிவாகத் தெரியாது என்றாலும் வாரன் வீதி தரையடி ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில் தான் இருக்கிறது என மேப்பில் போட்டிருந்தார்கள். அதை நம்பி நடக்கத்தொடங்கியதில், சிறு சதுக்கத்தின் மூலையில் மறைந்திருந்த தேவாலய வாசலைத் தாண்டிச் சென்றுவிட்டேன். ஆங்காங்கே வழி கேட்டபின் தேவாலயத்துக்குள் செல்வதற்குள் நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடங்கள் ஆயிருந்தன.
இது மிகவும் பழைய பரோக் பாணி தேவாலயம். மர வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான வளைவுகள் ஆலயத்தின் உயரத்தை அதிகமாகக் காட்டியது. இன்றைய நிகழ்ச்சியில் பீத்தாவனின் பியானோ ட்ரியோவும், ஷுபர்டின் பியானோ ட்ரியோவும் இசைப்பார்கள் எனப் போட்டிருந்தது. தேவாலயத்தின் மூலையில் இருந்த சிறு மேடையில் பியானோ, வயலின் மற்றும் செல்லோ கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் கம்மிதான். இருபது நபர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். சத்தம் போடாமல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துகொண்டேன். ஆச்சர்யமாக படம் எடுக்கவும் தடை அறிவுப்புகள் எதுவும் இல்லை.
ஸ்டாட்லர் ட்ரியோ எனும் குழுவினரது இசை நிகழ்ச்சி. பியானோ, செல்லோ மற்றும் வயலின் கலைஞர்களான மூவர் குழு, பீத்தாவன் பியானோ ட்ரியோவின் (Op 70, D Major) இரண்டாவது பகுதியை இசைத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் செல்வதற்கு முன் இன்றைய முக்கிய இசையாக அமைந்த ஒப்லிவியன் எனும் இரண்டாவது ட்ரியோ பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
இரண்டாவது இசையாக வரவேண்டிய ஷுபர்ட் பியானோ ட்ரியோ என்ன காரணத்தினாலோ இன்று நடைபெறாது என அறிவித்தார்கள். அதற்கு பதிலாக அவர்கள் இசைத்த அஸ்டர் பியாசொலா எனும் டாங்கோ கலைஞரின் சாஸ்திரிய இசை தான் இன்றைய ஆச்சர்யம். முதல் முறையாக அவரது பெயரைக் கேள்விப்படுகிறேன். பீத்தாவன் தான் கேட்க தாமதமாகிவிட்டது, ஷுபர்டாவது முதலிலிருந்து கேட்கலாம் என ஆசையாக காத்திருந்ததால் டாங்கோ இசை என்றவுடன் கொஞ்சம் எரிச்சல் வந்தது. ஆனால், அவர்கள் வாசித்த நான்கு நிமிடங்களும் அந்த இசையோடு ஒன்றிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். வயலின் செல்லோ குழைந்து குழைந்து விளையாடின. மிகவும் சோகமான இசை, ஆனால் கேட்க அழகாக இருந்தது. நான்கே நிமிடங்கள் மட்டும் இருந்த இந்த இசை 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாம். மிகவும் உருக்கமான இசை.இரவு நேரத்துக்கு உகந்த இசை. தந்திக் கருவிகள் நம்மை உருக வைக்கவே பிறந்தவை எந்த் தோன்றியது. எத்தனை நுண்ணிய உணர்வுகளை தங்கள் கம்பிகளில் தேக்கி வைத்துள்ளன!
மிகக் குறைவான கூட்டம் இருந்ததால் இன்று நிகழ்ச்சி முடிந்ததும் இசைக்கலைஞர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக செல்லோ கலைஞர் நிறைய பேசினார். அவரிடம் கேட்க வேண்டும் என சில கேள்விகள் வைத்திருந்தேன். ஆனால், ஒன்றிரண்டு தவிர மீதத்தைக் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை - அவரே நிறைய பேசினார்.
'நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துகள். ஏன் பீத்தாவனின் இந்த குறிப்பிட்ட ட்ரியோவை ஒப்லிவியானுடன் சேர்த்து வைத்தீர்கள்? இவ்விரண்டு இசைகளின் கரு முற்றிலும் மாறுபட்டவையாகத் தோன்றியதே?' எனக் கேட்டேன்.
'பீத்தாவைன் ட்ரியோ மிகவும் குதூகலமானது. ஒப்லிவியான் மிகவும் சோகமான இசை. பொதுவாக பல பாடல்கள் இருந்தாலும் ஒரே போன்ற கருவைத் தான் நிகழ்ச்சிகளில் வைப்பார்கள். ஆனால், வெரைட்டிக்காக இன்று இப்படி வைத்தோம். அதுவும் தவிர ஒபிலிவியன் போன்ற இசையை பெரும் அரங்கங்களில் வாசிக்கக் கூடாது. மிகவும் ரசித்து இழைக்கப்படும் சிற்பம் போல, சிறு அரங்கங்களில் குளிருக்கு அடைக்களமடையும் பறவைகள் போல, ஒன்றினால் தான் அந்த உருக்கத்தில் கறைய முடியும்' என்றார்.
'ஒப்லிவியான் எழுதியவர் யார்? கேட்க மிகவும் இனிமையாக இருந்ததே?' என நான் கேட்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தார் 'பியாசொல்லா எனும் தென் அமெரிக்க டாங்கோ கலைஞர். பத்து வருடங்களாக சாஸ்திரிய சங்கீத இசைப் படைப்புகளை உருவாக்கி பாரீசின் ஆசிரியர் நாடியா புலான்ஞேரிடம் எடுத்து சென்றார். அதையெல்லாம் பார்த்த அவரோ, டாங்கோ தான் உன் விரல்களில் இருக்கு. அதிலிருக்கும் அம்சங்களை சாஸ்திரிய சங்கீதத்தில் இணைத்துப் பார். நவீன ஜாஸ் எல்லாம் முயற்சி செய்யாதே, விட்டுவிடு, டாங்கோவின் வேரை சென்றடைந்து அதிலிருந்து உன் ஆதார கருக்களைப் பெற்றுக்கொள் எனச் சொன்னதும் பிறந்ததுதான் நவயுக டாங்கோ. ஆனால் டாங்கோ புனிதமான இசை, அதை கெடுக்கக் கூடாது என அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாம்' என உற்சாகத்தோடு விளக்கினார். தான் அவருடைய மிகப் பெரிய ரசிகன் என்று அவர் சொல்லும்போது அவரது குரலில் பெருமிதம் தெரிந்தது.
'நீங்கள் வாசித்தது ரொம்ப அழகாக இருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் பிரத்யேக வாசிப்பு அடையாளம் இருக்கும் இல்லையா? அப்படி உங்கள் சேம்பர் குழுவுக்கு எது அடையாளம்?' எனக் கேட்டேன்.
வயலின் கலைஞரைப் பார்த்து சிரித்துவிட்டு, 'மெலடி தான் எங்கள் பலம். குறிப்பாக வாசிக்கும்போது மற்றவருக்கு பெரிய இடைவெளியை திட்டமிட்டு விடுவோம். அது சில நொடிகள் இருக்கலாம். அதற்குள் அவரால் சில துணுக்குகளை மேம்படுத்த முடிந்தால், அதையும் எங்கள் இசையில் சேர்த்துக் கொள்வோம்..நாங்கள் டுயட் இசைக்கும் மூவர்' எனச் சத்தமாகச் சிரித்தார்.
'அப்படி மெருகேற்றும்போது மூல இசையுடன் ஒத்துப்போகும்படி எப்படி அமைப்பீர்கள்?' எனக் கேட்க நினைத்த கேள்விக்கு முன் வேறொருவர் அவரது கேள்வியைக் கேட்கத் தொடங்க, எனக்கு வாய்ப்பு பறிபோனது. கூட்டம் கலைந்ததால் இக்கேள்வியைக் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை.
இப்போது முதல் நிகழ்வான பீத்தாவனின் பியானோ ட்ரியோ (Op 70, D Major) பற்றிப் பார்ப்போம். தாமதமாகச் சென்றதால், நான் கேட்கத் தொடங்கும்போது செல்லோ இசை மிக ஆழத்தில் கேட்பது போல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பொதுவாக இரண்டாம் பகுதிகள் மெதுவாக அமைந்திருக்கும். முதல் பகுதியில் இசைத்த கருவிலிருந்து ஏதேனும் குறிப்பிட்ட இசைத் துணுக்கை மட்டும் மேலும் விரிவாக இரண்டாம் பகுதியில் இசைப்பார்கள். இப்பகுதி முழுவதும் பியானோவும், வயலின் மட்டுமே பிரதானமாக இசைத்தது போலிருந்தது. நிகழ்ச்சி நிரலில் இந்த இசையை 'Ghost' என வகைப்படுத்தியிருந்தனர். செல்லாவின் ஆழமான அதிர்வலைகளால் இருக்கலாம்.
மூன்றாம் பகுதி மிகவும் ரசிக்கும்படியாக வேகமாக அமைந்திருந்தது. வயலினும் செல்லாவும் டூயட் போல கைகோர்த்தபடி சில இசைத் துணுக்குகளை வாசிக்க பியானோ அவற்றுக்கு பக்கவாத்தியமானது. பின்னர் பியானோ பிரதானமாக ஒலிக்கத் தொடங்க, வயலினும் செல்லோவும் மாறி மாறி அதற்கு பக்கவாத்தியமானது. மொத்தத்தில் ஒரே மாதிரி ஸ்வர வரிசையைத் தான் மூன்று கருவிகளும் இசைத்தன, கால தாமதத்துடன். ஷுமன் பியானோ ட்ரியோவில் ஒவ்வொரு வாத்தியமும் வெவ்வேறு ஸ்வரங்களை இசைத்தன. அவை ஒன்றாகச் சேருமிடத்திலிருந்து ஒட்டியோ விலகியோ இசை தொடரும். பீதாவனின் இந்த ட்ரியோ மிக எளிமையாக இருந்ததோடு மட்டுமல்லாது, அழகான ஒத்திசைவையும் கொடுத்தது.
டடாயிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி.
அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார். அதுவரை மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் டோனல் வகை இசையை மட்டுமே வழங்கி வந்தது. அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் அமைந்த சோபினின் A Major, செயிண்ட் சான்ஸின் G Minor போன்றவை ஒரு குறிப்பிட்ட கார்டை ஆதார ஸ்ருதி என வகைப்படுத்தி வைத்திருக்கும் இசை வடிவமாகும். அதாவது சோபினின் ட்ரியோ A Major கார்டை மையமாக வைத்திருக்கும். அதைச் சுற்றியே ஸ்வர அலங்காரங்களும், ஹார்மொனி துணுக்குகளும் அமைந்திருக்கும்.
அடோனல் எனும் இசை வகையில் ஆதார ஸ்ருதி என எதுவும் முக்கியத்துவம் பெறாது. எல்லா ஸ்வரங்களும் முக்கியமானவையே. மையம் என ஒன்றும் இல்லாமல் விளிம்பும் மையமும் மாறி மாறி அமைந்து ஒற்றை கருத்தைத் தகர்ப்பது பின்நவீனத்துவம் என்பது போல் இசையில் அடோனல் தான் பின்நவீனத்துவ பாணி. இதனால் எளிமையான வாசிப்பு உடைக்கப்பட்டது. அதுகாறும் வந்த மையம் முதல் வாத இசையை அடோனல் நிராகரித்தது. பொதுமக்களிடையே மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தைக் கொண்டு சேர்க்க முடியவில்லை என்ப்தால் டோனல் வகை இசையை ஆதரிக்கக் கூடாது எனப் பிரகடனப்படுத்தியது. அதற்கு மாற்றாக அடோனல் உருவானது. அதாவது மையக் கருத்தாக பெளராணிய கருத்துகளை கலை முன்வைக்கக்கூடாது, கலையின் தரிசனத்தை அவரவர்க்கு புரிந்தமாதிரி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதம். கலை கலைக்காக - இறையாண்மை, அதிகாரம், அழகியல் என எதுவும் கலையின் அடிநாதமாக இருக்கக்கூடாது.
ஆனால், மக்கள் ரசனைக்கும் இசைக்கும் இருந்த இடைவெளியைக் குறைக்கப் போகிறோம் என உருவாக்கிய இசையே மக்களை மேலும் அதிக தூரம் விலக்கியது தான் வரலாற்றின் முரண். கலை, இலக்கியம், விமர்சனம், தத்துவம் என இன்றுவரை இது தொடர்ந்து நிரூபணமாகிறது. நவீனத்துக்கு எதிர்ப்பாக உருவான பின்நவீனத்துவம் மக்கள் கலையிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்டது.
அக்காலகட்டத்தில் பல முக்கிய இசை நிகழ்வுகளிலெல்லாம் இக்கூட்டம் நுழைந்து கலாட்டா செய்யும். ஸ்ட்ராவின்ஸ்கியின் The Rite of Spring, Parade எனும் இசை நாடகம் போன்றவை இப்படிப்பட்ட கலாட்டக்களையும் கூச்சல்களையும் கண்டன. The Rite of Spring முதல் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே செயிண்ட் சான்ஸ் வெளியேறினாராம். சின்ன சத்தம் கூடப் போடாமல், தும்மல் வந்தாலும் அடக்கிவைத்திருந்த கும்பலுக்கு திடீரென என்ன ஆனது? அதற்கானக் காரணங்களை இன்றும் ஆராய்ந்து வருகின்றனர் - பொதுவாக மக்கள் ரசனையில் மாற்றம் வரத்தொடங்கியது ஒரு முக்கியமானக் காரணம். அதற்குப் பிரெஞ்சு புரட்சி முதல், ரஷ்யப் புரட்சி வரை பல சமூக தளங்களில் வரலாற்றாசிரியர்கள் காரணம் தேடுவார்கள்.
இசை விமர்சகர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘Music for every day use'. அதாவது அன்றாட நிகழ்வுகளையும், அடித்தட்டு மக்களின் வாழ்வையும் பிரதிபலிக்கும் கலை மட்டுமே எங்களுக்குத் தேவை எனும் கூக்குரல். வாக்னர், மாஹ்லர் போன்ற இசை மேதைகள் நாட்டின் தொன்மக் கதைகளையும், பழம் புராணங்களையும், நார்னியா போன்ற மிகுகற்பனை உலகங்களையும் இசைக்குள் கொண்டுவந்ததை இவர்கள் எதிர்த்தனர். பிரான்ஸிஸ் புலென்கைப் பொருத்தவரை இப்படிப்பட்ட மிகுகற்பனை உலகங்களை சிருஷ்டிக்கும் இவர்கள் அனைவரும் போலிகள். கலையின் அடிப்படையையே வாக்னர் போன்றவர்கள் குலைத்துவிட்டார்கள் என புலென்க் வாதிட்டார்.
இங்கிருந்துதான் நாம் புலென்கின் இசையை புரிந்துகொள்ள முடியும்.
முகமூடி அணிந்தவர்களது நிகழ்ச்சி (Le Bal Masque)
பாரிஸின் ஆன்மா உறங்கிவிட்டது. அரக்கன் சோம்பல் முறித்து எழுந்திருக்கும் நள்ளிரவு. மதுவிடுதிகளும், சுகப் பெட்டகப் பெண்களும், அவர்களை தேடும் தங்களைத் தொலைத்த ஆண்களும், சுயத்தைத் தேடும் தத்துவ மேதைகளும் மட்டுமே முழித்திருக்கும் இரவு. இரவு வாழ்க்கைக்குப் பெயர் போன பிகால் பகுதி.
ஒரு கபே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இடமில்லாமல் ஆட்கள் பிதுங்கியபடி உள்ளும் புறமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள், காலி மதுக்கிண்ணங்களும், உரத்த குரல் வாக்குவாதங்களும் உச்ச ஸ்தாயியில் நடக்கின்றன.
வழியும் எச்சிலுடன், வாயில் குழறலும், வயிற்றில் பல நாட்கள் பசியும், நெஞ்சில் புறக்கணிப்பின் வேதனையும் சுமந்தபடி மனம் நிறைய கவித்துவ புத்துயிர்ப்போடு ஒரு கவிஞன் உள் நுழைகிறான்.
சமூகத்தின் முகத்திரையை கிழிக்கும் கவிதைகளை அங்கதத்துடன் பாடத் துவங்குகிறான். மெல்ல அவனைச் சுற்றி இசைக்கலைஞர்கள் கூடுகிறார்கள். அவனை ஊக்குவிக்கிறார்கள். இலவசமாக இரண்டு கோப்பை மது கூட அவனுக்குக் கிடைக்கிறது.
அவனது மனதில் இருக்கும் சுயபச்சாதாப விரக்தியை, தன் சமூகத்தின் போலி முகத்தினை கிண்டல் செய்வதன் மூலம் தீவிரமான விஷயத்தை விளையாட்டாக சொல்லத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட கிங் லியரின் கோமாளி போல, சார்லி சாப்ளின் போல, அவனது சேஷ்டைகளும் குரலின் ஏற்ற இறக்கங்களும் அங்குள்ளவர்களைச் சிரிக்க வைக்கிறது.
கண் தெரியாத கிழவி வரையும் சித்திரம், ஒழுகும் வீட்டை அடைக்கும் முடவன் என அவனது கவிதைகள் அவலங்களைக் கூடத் தத்துவச் சிரிப்போடு சொல்லிச் செல்கிறது. அவனது வார்த்தைகளைத் தொடரும் இசையும் சிரிப்பும், கேலியுமாக சம்பந்தமிலாத அபத்த இசைத் துணுக்காக உருவாகிறது. எதிலும் ஒரு கோர்வை இல்லை. வேகமான தாளத்துடன் ஆக்ரோஷமான உணர்வு வெளிப்படும்போது வாழைப்பழத்தில் வழுக்கி விழும் முதிரா சிரிப்பொலிகள் கேட்கின்றன. திடீர் திடீரென மிலிட்டரி தாள இசை கேட்கிறது, மெல்ல கிண்டல் ஒலிகளாக அவை மாறுகின்றன. ஒழுங்கிலாத இசை வெள்ளம். இதையெல்லாம் தாண்டி, அந்த நள்ளிரவின் கூத்தை மேலிருந்து பார்க்கும் ஒருவன் ஒரு ஒழுங்கைக் கண்டடைவான். இவ்வளவு பல்கூசும் சத்தங்களிலும் ஒரு ஒழுங்கு குடிகொண்டுள்ளது. கலையின் அபத்தத்தையும் மேன்மையாக்கி அதையும் அபத்த தத்துவமாகப் பார்க்கும் ஒரு நோக்கு கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் அமைந்துவிடுகிறது.
அந்த கவிஞரின் பெயர் மாக்ஸ் ஜேகப்.
கீழுள்ள இசையைக் கேட்டுப் பாருங்கள். எத்தனைவிதமான இசை அலங்காரங்களும், குரல்களும் இணைகின்றன என்பதைக் கொண்டு கபேயின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது பாரிஸில் இருக்கும் ஒரு கபேயின் நிலைமை அல்ல. இது போலி உணர்வுகளை எழுப்பும் ஆடம்பர கற்பனை இசையின் முகத்திரையை கிழிக்க வந்திருக்கும் முகமூடி நாடகம்.
இதைக் கண்டு ரசித்துவிட்டு மீண்டும் அதே குட்டையில் விழுபவர்கள் தான் முகத்திரை அணிந்துள்ளார்கள். உண்மையைக் காணாமல் இருக்க முகத்திரை. the joke is on us.
புலென்குக்கு மற்றொரு முகமும் உள்ளது. பிகாலைப் போல பாரீஸின் Notre-Dame தேவாலயம் அவரது பிற்காலத்திய இறை நம்பிக்கைக்குப் புகலிடமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் பழைய பாணி தேவாலய இசைக்கு புது வடிவங்களும் கொடுத்தார். அடோனல் ஸ்வரங்களை அப்போதும் கைவிடவில்லை. சில சமயம் கேட்க கிறீச்சென இருந்தாலும், தேவாலய் இசையில் புது பாணியைப் புகுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உள்ளதென இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஐரோப்பிய இசையில் இருபதாம் நூற்றாண்டு நுழைந்த ஜாஸ் வகையின் அம்சங்களும் நவீன மேற்கத்திய இசையில் இணைந்துகொண்டு சாத்தியங்களை விரிவுபடுத்தியது.
இன்று அவரது Suite Francais எனும் இசையும் நிகழ்த்திக்காட்டப்பட்டது. சிட்டி ஆப் லண்டன் சிம்போனியா எனும் குழு இதை இசைத்துக்காட்டியது. ஹார்ப்ஸிகார்ட் எனும் தந்திப்பியானோ வகை வாத்தியக்கருவியைக் கொண்டு தேவாலய இசையில் பிரதானமாக இருக்கும் ஆர்கன் சத்தங்களைக் கொண்டுவந்தனர். இசை மிக எளிமையாகத் தெளிவாக இருப்பதை உணர முடியும். ஏனென்றால் டோனல் வகை இசையாதலால் அடிப்படை ஸ்ருதிக்கு இசை திரும்பிவும். மேலும் ஒத்துவராத கார்டுகளை இணைத்து வரிசை குலைந்த ஸ்வரஸ்தானங்களைப் பிரயோகப்படுத்தவில்லை. அதனால், பதினேழாம் நூற்றாண்டு பாக்கின் இசை போலத் தோன்றும். அதற்காகவே இன்றைய நிகழ்ச்சியில் பாக்கின் French Suite 5 in G Major துணுக்கையும் இசைத்துக் காட்டினர். இதன் மூலம் முன்னூறு ஆண்டுகள் இடைவெளியில் டோனல் இசை எவ்வகை புதுமைகளைச் சந்தித்துள்ளது என நிகழ்த்தினர்.
கீழுள்ள காணோளியில் இதைப் பார்க்கலாம்.
எனது அபிமான பியானோ கலைஞர் க்ளென் கோல்ட் இசைக்கும் பாக்கின் பிரெஞ்சு இசைக்கதம்பம் ஐந்து.
பாக்கின் பிரெஞ்சு நடன இசையைக் கேட்கும்போது, குறிப்பாக கீழுள்ள இந்த இடம் இளையராஜா அமைத்த புன்னகை மன்னன் தீமின் பியானோ போலத் தோன்றியது.பியானோ விரிவாக்கமும் கார்ட்ஸும் கிட்டத்தட்ட அதே சாயலில் இருந்தன. G Major ஸ்வரக்கூட்டணியின் லீலையாக இருக்கலாம். பாக்கின் தீவிர ரசிகரான ராஜா அவரது பாணி இசையை இது போல பல இடங்களிலும் பிரயோகப்படுத்தியுள்ளார். பாக்கின் தாக்க்கத்தை How to Name it ஆல்பத்தில் கூட வெளிப்படுத்தியுள்ளார். பல நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தாலும் இரண்டு மாஸ்டர்கள் இப்படி பேசிக்கொள்வது ரசிகர்களான நமக்குத் தானே கொண்டாட்டம்.
இன்றைய நிகழ்ச்சியை நான் மிகவும் ரசித்தேன். முக்கியமானக் காரணம் புலென்க்கின் இசை. அவரது இசையையும் பதினேழாம் நூற்றாண்டு இசையையும் அருகருகே வைத்துக் கேட்க முடிந்தது மிக இனிமையான அனுபவம். நவீன இசையைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் காணக்கிடைக்காத பலதரப்பட்ட இசை வடிங்களைக் கேட்க முடிகிறது. கேட்கக் கேட்க இசை எனும் கடலின் ஆழமும் அகலமும் ஆச்சர்யப்படுத்துகிறது. இத்தனை குறைவான ஸவரங்களைக் கொண்டு எத்தனை நுண்ணிய உணர்வு அலைகளை உருவாக்க முடிகிறது! ஒவ்வொரு நூற்றாண்டிலும் எத்தனை வகையான இசை வடிவங்களும், நுணுக்கங்களும் உருவாகின்றன என நினைக்க நினைக்க அளவிடமுடியாத வைரச் சுரங்கமே நம்முன் குவிந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.
லண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள்.
ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை என மேலோட்டமாக இதைப் புரிந்துகொள்ளலாம். கலை, நாடகம், இலக்கியம், தத்துவ தளங்களிலும் இதே பிரிவினை உண்டு.
கால தேச வர்த்தமானங்களைத் தாண்டி இன்னொரு வகையான பிரிவினை கொண்டு மேலும் நெருக்கமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.
கர்நாடக சங்கீத பாணியில் இப்பிரிவினையை லட்சண இசை, லட்சிய இசை எனக் குறிப்பிடலாம். இசை இலக்கணத்துக்கு உட்பட்டு எவ்விதமான லய ஸ்ருதி இலக்கண விழைவும் அல்லாது திட்டமிட்ட வடிவில் அமைவது லட்சண இசை. மிகவும் கட்டுக்கோப்போடு எல்லை தாண்டிவிடாமல் கவனத்தோடு அமையும் இசை இது. இசைக் கலைஞரின் கற்பனை, படைப்பாற்றல் திறமைக்கு உட்பட்டு இசை இலக்கணத்தை மீறி அழகியலின் உச்சகட்ட சாதனையாகப் படைப்பது லட்சிய இசை. லட்சிய இசை தடைகளே இல்லாதது. கலைஞருக்கே தெரியாமல் லட்சண பாவங்கள் அதில் தென்படலாம், ஆனால் திட்டமிட்டு அவை உருவாக்கப்ப்டுவதில்லை. கர்னாடக சங்கீதம், ஜாஸ் போன்றவற்றில் இருக்கும் இயல்பான மெருகேற்றம் கலைஞரின் திறமையை வெளிக்காட்டவதினால் லட்சிய இசைக்கு உருவாகிறது.
லட்சிய இசைக்கு அசாத்திய கற்பனை அவசியம். அதைத் தவிர அளவிலாத துணிவும் மிக அவசியம். குறிப்பாக, இசை போன்ற மென் உணர்வுகளைத் தூண்டக்கூடியத் துறையில் லட்சிய இசையின் செல்வாக்கு எல்லா இடத்திலும் பொருந்தாது என்பது என் எண்ணம். கூட்டத்துக்குத் தகுந்தாற்போல லட்சண அல்லது லட்சிய இசையை உருவாக்கும் இசைக்கலைஞர்களும் உண்டு. லட்சிய இசையை இசைக்கும் திறமைக்கு ஒப்புக்கொடுக்கும் வண்ணம் கேட்பவர்களின் மனோபாவமும் இருக்க வேண்டும்.ஜனரஞ்சகமானக் கலவைக் குழுவில் லட்சிய இசைக்கான செவிகள் குறைவாகவே அமையும்.
என் அலுவலகத்தருகே இருந்த இரு தேவாலயங்களிலும் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் இருந்தன. ஒன்றில் பீத்தாவனின் இசைத் துணுக்குகள். மற்றொன்றில் சில குரலிசைப் பாடல்கள் - தேவாலய சான்ட்ஸ் வகையறா. இரண்டையும் கேட்க மனமில்லாமல், சற்று தூரத்தில் இருந்த பிஷப்கேட் கல்லூரி அரங்கில், டெபுஸி, சோபின், பீத்தாவன் இசையைக் கேட்கச் சென்றேன்.
இதில், சோபினின் இசையை சில இடங்களில் கேட்டிருந்தாலும், டெபுஸி முற்றிலும் புதுசு. அதற்காகவே இந்த நிகழ்வைத் தேர்ந்தெடுத்தேன். முழு திருப்தி எனச் சொல்லமுடியாது. சாஸ்த்ரிய சங்கீதத்தில் புதுவகை முயற்சிகளையும், பின்நவீனத்துவ இசைத் துணுக்குகளையும் ரசிக்க ஒரு மனக்குவிப்பு அவசியம். அதுவும் தொடர்ச்சியாக கேட்டால் மட்டுமே அவற்றின் பிரயோகங்களும் நளினமும் புரியும். இசையை இசைக்காக மட்டும் ரசிக்க ஒருவித கனிவான மனநிலை தேவைப்படுகிறது. தத்துவப் பாடல்களைக் உணர்ந்து ரசிக்கத் தேவைப்படும் மனச் சஞ்சலம் போல. குறிப்பாக, டெபுஸி போன்ற நவீன பாணி இசைத் துணுக்குகளை பயன்படுத்தியவர்களது இசையை சாப்பாடு முடித்தபின் வெத்தலை மடித்தபடி ‘ஆமாம், ஒரு பாட்டு படி’ என ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்க முடியாது.
ஏன் அப்படி ஒரு மனநிலை தேவைப்படுகிறது?
பொதுவாக இசையை ரசிக்கத் தேவைப்படும் மனநிலைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. சில வகை இசை தன்னியல்பாகவே நம் உணர்வுகளைத் தூண்டிவிடும். பழைய ஞாபகங்கள் வழியாக. ஏற்கனவே கேட்ட பாடலென்றால் அப்போது நடந்து சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து நம்மிடையே உறவாடத் தொடங்கிவிடும். நண்பனைப் போல, நம் தோளில் உட்காரக்கூடிய அவற்றுக்கு ஏற்ப நம் மனநிலையும் மாறிவிடும். ஊரடிங்கிய நள்ளிரவில் ரசிக்கும் பழைய சினிமா பாடல்கள் போல.
ஆனால், சில நுணுக்கமான வாசல்கள் வழி மேற்கத்திய இசை நம்மை அடைகிறது. கான்சர்ட்டோ, சிம்பொனி எனச் சொல்லும்போது கூடவே வரும் E Major, G Minor எனும் கார்ட்ஸ் வகைகள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. ராகங்களில் சில குறிப்பிட்ட ஸ்வர சஞ்சாரங்கள் முக்கிய்மானவை, தனித்துவமானவை என்பதுபோல இந்த இசைக்கு கார்ட்ஸ்கள் தான் ஆதார ஸ்ருதி. நன்றாக கவனிக்கும்போது, இந்த கார்ட் தான் மீண்டும் மீண்டும் பல திசைகளிலிருந்து வந்தடையும் இடமாக இருக்கும். அதாவது E Major எனும் இசை கோர்வை, E Major கார்டில் தொடங்கும், பின்னர் பல ஸ்வர கூட்டணிகள் இசையின் கருவை வளர்த்தெடுக்கும். ஆனாலும், அப்படி திசையறியாமல் செல்லும்போதெல்லாம் நம்முடைய நினைப்பு முழுவதும் தொடங்கிய E Major ஸ்வரக் கூட்டிலேயே இருக்கும். எப்போது திரும்ப அங்கேயே வருமோம் என இருக்கும் - இந்த தவிப்பு தான் இசையின் ஆதாரம்.
பீத்தாவனுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் ரசிகர்களை மகிழ்விக்க பல முறை ஆதார ஸ்ருதியை நோக்கி தங்கள் ஸ்ருதிகளை ஒன்றிணைப்பார்கள். ஆதார ஸ்ருதியைப் பல முறை வலம் வருவார்கள். நம் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை இது உண்டாகும். ஆனால், இதையே செய்துகொண்டிருந்தால் அலுப்பாகிவிடும் என்பதால் ஸ்வர சஞ்சாரத்தில் ஈடுபட்டு பல ஸ்வரங்களில் வலம் வருவார்கள்.
பீத்தாவனுக்குப் பின்னர் வந்தவர்களில் பலர் நாடகத்துக்குத் தேவையான தவிப்பு, இழப்பு, தாபம் போன்ற உணர்வுகளை இசையில் உருவாக்கத் தொடங்கினர். அந்த டென்ஷனை கடைசி வரை தக்கவைக்கவோ, ரசிகர்களை அளவுக்கதிமான தவிப்பில் தத்தளிக்கவைக்கவோ இது மிகவும் உபயோகமாக இருந்தது. இதை chromatic harmony என வகைப்படுத்துவர். அதாவது ஆதார கார்டின் ஸ்வரங்களை தொடாமல் மற்ற ஸ்வரங்களை மட்டும் உபயோகப்படுத்தும் பாணி. கீழுள்ள காணொளியில் இது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது. மகிழ்வான உணர்வைத் தரக்கூடிய கொண்டாட்டமான இசை என யாரேனும் இதைக் கூற முடியுமா? அதற்காக இது சோக இசை என்று அர்த்தமாகாது. ஏதோ முடிவடையாத உணர்வு எஞ்சி இருக்கும் என்பது கேட்கும்போது தெரியும்.
டெபுஸியின் ’நீர் பிம்பங்கள்’ (Reflects dans l'eau from Images) இசை அப்படிப்பட்ட உணர்வை இன்று எனக்குத் தந்தது. மிகவும் தத்தளிக்கும் உணர்வு. ஒருவேளை இசையமைப்பாளர் இந்த உணர்வைத் தரவேண்டும் என நினைத்தாரோ என்னமோ? ஆனால், தொடங்கிய நொடியிலிருந்து மிகவும் சஞ்சலத்தை மட்டுமே இந்த இசை அளித்தது. மதிய வேளையில் அலுவலக வேலைகளின் இடைவெளியில் கேட்கக் கூடிய இசையில்லை. பல கார்டுகளை ஒன்றாக ஒலித்த சமயம் இசையின் ஸ்வர விலகல்கள் மட்டுமே அதிகமாக இருந்தது. ரொம்பவும் dischordant இரைச்சல். வேறொரு தருணத்தில் கேட்டால் நம் மனதைத் தொட்டுப் பார்க்கும் என நினைக்கிறேன். அதற்கான தருணம் வாய்க்க வேண்டும். கீழிருக்கும் காணொளியில் இதைக் கேட்கலாம்.
டெபுஸியின் புதுவகை நுணுக்கங்களை பின்னர் வாக்னரும் பிரயோகப்படுத்தினார். குறிப்பாக வாக்னரின் ’லே வல்கைர்’ எனும் இசை நாடகத்தில் chromatic harmony வகை டென்ஷன்களை உபயோகித்திருப்பதால் டெபுஸியே இதன் தந்தை என அழைக்கப்படுகிறார். வாக்னரின் நாடகங்களில் இதன் பிரயோகம் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.
அடுத்து, சோபினின் இசை A Flat Major மற்றும் C Sharp Minor பாடங்கள் (Etude in A Flat Major Op25, Etude in C Sharp minor Op.25). மிக ரம்மியமான தாலாட்டு இசை போல இருந்தன. ஆனால் இதிலும் சில அபஸ்வர துணுக்குகள் நவீன முயற்சி போலத் தோன்றியது. இசை தரும் மனவிலக்கமும் ஒருவகை உணர்வு தான்.
கடைசியாக வந்தது பீத்தாவனின் சொனாட்டா (D Minor Op 32). பீத்தாவனின் இசை மேல் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. லட்சிய இசைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இவரது இசையைச் சொல்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தது அவ்ரது தனியாத கனவு காணும் கலைஞர் எனும் முகம் தான். காது கேட்காமல் போனபின்னும் மிகப் பிரம்மாண்டமான இசையை எழுதியிருக்கிறார். குறிப்பாக அவரது கடைசி காலகட்டது இசை, நீல் ஆம்ஸ்ட்ராங் போல, a giant leap for mankind தான். இந்த சொனாட்டாவிலும் முதல் பகுதியில் வரும் தீவிரம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாகத் தோன்றியது. குறிப்பாக, 0:38 பகுதியிலிருந்து வரும் கருவை மீண்டும் மீண்டும் பல இடங்களில் கொண்டு இணைக்கும் அவரது பாங்கு ஆஹாகாரம் போட வைத்தது. நிச்சயம் கேட்க வேண்டிய ஒரு இசைத் தொகுப்பு.
ஏன் நவீன புது முயற்சி இசையை ரசிக்கும் மனநிலை நமக்கு ஒர் acquired taste ஆகவே இருக்கிறது? நம்மால் திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசை துணுக்குகள் உள்ள இசையை மட்டும்தான் ரசிக்கிறோமா? முணுமுணுக்க முடிகிற இசைத்துண்டுகள் தான் நம்மை பாடலுடன் அல்லது இசையுடன் மீண்டும் உறவுகொள்ள வைக்கும் அடிப்படை ரகசியமா? ரயில் தண்டவாளங்கள் போல எந்த மன நிலையிலும் நம்முள் சேராத இசை வகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றுக்கு பல சந்தர்பங்கள் அளிப்பது போல, இசையில் வரும் பல பிரயோகங்களும் நமக்கு பல சந்தர்பங்களை அளிக்கின்றன. ஏதேனும் ஒன்றைப் பிடித்து என் கதவைத் திறந்திட மாட்டாயா எனக் கேட்பது போல.
எதைக் கேட்டு பாதிக்கப்பட்டு ’இதயம் போகுதே’ பாடல் உருவானது என இளையராஜா மனம் திறந்திருப்பதை சமீபத்தில் பார்த்திருப்போம். எப்படி நாட்டுப்புற இசை சங்கதிகளை பாடல்களில் புகுத்தியுள்ளாரோ, அதே மாதிரி மேற்கத்திய சாஸ்த்ரிய இசை பாணியும் அவரது இசையில் நிரம்பியுள்ளன. arrangement எனச் சொல்லக்கூடிய பாணிமாற்றத்தில் மிகவும் தேர்ந்தவர். அதாவது, சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு பாணியில் அமைந்த இசையை, வேறொரு கருவியில் முற்றிலும் புது பாணியில் தரக்கூடியதைத் தான் arrangement எனக் கூறுவர். ராஜாவின் பின்னணி இசையில், ஒரு இடத்தில் தந்திக் கருவிகள் செய்யும் ஜாலத்தை வேறொரு இடத்தில் குழல் கருவிகள் செய்யும். அப்படி ஒரு விஷயத்தைத் தான் இந்த பாடலில் அவர் செய்துள்ளார்.
ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனியின் (Schubert Unfinished Symphony 8) முதல் பகுதியை இளையராஜா மேடையில் ஒருங்கிணைத்தார். பின்னர், அந்த இசையின் அடித்தள உணர்வு மாறாமல் பாடலாக மாற்றியதையும் செய்து காட்டியதும், நம்முன் நிகழ்த்தியதும் ஒரு பெரும் ரிக்கார்டிங் அறையில் இருந்து கவனிக்கும் சந்தோஷத்தை அளித்தது. கீழே ஷுபர்டின் Unfinished Symphony.
இன்று மதியம், லண்டன் இசை மாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புனித ஆன் தேவாலையத்தில் ரசித்த இசை - செயிண்ட் சான்ஸ் அமைத்த பியானோ ட்ரியோ (E minor Op 92)
பீத்தாவனுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான இசை அலங்காரங்களை அமைத்தது செயிண்ட் சான்ஸ் (Camille Saint-Saens, 1835-1921) எனும் பிரெஞ்சு இசையமைப்பாளர். மொசார்டை விட செயிண்ட் சான்ஸ் மிக அற்புதமான இசையமைப்பாளர் எனப் பல இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களுக்கான இனிய எளிமையான இசை பாணிகளை பிரயோகித்து இசையமைத்தவர் என மொசார்ட்டை சில இசை விமர்சகர்கள் குற்றம் சொல்கிறார்கள். தன்னியல்பாக இசையில் அமையக்கூடிய படைப்பியல்பை மட்டுப்படுத்தி சில சட்டகங்களுக்குள் அடைக்கப் பார்த்தவர் என்பதே அவர் மேலுள்ள குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்தார்?
ராக பிரயோகங்களையும் சாத்தியங்களையும் மிக விரிவாக வெளிப்படுத்தக் கூடியது கர்னாடக சங்கீத ஆலாபனைகள். லயக் கட்டுப்பாடில்லாமல் பாடகரின் கற்பனைக்கு ஏற்றார்போல ராகத்தின் சில விஷேசப் பிரயோகங்களை மிக விஸ்தாரமாக எடுத்துரைக்கும் இடம். கிட்டத்தட்ட ராகத்தின் தனிப்பட்ட இயல்பான சில சங்கதிகள் இதன் மூலம் பல தளங்களுக்கு பரவும். இதனாலேயே முன்னர் ஆலாபனை மட்டுமே பல மணி நேரங்கள் நீண்ட கச்சேரிகள் இருந்திருக்கின்றன. பல கச்சேரிகள் நள்ளிரவையும் தாண்டி அதிகாலையில் முடிவடைய இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. பாடகரது கற்பனையே இதன் எல்லை.
அதேபோல, தேவாலய இசையாகத் தொடங்கிய ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையும் பாடகர்களின் குரல் திறமையை நம்பியே இயங்கியது. க்ரிகாரியன் சாண்ட்ஸ், பாக்கின் மாஸ் போன்றவை பாடல் குழுக்களின் குரல்களது ஏற்ற இறக்கங்களையும் பெரிதும் நம்பியிருந்தன. காலப்போக்கில் வாத்திய இசையாக அவை மாறியபோதும் இசையமைப்பாளரின் கற்பனையைப் பொருத்து அவை பல திசைகளிலும் பயணிக்கும். மெல்ல, இசைக்கென புது கோட்பாடுகளை இசை விமர்சகர்கள் உருவாக்கினர். அதாவது சொனாட்டா, சிம்பொனி, கான்செர்டோ என இசையில் பல கட்டமைப்புகள் உருவாயின. அவற்றைக் கொண்டு தான் இசையை விளக்கவும், இசையைத் தர நிர்ணயம் செய்யவும் ஆரம்பித்தனர்.
தனது கற்பனை மூலம் பல இசைக் கோர்வைகளை உருவாக்கிய மொசார்ட், அவற்றை பல ‘பாணி’ புட்டிக்குள் அடைக்கத் தொடங்கினார். சொனாட்டா என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் - முதல் பகுதியில் வரும் ஸ்வரங்கள் கடைசி பகுதியிலும் வர வேண்டும் - என இசை விமர்சகர்கள் அமைத்த கட்டமைப்புக்குள் இசையை எழுதத்தொடங்கினார். இதனால் முதலில் அடிவாங்கியது அவரது சுயக் கற்பனையின் விஸ்தாரம். பல தரப்பட்ட இசை வகைகளை தன் குறுகிய காலத்துள் எழுத முடிந்தாலும் அவரால் பீத்தாவன் போல அசாத்தியமான படைப்புகளை உருவாக்க முடியவில்லை. காது கேளாமல் போனாலும், பெரும் கனவு உந்தித் தள்ள அளப்பெரிய படைப்பை உருவாக்க பீத்தாவன் முனைந்தார். அவரது சிம்பொனி ஐந்தின் தொடக்கத்தைக் கேட்டாலே இதன் சாத்தியங்களை நாம் உணர முடியும்.
ஜெர்மன் உலகம் இசைக்கு தந்த கொடை எனப் பல பெரும் இசையமைப்பாளர்களை அடையாளம் காட்ட முடியும். ஆனால், பிரான்சில் பீத்தாவன் போல அசாத்திய தரிசனம் நிரம்பிய ஒருவர் செயிண்ட் சான்ஸுக்கு முன்னர் இல்லை என்பதே இசை விமர்சகர்களின் கருத்து. அதனால் செயிண்ட் சான்ஸின் இசை ஐரோப்பிய இசையின் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.
நான் செயிண்ட் சான்ஸின் இசையை அதிகமாகக் கேட்டதில்லை. நான் விரும்பிப் படிக்கும் மேற்கத்திய இசை விமர்சகர் Alex Ross எழுதிய The Rest is Noise புத்தகத்தில் அவரைப் பற்றி படிக்கும்போது சில இசைத் தொகுப்புகள் கேட்டேன். அதற்குப் பிறகு அவரைத் தொடரவில்லை. ஆனால் இன்று நான் கேட்ட பியானோ ட்ரியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இனிமேல் செயிண்ட் சான்ஸின் இசையைத் தொடர்ந்து கேட்க வேண்டும் எனும் ஆசை பிறந்தது. அதற்கு ஒருசில காரணங்கள் என நான் நினைப்பது;
1. பியானோவின் அசாத்திய வேகம் மற்றும் பல தளங்களில் நடந்த அடிப்படை கருவின் விரிவாக்கமும் முக்கியமான காரணம். கீழிருக்கும் இரண்டு இசைத் துணுக்குகளையும் கேளுங்கள். முதல் துணுக்கு தான் முழு இசைக்குமான அடிப்படை கரு (இதிலேயே 1:24லிருந்து பியானோவின் ஸ்கேல் மாறுகிறது) இரண்டாவது துணுக்கில் இதே கரு எப்படி விரிவடைந்திருக்கிறது எனக் கேளுங்கள்.
2. பொதுவாக பிரான்ஸ் ஷுபர்ட், பிரான்ஸ் சோபின், ராபர்ட் ஷூமன் போன்றவர்களின் இசையில் இருக்கும் கற்பனாவாதம், திரும்பத் திரும்ப வெவ்வேறு வேகத்தில் வரும் மெலடிகள் போன்றவை ஆரம்பத்தில் கேட்க நன்றாக இருந்தாலும், தொடர்ந்து கேட்க மிகவும் அலுப்பாக இருக்கும். குறிப்பாக நாட்டிய இசை போல ஒரே இசைத் துணுக்கு பல வேகங்களில் வந்தால் இசையில் மாற்றமே இல்லாமல் ரொம்பவும் தட்டையாக இருக்கும். கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், சுவையான ஒரே ஒரு பதார்தததை மட்டும் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது போல சீக்கிரமே அலுத்துவிடும். (சில இசை விமர்சகளுக்கு மொசார்டின் இசை ஏற்றதாக இல்லை என்பதை இதை முன்வைத்து புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்)
செயிண்ட் சான்ஸ் கற்பனாவாதம் தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தாலும், அவரது இசையில் இருபதாம் நூற்றாண்டின் ‘நவ யுக’ அடோனல் வகை சோதனை முயற்சிகளும் உண்டு. அதே சமயம், நடன இசையின் துரித தாளங்களின் வெளிப்பாடுகளும் உண்டு. அதனால் இந்த இசை அலுக்கவில்லை - புதுப் புது கதவுகளைத் திறந்தபடி ஒரு கோட்டையை கண்டறிவது போல, இசை வெவ்வேறு புது திறப்புகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. கீழுள்ள இசைத் துணுக்கை மட்டும் கேளுங்கள் - ஏதோ இருபதாம் நூற்றாண்டின் ஜாஸோ இல்லை நம்மூரின் கமக இசை அலங்காரமோ எனச் சந்தேகம் வந்துவிடும்.
3. நாடக தருணம் போல இசையின் கடைசிப் பகுதியும் மிகுந்த டென்ஷனாக அமைந்துள்ளது. குறிப்பாக வயலினும் பியானோவும் உரையாடும் கடைசி ஐம்பது நொடிகள் அற்புதம்.
பொதுவாக மதிய நிகழ்வுகளுக்கு கூட்டம் சேராது என நினைத்திருந்தேன். ஆனால் இன்று உட்காரவே இடம் கிடைக்கவில்லை. சிறு அரங்கம் தான் என்றாலும் ஐம்பது நாற்காலிகளாவது இருந்திருக்கும். அதே அளவு மக்கள் நின்றபடியும் கேட்டார்கள். செயிண்ட் சான்ஸின் பல ரசிகர்கள் வந்திருந்தார்கள் என நினைக்கிறேன். நிகழ்ச்சி முடிந்ததும் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக கைதட்டல் நிற்கவில்லை.
வைணவ சம்பிரதாயத்தில் ‘எழுந்திரு போதும்’ எனச் சொல்லும்வரை பெரியவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்க வேண்டும் எனும் மரபு இருப்பது போல, சாஸ்த்ரிய நிகழ்வுகளில் கைதட்டல் தொடங்கியதும் இசைக்கலைஞர்கள் மேடையில் குனிந்து கைதட்டலை ஏற்று உள்செல்ல வேண்டும் எனும் மரபு உள்ளது. உள் சென்றபின்னும் கைதட்டல் தொடர்ந்தால் மீண்டும் மேடைக்கு வந்து கைதட்டலை ஏற்க வேண்டும். இன்று அந்த மூன்று இளம் கலைஞர்களும் கிட்டத்தட்ட நான்கு முறை மேடைக்கும் உள்ளுக்கும் நடையோ நடை என நடந்துவிட்டனர், அளவில்லா சந்தோஷத்துடன்.
காண்ட்ராக்ட் முடிந்த ஒரு இடைவேளைக்குப் பிறகு புது வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பழைய பிராஜக்டையே சரியா முடிக்கலை திரும்ப வந்து முடிச்சிட்டுப் போ எனக் கூப்பிட்டதால் அங்கேயே மறுபடியும் அடைக்கலம். போன மாதம் திடீரென காண்ட்ராக்ட் முடிந்து வேலை போனபோது, அடடா என்னடா இது புது அலுவலகத்தைச் சுற்றி பல முக்கியமான இடங்கள் இருக்கே அதையெல்லாம் பார்க்கலியே என வந்த எரிச்சலை இப்போது தவணை முறையில் சரி செய்துவருகிறேன். நான் வேலை செய்யும் செண்ட்ரல் லண்டன் அலுவலகத்தைச் சுற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் முதல் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்க உத்தேசம்.
1. சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, லண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாவது பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் அலுவலகம் இருக்கும் ஹால்பேர்ன் பகுதியில் தான் The Old Curiosity Shop எனும் கடை இருக்கிறது. குறைந்தபட்சம் அதையாவது பார்த்துவிடவேண்டும்.
2. லண்டன் நகரின் இசை விழா கடந்த வாரம் முதல் தொடங்கி விட்டது. பல தேவாலையங்களில் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ஏதேனும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீத நிகழ்வு நடைபெறும். சில சமயம் ஜாஸ் இசையும் உண்டு. அனுமதி இலவசம். இன்று ஷூமேன், பீத்தாவனின் நிகழ்வுக்காக புனித ஆன் தேவாலயத்துக்குச் சென்று வந்தேன்.
3. மற்ற இசை நிகழ்வுகள் பற்றிய அட்டவணையை இங்கு பார்க்கலாம்.
4. இவ்வருடம் நடக்கயிருக்கும் ஒலிம்பிக்ஸுக்காக லண்டனின் ஸ்ட்ராட்போர்ட் எனும் இடத்தில் பெரிய விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நடக்கும் நாட்களுக்குத் தான் டிக்கெட் கிடைக்கவில்லை, இப்போது காலியாக இருக்கும் மைதானத்தையும் அதைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் புது டவுன்ஷிப்பையும் பார்த்து வரலாமே!
5. சுமார் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட லண்டன் தரையடி ரயில் பாதைகளைப் பற்றிய மிக அற்புதமான கண்காட்சி பிரிட்டிஷ் நூலகத்தில் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. லண்டன் தரைக்குக் கீழே இயங்கும் 30 சதவிகித நகரத்தில், பாரீஸின் காடகோம்ஸ் போல பல பூதாகரமான நிழல் பகுதிகள் இருந்தனவாம். அவற்றைப் பற்றி இந்தக் கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
6. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் கப்பல்கள் தேம்ஸ் நதியில் இவ்வருடம் முழுவதும் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்குமாம். அதை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்?
* இன்றைய இசை நிகழ்ச்சி பற்றி ஓரிரு வார்த்தைகள்.
புனித ஆன் தேவாலயம் உலகப் புகழ் பெற்ற புனித பால் தேவாலயத்துக்கு மிக அருகே உள்ளது. இங்கிலாந்திலேயே இரண்டாவது பெரிய தேவாலயமான புனித பால் அருகே சிறு கீற்று போலிருக்கிறது புனித ஆன் தேவாலயம். வாடிகனின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவற்றின் கொள்கைகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட பிராட்டஸ்டண்ட் அமைப்பின் பிதா மார்டின் லூதர் வழி வந்த ஆங்கியேல தேவாலயங்கள் லூதரன் எனப் பெயர் கொண்டன. வாடிகன் நகரப் போப்பைத் தலைமையாக ஏற்றுக்கொள்ளாத இவர்களுக்கு ஆங்கிலேய லூதரன் அமைப்பு தான் இறை கொள்கைகளைத் தீர்மானிக்கிறது. இசைக் கலைஞர் மார்டின் லூதர் தொடங்கிய அமைப்பாததால் இந்த தேவாலயங்களில் இசை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.
குறிப்பாக, புனித ஆன் தேவாலயத்தில் இசைக்காக ஒரு அமைப்பு இயங்குகிறது. மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதம் மட்டுமல்லாது ஜாஸ் போன்ற வகைகளையும் இங்கு இசைக்கிறார்கள். ஆலயத்தின் அமைப்பும் இசை நிகழ்வுகளுக்கு ஏற்றார்போல விசாலமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பெரிய ஆர்கன் அமைப்புகளுடன், வெளிப்புற சத்தம் உள் நுழையாதபடியான கட்டிட அமைப்பும் கொண்டிருக்கிறது. எதிரொலி இசைக்குத் தடையாகக் கூடாது என்பதால் சில தேவாலயங்களில் ஆர்கன் பைப்புகள் விஷேசமான வடிவில் இருக்கும். மேற்கோபுரங்களும் அதற்கேற்றார்போல வடிவமைக்கப்பட்டிருக்கும். பரோக் அமைப்பின் கட்டிட வடிவமைப்பில் இவ்வகை இலக்கணங்கள் சாத்தியம். அப்படிப்பட்ட அமைப்புகளை இங்கும் பார்க்க முடிந்தது.மற்றபடி பெரிய அலங்காரங்களோ பிரதான காதிக் வகை வளைவுகளோ இங்கில்லை.
இந்த முறை லண்டனில் நடக்கும் இவ்வகை மதிய இசை நிகழ்ச்சிகள் மிக விரிவான இசைப்பாடல்களைக் கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்தும் மூவகை இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கும் ட்ரியோ அல்லது ஐவகை வாத்தியங்களாலான குவிண்டட் பாடல்கள் மட்டுமே. சிறு அறைக்குள் நடத்திவிடலாம் என்பதால் இவற்றை சேம்பர் இசை எனப் பகுத்துள்ளனர். குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு சிம்பொனி போன்ற அளவில் பெரிய இசையை நிகழ்த்திக்காட்ட முடியாது.
இன்று நடந்த இசை நிகழ்ச்சி - பியானோ ட்ரையோ. மூன்று வாத்தியங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் கருவியைக் கொண்டு தான் ட்ரியோவின் பெயர் வழங்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில் ராபர்ட் ஷுமனின் Fantasiestücke Op 88வும், பீத்தாவனின் Archduke ட்ரையோவும் இடம்பெற்றன. கீழுள்ள காணொளியில் அவற்றைக் கேட்கலாம். அவர்கள் இருவரும் பியானோ இசைப்பதில் வல்லுனர்கள். அதனாலேயே அவர்களது ட்ரையோ இசையில் பியானோ பிரதான பங்கு வகிக்கும்.
மேற்கத்திய சாஸ்த்ரிய இசையில் மிக முக்கிய்மாக கவனிக்க வேண்டியது - கருவிகள் நிகழ்த்தும் ஸ்ருதி மாறுதல்களும், தாள வேறுபாடுகளும் தான்.
ஒரு கருவி தொடங்கிய சில நொடிகளில் அடுத்த இரண்டு கருவியும் அதே இசையைத் தொடங்குவதால் கிடைக்கும் கால இடைவெளி சரியாக இருந்தால் தான் ஹார்மொனி எனச் சொல்லப்படும் ஒத்திசைவு சாத்தியம். சில சமயம் ஒரு கருவி ஏறுமுகமாக வாசிக்கும்போது மற்றொன்று கீழிறங்கும் - அப்போது அவை இரண்டும் சில புள்ளிகளில் சந்தித்துக்கொள்ளும். அவற்றை contrapuntal புள்ளிகள் என அழைப்பர். கேட்க இனிமையாக இருக்கும் இசையில் இவ்வகை ஒத்திசைவு மிக முக்கியமாகும்.
கீழுள்ள காணொளியின் தொடக்கத்தில் கவனியுங்கள். செல்லோ ஏறுமுகமாகச் செல்லும்போது, அதே இசையை வயலின் இறங்குமாக அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து வருவதால் மிக ரம்மியமான மெலடி ஊடல் போல கொஞ்சல் சிணுங்கல் கோபித்தல் போல உருவாகிறது.
அதே போல, கீழுள்ள ஷூமன்ன் ட்ரியோவின் கடைசிப் பகுதியை கவனியுங்கள்.
எல்லா இசைக் கருவிகளும் ஒரே நேரத்தில் மிலிட்டரி இசை போல தொம் தொம் எனத் தொடங்கினாலும், மெல்ல ஒவ்வொன்றும் பிரிந்து தனியாவர்த்தனம் செய்யத் தொடங்குகின்றன. அதற்குப் பிறகு அவை அனைத்தும் எப்போதும் இணையும் என நமக்கு டென்ஷன் தொடங்கிவிடும். இணைந்தால் தானே இனிமை! ஒரு முறை அதன் சுவையை அனுபவித்த நமக்கு அந்த ஒத்திசைவு எப்போது வரும் என ஏக்கம் உருவாகிவிடும். அதற்காகக் காத்திருக்கத் தொடங்குவோம். ஆனால் பாரபட்சமில்லாத இசையமைப்பளரோ தனித் தனி இசையை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிட்டாரே. ஆதார சுருதியிலிருந்து விரிவடைந்து வயலின் வேறெங்கோ பயணிக்கும்போது, செல்லோ கீழ் ஸ்தாயியில் வயலினுக்கு எதிர்புரமாக அல்லவா பயணிக்கிறது. வயலின் ஒரு நோட்ஸ் வரிசையை வாசிக்கும்போது, பியானோ வேறொன்றை இசைக்கிறது. ஆனால் ஆச்சர்யமாக, ஹோம் நோட் எனச் சொல்லப்படும் ஆதார ஸ்ருதியை வந்தடையும்போது எல்லாகருவிகளும் அதே நேரத்தில் அங்கு வந்து இணைந்துகொள்ளும். சில சமயங்களில் ஒரு கருவி முன்னணியாகவும் மற்றவை அதற்கு ஒத்தாகவும் அமையும். அப்படிப்பட்ட கருவிகளை accompaniment என வழங்குவர்.
கர்னாடக இசையில் ராகத்தின் பல விஷேசப் பிரயோகங்களை பலவிதத்தில் பாட முடிவது போல இங்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தத்தம் பயணத்தில் எங்கெங்கோ சஞ்சாரிக்கும். B Major என ஒரு இசையைச் சொல்லும்போது அதன் ஆதார ஸ்ருதியைத் தான் B Major எனும் கார்டைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்த B Major வந்தடைய தான் எத்தனை மேஜர், மைனர் வழிகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாத்தியக்கூறு. இசையமைப்பாளன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது எண்ணிலடங்கா சாத்தியங்களை விட்டுவிடுகிறான். அவையெல்லாம் சரியாக அமையும் எனச் சொல்லமுடியாது. முடிவில் எல்லாம் இணைந்துகொள்ளும் போது கேட்பவர்கள் அடையும் அமைதியைத் (அப்பாடா,முடிஞ்சுதுப்பா) தான் returning Home என ஆதாரச் சுருதியைப் பற்றி குறிப்பிடுவார்கள். வீட்டுக்கு திரும்பினால் எல்லாம் சுகமே என நினைத்திருக்கும் அப்பாவி ஸ்வரங்கள்.
கீழே கேளுங்கள் - ஆரம்பத்தில் ஒலித்த மார்ச்பாஸ்ட் ஒலி பாதியில் (3:14) திரும்பவும் ஆரம்பத்துவிட்டது. அதாவது ஒரு சுழற்சி முடிந்துவிட்டது என அர்த்தம். ஆனால் அதற்குப் பிறகு ஒவ்வொரு கருவியும் வேறு வகையான நோட்ஸ்களை வாசிக்கும். இதைத் தான் variations என அழைப்பர். அதாவது ஆரம்ப பகுதியில் வந்த அதே நோட்ஸ்களைக் கொண்டு அவற்றைச் சற்றே மாற்றியமைத்து வேற வித இசையை வாசிப்பார்கள். இதிலிருக்கும் சாத்தியங்கள் எண்ணிலடங்காதவை.
நான் யார் என் பெயரை மாற்ற? சில விஷயங்கள் எப்போதும் மாறாது யாரையும் குறை சொல்லவில்லை என்றாலும் என்னை விலக்க உன்னால் முடியாது பின் ஒரு நாள் எனக்குத் தெரிந்த அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். அடுத்த நாள் காலை ஜோ என்ற ஆணாக விழித்தேன்.
'We are awesome, each kickass and unique, we deserve rights and services, and we have something very important that only we can bring to the world' - Coyote Grace .
ஜோ ஸ்டீவன்ஸ் எனும் அமெரிக்க இசைக்கலைஞர் தன் பதினைந்தாவது வயதில் பாட்டெழுதத் தொடங்கினார். பல பதின்ம வயதுக் குழுக்களின் பாடல்கள் போல காதலை மையமாகக் கொண்டு அவரது பாடல்வரிகள் அமைந்திருந்தன. தன் காதலனுக்காக ஏக்கம், அவனது பாராமுகத்தை உடைக்க நினைக்கும் கண்ணீர் என பதின்ம வயதுச் சிறுமியின் ஏக்கங்களுக்கு வடிகாலாக அவை இருந்தன. ஆனால், அவர் எழுதிய சிறுவயதுப் பாடல்களைப் பிற்காலத்தில் படித்தபோது , அவரது காதல் மற்றொரு ஆண் மேல் கொண்ட காதல் அல்ல,அவருள்ளே புதைமணலாய் உள்ளடங்கிய ஆண் மேல் கொண்ட காதல் என்பது புரிந்தது.
சான் பிரான்சிஸ்கோவின் ரீஸ் மலை முன்பு நின்றிருந்தார் ஜோ. ரீஸ் மலைச்சிகரத்தில் காலங் காலங்களாக இறந்துபோயிருந்த எரிமலைகள் பல உள்ளன. அவற்றின் உள்ளே கணங்குகளாக மிச்சம் இருந்த சூடு இறுகி பாறைகளாக மாறியிருந்தது. அதை வேடிக்கைப் பார்க்க நண்பர்களுடன் ஜோ சென்றிருந்தார். முன்னொரு காலத்தில் அவை உயிர்ப்புடன் கொப்பளித்தபடி இருந்திருக்கும் என்ற நினைப்பு அவரது கற்பனையைத் தூண்டியது. உள்ளிருந்த இறுகிய கடும் நெருப்பாறு தன்னுடன் உரையாடுவது போலத் தோன்றியது. கரும் பாறைகளாலான மலைக்கு உள்ளே காய்ந்த நீரோடைப் போல பல விரிசல்களாக இருந்த நெருப்புக் குழம்புத் தடத்தை ஆச்சர்யமாகப் பார்த்தார். அவற்றின் காய்ந்து போன நெருப்பு வெடிப்புகளிலிருந்து குமறியபடி வெளியே சொல்லத்துடிக்கும் உணர்வின் உராய்வுகளை அவரால் உணர முடிந்தது.
அன்றிரவு ஜோ தூங்கவில்லை. பல வருடங்களாக அவருள் கேட்ட ஒலிகள், வெளிவரத்துடித்த உணர்வுகள்,முப்பரிமாணப் படங்கள் போலப் பிடிபடாமல் விலகியபடி மறைந்தன. தன் பெண்மையில் ஒளிந்திருக்கும் போலி மனவலிகள் எத்திசை நோக்கி பீறிடத் தொடங்கும் எனப் புரியாத குழப்பத்தில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். தான் ஆண் என்பதை உணரத் தொடங்கியது அப்படிப்பட்ட தனிமையான இரவுகளில் மட்டுமே எனப் பின்னர் அவருக்குப் புரிந்தது. பகலில் எல்லாரைப் போல சகஜமாக தன் நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்ல முடிந்தாலும் எரிமலை போல அவ்வப்போது தன் மனதில் தோன்றும் விசித்திர ஆசைகளுக்கு அர்த்தம் கொடுக்க முடியாமல் தவித்தார்.
தன் இருபதாவது வயதில் நண்பருடன் பயணம் செய்த வண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றபோது ஜோ அதை சரிசெய்ய முற்பட்டார். பெண்களால் முடியாத காரியம் என நண்பர் கேலி செய்ய, ஒரு மணிநேரத்தில் பழுதைச் சரி செய்தார். பல பெண்கள் ஆண்களைப் போலக் காரியங்கள் செய்தாலும், தன் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருந்தார். ஆண்கள் செய்யும் காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாது அவர்களைப் போலவே உணரத் தொடங்கினார் என்பதே அந்த மாற்றம். ஜோவின் நண்பர்கள் இந்த வித்தியாசத்தை உணர சிறிது காலமாயிற்று. தன்னிலிருந்து வெளிப்பட நினைக்கும் விசித்திரத்தைக் கண்ட மிரட்சியில் பல இரவுகள் அவரால் தூங்க முடியவில்லை.
ஜோ ஏற்கனவே கலிபோர்னியா மாகாணக் கிளப்புகளில் புகழ் பெற்ற பாடகராக இருந்தார். வணிகமயமானப் பல்லூடகத்தின் ஜொலிப்பில் மயங்கிக் கொண்டிருந்த சில புகழ் பெற்ற நடன அரங்குகளை தனது கிராமியப் பாடல்களால் ஈர்த்துக்கொண்டிருந்தார் . பல ராக் குழுக்களால் சூழப்பட்ட கலிபோர்னியாவில் இப்படிப்பட்ட கிராமிய இசையும் கொஞ்சம் பிரபலமாக இருந்தது. கிதாரின் கம்பி அதிர்வுகளுடன் இயல்பாகப் பாடி வந்த ஜோவை தங்கள் வீட்டில் பாடும் பெண்ணை உற்சாகப்படுத்துவது போலப் பலரும் பாராட்டினார்கள். மேலும் அவரது குரலின் மிக இயல்பான குழைவுகளால் பாடலுக்கு வேண்டிய உணர்வுகளை கொண்டு வரமுடிந்தது.
இசையுடன் வாழ்வைக் கடத்தினாலும், தன் உள் உணர்வுகளை அவரால் முழுவதும் போர்த்தி அடக்க முடியவில்லை. உறைப்பனியின் விரிசல் போல பெரும் சத்தத்துடன் இரு உணர்வுகளுக்கிடையே உராய்வு ஏற்படத் தொடங்கி, ஒன்று மற்றொன்றை வென்று கொண்டிருந்தது. ஆணாக மாற விழையும் பெண்ணாக தன் நண்பர்கள் குழுமத்தில் அடையாளம் காணப்பட்டார். இயல்பு வாழ்க்கையில் இல்லாத விசித்திரம் இல்லை இது என சிலர் சமாதானம் சொன்னாலும் அவரது உண்மையான உணர்வுகளை பொதுமக்கள் புரிந்துகொள்வார்களோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. மெல்ல அவரது அடையாளம் நண்பர்களுக்கிடையே கசிந்து, பல கிளப்புகளில் அவரது நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் அவருடைய விசித்திரமான பாவனைகள் மட்டுமே காட்சிப் பொருளானது. அவரது பாடல்களும், இசையும் தேவையில்லாததானது.
தன்னைச் சுற்றி இருந்தவர்களின் விசித்திரப் பார்வை ஜோவின் ஆர்வங்களை முடக்கியது. அவருக்குள் தொடங்கிய எண்ணங்கள் குழப்பமான சொற்களாகத் தொடங்கி உரையாடல்களாக தனக்குள்ளேயே முடிவதைக் கண்டார். தன் சுயயுணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க போதை மருந்து உட்கொள்ளத் தொடங்கினார். நாளடைவில் சமூகத்தின் உதாசீனம் அதிகமாகப் போதை பழக்கத்துக்கு அடிமையாகி புது நிகழ்ச்சிகள் நடத்த இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தீவிர உளச் சிக்கல்களால் தற்கொலைக்குப் பலமுறை முயன்றார்.
இந்நிலையில் அவருடன் 'On Beach side' கிளப்பில் முன்னர் வேலை செய்த இங்கிரிட் எலிசபெத் எனும் பாடகியை சந்தித்தார். ஜோவின் பெரிய ரசிகையாக அறிமுகமானாலும் அவளது அற்புதமானக் குரலால் கிளப்பின் நிரந்தர பாடகியாகச் சேர்ந்திருந்தார் இங்கிரிட். ஆனால், அச்சமயத்தில்தான் ஜோ கிளப்பிலிருந்து விலகத் தொடங்கியிருந்தார். சோர்வான ஜோவைப் பார்த்த இங்கிரிட் மிகவும் வருத்தமடைந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கத் தயாராக இருக்கும் சில குழுக்களைப் பற்றிச் சொன்னார்.
ஜோவின் சிக்கல் அதுவல்லவே. ஆணாக மாற உந்தும் அவரது உணர்வுகளை இங்கிரிடிடம் விளக்க முற்பட்டுத் தோற்றுப்போனார். தனிமையில் தன் உணர்வுகளை சில பாடல்களால் தொகுக்க முற்பட்டதைச் சொன்னார். ஜான் லெனன், பாப் டிலன் போன்றவர்கள் எழுதிய கவித்துவ வரிகளைப் போல சில மானுடப் பிரச்சனையை எழுத முற்பட்டிருக்கும் ஜோவின் பாடல்கள் அவளை ஆச்சர்யப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் ஒரு புது இசைக் குழு தொடங்கும் திட்டத்ததுடன் ஜோவை சந்தித்தாள். எப்படிப்பட்ட சமாதான வார்த்தைகளும் ஜோவை சமநிலைக்குக் கொண்டு வராது என உணர்ந்த அவள் 'FtM ' (Female to Male ) எனும் கலிபோர்னிய திருநங்கைக் குழுவைச் சந்தித்து ஆலோசனைக் கேட்டாள்.
முதலில் ஜோவுக்கு இதில் நம்பிக்கையில்லாவிட்டாலும், சில ஹார்மோன் மாற்றங்களால் தன் நிலைமையைச் சரிசெய்து ஆணாக மாற முடியும் எனப் புரிந்தது. ஆணாக மாற நினைக்கும் பெண்மையின் வழியைப் புரிந்த சிலரை FtM வழியாக சந்தித்தார். சில மாதங்களில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்த FtM கிளினிக் சென்று சேர்ந்தார்.
ஹார்மோன் சிக்கல்களை உடற்கூறு பிறழ்வு நிலையாகப் பார்க்காமல், மனோரீதியாகவும் சரிசெய்ய வேண்டும் என்பது இந்த சிகிச்சையின் அடிப்படை எனப் புரிந்துகொண்ட ஜோ இங்கிருந்த கம்யூன் எனப்படும் சங்கம மனக்கட்டுப்பாடு நிலையத்தில் சேர்ந்துகொண்டார். உணர்வுகளை ஒருமுகப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் பயிற்சியின் மூலம் தன் சிக்கல்களை சமாளிக்கக் கற்றுக் கொண்டார்.
உணர்வுகளில் ஏற்படும் மாற்றத்தை மட்டும் இந்த சிகிச்சையின் வெற்றியாகக் கருதினாலும், அவரது உடற்கூறுகளில் அது பலவித மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. ஒரு பாடகராக அவருக்கு சிக்கல் மிகுந்த காலகட்டமானது. பலவித ஹார்மோன்களின் பழக்கத்தால் குரல் உடைந்ததோடு மட்டுமல்லாது பெண்மையின் நெளிவுகளையும் இழக்கத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் பெண்மையின் குழைவும் ஆண்களின் கார்வையும் ஒன்றாகக் கலந்து அவரது குரலை தனித்துவமாக்கியது. ஜோவுக்கு இந்த மாற்றம் முதலில் பிடிக்கவில்லை என்றாலும் நாளடைவில் தன் அடையாளமாக அதை மாற்றிக்கொண்டார். இந்த இரு குரல் வேறுபாடுகளையும் தனது தகுதியாக்கிக் கொண்டு பல பாடல்களை பதிவு செய்யத் தொடங்கினார்.
நல்ல இசையை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தாண்டி தான் அனுபவித்த வலிகளைப் பாட்டில் புனைய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகமானது. கம்யூனில் இருந்த நாட்களில் மற்றவர்களது கண்ணீர் கதையைக் கேட்டு திருநங்கைகளில் மறு உலகத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். சொந்தங்களின் வெறுப்பு, நண்பர்களின் கேலி, சமூகத்தின் அலட்சியங்கள் அனைத்தையும் ஒருசேர அனுபவிக்கும் இவர்களது வாழ்வில் உடல் சிக்கலை விட மன சிக்கலைக் களைவது மிகவும் அத்தியாவசியமானது என்பதைப் புரிந்துகொண்டார். சரியான அடையாளத்தை வழங்காவிட்டால் வெறுப்பின் விளிம்பில் தற்கொலை செய்துகொள்ள முனைவார்கள். சமூகத்தில் மூன்றாம் பாலுக்கான அவசியத்தை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதென அவரது கம்யூன் அனுபவங்கள் உணர்த்தியது. ஆணாக மாறி சவுகரியமாக வாழலாம் எனும் அவரது நினைப்பை உதறினார். தன் இசை, தன் அடையாளமாக மாறியது போல, தன் வாழ்வின் வலி மூன்றாம் பாலின் அடையாளமாக உருமாறவேண்டும் என்பதை உணர்ந்து இங்கிரிட் எலிசபெத்துடன் அதற்கான வேலையில் இறங்கினார்.
2004 ஆம் ஆண்டு 'Coyote Grace ' எனும் குழுவை சான் பிரான்சிஸ்கோவில் இருவரும் தொடங்கினர். ஏற்கனவே Queen , Lipstick Conspiracy போன்ற குழுக்கள் இதைப் பற்றிப் பேசி வந்தாலும் திருநங்கைகளின் பிரச்சனை அக்குழுக்களின் அடையாளமாக மாறவில்லை. முக்கியமாக, சிகிச்சை மூலம் சமூகத்தின் இரு பாலில் ஏதேனும் ஒன்றுக்கு மாற வேண்டும் என்ற விழைவே இக்குழுக்களின் முக்கியமான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக லிப்ஸ்டிக் கான்ஸ்பிரசி குழுவினர் 'Best Girl Band' எனும்பரிசை 2004 ஆம் ஆண்டு பெற்றார்கள். பெண்ணாக மாறிய ஆண்களின் பிரச்சனையைப் பேசுகிறது என இக்குழு அறிவித்தாலும் இப்பரிசை ஏற்றுக்கொண்டதன் மூலம் பெண்பால் குழுவாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இதை ஜோ வெறுத்தார். அதேபோல சான் பிரான்சிஸ்கோ கார்டியன் பத்திரிகை 2008 ஆம் ஆண்டு 'Coyote Grace' குழுவுக்கு இப்பரிசை வழங்க வந்தபோது ஜோ அதை மறுத்துவிட்டார்.
திருநங்கைகள் அனுபவிக்கும் வேதனை, உதாசீனத்தின் சிக்கல்கள், சமூகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பற்றிப் பேசும் முக்கியமான குரலாக மாறவேண்டும். சமூகப் புறக்கணிப்புக்காக தங்கள் அடையாளங்களை மறைக்கக் கூடாது. இவர்களது வாழ்வியல் சிக்கல் சமூகத்தில் எல்லாரும் உணரவேண்டிய சிக்கலே என்பதை ஜோ அவரது இசை மூலம் இன்று வலியுறுத்தி வருகிறார். அவரது குழு மிக முக்கிய எதிர்குரலாக, மூன்றாம் பாலுக்கான ஆதரவை பல இசை நிகழ்வுகள் மூலம் முன்வைத்துவருகிறது .
கிதார் வாசிக்க நினைத்ததை விட டிரம்ஸ் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதாக ஜோ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆனால் சிறுவயதில் பெண்ணாக இருந்ததால் அது நிறைவேறாமல் போனது எனக் குறிப்பிடுகிறார். சமூகத்தில் பால் அடையாளங்களால் நிறுவப்படும் சில தடைகளுக்கு ஜோ முன்வைக்கும் காரணம் மிகப் பொருத்தமானது.
காமம் காதலாக மாறாத நாகரிதத்தில் பால் திரிபுகளால் கட்டமைக்கும் சமூக அங்கீகாரங்களுக்கு இடமில்லாமல் இருந்தது. சில காரியங்களை ஆண் செய்யக்கூடாது என முன்வைக்கும்போது மற்ற பாலினருக்கு புது தடை உருவாகிறது. இத்தடைகள் சமூக ஒழுங்குகளாகவும் , மேலான நாகரிகத்தை உருவாக்கும் படிகற்களாகவும் ஆண் மையச் சமூகத்தில் பார்க்கப்படுகிறது. மனிதனின் கலைப்பார்வையிலும் பாலினருக்கான பிரத்யேகப் பிரிவினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும், இக்காலகட்டத்தில் அவற்றின் எல்லைக்கோடுகள் காணாமல் போய்விட்டன என்பது பலரது எண்ணம். ஆனால் அது உண்மையல்ல என்பது ஜோவின் வாதம். ஜோவின் டிரம்ஸ் ஆசை இதன் அடிப்படையில் தொடங்கியிருந்தாலும் கனவாக மட்டும் இருந்தது.
சத்தமான இசை, நேரடியான பாடல் வரிகள் போன்றவை ஆண்பால் வார்ப்புக்குத் தகுந்த இசையாக பார்க்கப்படுகிறது. மென்மையான, உளக்குறிப்பை பூடகமாக முன்வைக்கும் பாடல் வரிகளை பெண்பாலினர் முன்வைப்பார்கள் எனப் பொதுவான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டினா டர்னர் போல வெகு சிலரைத் தவிர, ராக் போன்ற பகுப்பிசைகளில் ஆண்களது பங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் கற்றுக்கொள்ள நினைக்கும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிதார் போன்றவை போர் மற்றும் ராணுவத்தில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் போன்றது என சில சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.கென்னிஜி, லியானால் ரிச்சி போன்ற கலைஞர்கள் மென்மையான இசைக்கும், பூடகமான பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் வெகு சில ஆண்களே இந்த விலகல் விதிக்குள் இயங்குகிறார்கள்.
இதனால் ஆண் பாவனையில் மட்டுமே பல பெண் கலைஞர்களால் ஆண் மைய இசையை முன்வைக்க முடிகிறது. பில்லி டிப்டன் எனும் அமெரிக்க பெண் தான் சாகும்வரை ஆண் வேடமிட்டு ஜாஸ் கலைஞராக இசைத்துறையில் ஈடுபட்டார். இதனாலேயே அவர் புழங்கிய ஜாஸ் குழுவிலும் ஆண் மையக் கருக்களையே தேர்ந்தெடுக்க முடிந்தது. தன் இயல்பாகப் பெண்பால் இசை வடிவங்களை அவர் பரிசோதித்துப் பார்க்கவில்லை. ஆணாக மாறியதால்தான் இப்படிப்பட்ட விலகல் இசையில் ஈடுபட்டாரா என்பது கேள்விக்குரியதே. ஒருவிதத்தில் சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப தன் மாற்றத்தை கலைவடிவத்திலும் ஏற்றிப் பார்த்தார் எனச் சொல்லமுடியும். இவரை மையமாக வைத்து 'Trumpet' எனும் புனைவை எழுதிய ஜாக்கி கே இப்படிபட்ட திரிபுகளுக்கான சாத்தியங்களைத் தன் நாவலில் பேசியிருக்கிறார்.
இதைத் தவிர ஆண் கலைஞர்கள் இயற்றும் பேசு பொருளுக்கு பெரிதாகச் சமூகத் தடைகள் இருந்ததில்லை. தன்னியல்பாக உள்ளத்தின் ஆசைகளை, கனவுகளை, நம்பிக்கை/அவநம்பிக்கைகளைப் பேசுவதற்கு பெண் கலைஞர்கள் பூடகமான வெளிப்பாட்டு மொழியை கையாளவேண்டியுள்ளதை இசைக்கான பெண் பால் வார்ப்பாக சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.
இவற்றைக் கொண்டு திருநங்கைகளுக்கான அடையாள இசையின் அடிப்படைகள் உருவாக வேண்டும். ஆண் மையச் சமூகத்தின் அதிகாரப் போக்குப்படி, பெண்பாலைக் கூட்டு சேர்த்து, மூன்றாம் பாலுக்கான விதிகள் உருவாக்கப்படுவதை ஜோ போன்ற இசைக்கலைஞர்கள் எதிர்க்கிறார்கள். மெல்ல, பல காலங்களாக விளிம்பில் இருந்த பெண்பால் வார்ப்புகள் திரண்டெழுந்து மூன்றாம் பாலுக்கான சட்டங்களை, சமூக அங்கீகாரங்களை உருவாக்குகிறார்கள். ஜோ போன்ற இசைக்கலைஞர்கள் இவற்றுக்கான எதிர்குரலாக இன்று உருவாகியுள்ளார்கள். தங்களுக்கான ஆட்டவிதிகளை உருவாக்குவதற்கு சமூகத்தில் தங்கள் நவீன அடையாளத்தை நிறுவ வேண்டியத் தேவையை உணர்கிறார்கள்.
உணர்வாலும் உடற்கூறுகளாலும் இருவித பால் அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் இவர்களது இசையின் அடிப்படை இப்படிப்பட்ட சிக்கல்களிலிருந்தே உருவாக முடியும். அவர்களுக்கான சமூக அந்தஸ்து தோன்றும்வரை, இப்படிப்பட்ட இசையின் எல்லைகள் விரிந்துகொண்டே தான் இருக்கும். அவர்களுக்கான வெளி உருவாகும்போது, சமூகத்தின் அடுக்குகளில் இணைந்து மூன்றாம் பாலுக்கான உண்மையான கலை வெளிப்பாடுகள் சாத்தியமாகும்.
சிறு மரம்
சிறு மரம், சூரியன் இங்கிருக்கிறான் இவ்விடத்தில் நீ நடப்பட்டதற்கு காரணமுண்டு. நீ இன்று பலகீனமாக சின்னதாக இருக்கலாம், உன் வேர்கள் ஆழத்துக்குச் செலுத்தி தழைப்பாய். நீ இந்த உலகைச் சேர்ந்தவன், இந்த அழகான நாளுக்கும் உரியவன்.
'நாங்கள் மிகச் சிறு கும்பல் தான். ஆனால் எங்கள் இசை மூலம் திருநங்கைகளின் வாழ்வில் ஒரு அடையாளத்தை, அர்த்தத்தை உருவாக்க நினைக்கிறோம். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை உலகில் எல்லாரும் உணர வேண்டும். எங்கள் எதிர்காலம் முட்டுச் சந்தில் முடிவதல்ல. எங்கள் வாழ்வே சமூகத்துக்கு வழிகாட்டிதான். சிறு துளியளவு செயல்பாடு இருந்தாலும், இக்காலகட்டத்தில் சமூகத்தின் மாற்றுக் குரலாக நாங்கள் இருக்கிறோம் என்பதில் எங்கள் தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகமாகிறது. எங்கள் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் மூலம் இந்த சமூகப் பிரச்சனையை நாங்கள் பல இடங்களுக்கு எடுத்துச் செல்கிறோம். ஒருவிதத்தில் எங்கள் சந்தோசம், தன்னம்பிக்கை, திடமான உடல்மொழி போன்றவை எங்களை ஒதுக்க நினைக்கும் சமூகத்துக்கான பதில். அதுவே எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும். '
இன்னிக்கு அதிகம் பேச்சு கிடையாது. ‘அப்பராம பக்தி எந்தோ கொப்பரா மா’ தியாகராஜர் பாடலின் பல உருவாக்கங்களைக் கேட்டு மகிழலாம். ’ராக சாகா’ தொகுப்புக்குப் பிறகு வி.ஸ்.நரசிம்மன் தன் தந்திக்குழுவினருடன் பல சங்கம இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் கேட்டு ரசித்தது ‘Seamless Strings’. இதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதவேண்டும்.
கீழுள்ளதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். அந்த வயலின் (யாரு?) ’மதுரமணி’ குரலையும் தாண்டுகிறது. தியாகராஜரின் ராம பக்தி போல வேதம் ஐயரின் பக்தியில் ஊறியவரது பாடலை என்ன சொல்வது?
இன்றிரவு சவுத் பேங்க் சென்டரில் மாஹ்லரின் சிம்பனி-6 கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இசைத்தகடுகளில் கேட்பதை விட அரங்கத்தில் வாசிக்கப்படும் இசை மிக வித்தியாசமான அனுபவமாக எனக்கு இருந்துள்ளது. அதனால் முடிந்தவரை அரங்குக்குச் சென்று கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். சவுத் பேங்க் செண்டரில் மாஹ்லரின் நூற்றாண்டு விழா நடப்பதால் எங்கெங்கும் கட்-அவுட் வைக்காத குறை. தேம்ஸ் நதிக் கரையை ஒட்டி இருக்கும் சவுத் பேங்க், நான் ஐந்து மணிக்கு நுழையும் போது விழாக் கோலத்தில் குதூகலமாக இருந்தது.
தேம்ஸ் நதியில் நிறுத்தப்பட்டிருந்த இசைப் படகுகள், கரையை ஒட்டி அமைந்திருந்த ’பார்கள்’, ஆங்காங்கு வாத்தியங்களை வாசித்துக்கொண்டிருந்த பஸ்கர்ஸ், இசைக்குக் கட்டுப்பட்டு ஆடிக்கொண்டிருந்த தண்ணீர் ஜாலங்கள் என சவுத் பேங்கின் வாசல் திருவிழா போலக் காட்சியளித்தது. மாஹ்லரின் சீசன் சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பது தெரிந்தாலும், இன்றுதான் அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. சிம்பனி இசை நிகழ்ச்சி ஏழரை மணிக்குத்தான் தொடங்கும் என்பதால் அதுவரை அங்கிருந்த கட்டிடங்களைச் சுத்திக்கொண்டிருந்தேன்.
பத்து வருடங்களுக்கு மேலாக, லண்டனின் கலை கலாசார சங்கமமாக சவுத் பேங்க் செண்டர் உள்ளது. 1950களில் இருந்த பிரான்ஸின் லெஃப்ட் பேங்க் கலாச்சார மையமாக இருந்தது போல் இப்போது சவுத் பேங்க் பகுதி மாறி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலக்கிய சந்தை, பிரபல எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு, ஓவியக் கலைஞர்களின் நவீன ஓவியப் பொருட்காட்சிகள், செவ்வியல் மட்டுமல்லாது ராப், ராய் போன்ற நவீன உலக இசை அரங்கேற்றம் என கலை உலகின் சகலத்தின் அச்சாணி இங்கு தான் சுழன்றுகொண்டிருக்கிறது.
அரங்குக்குள் நுழைந்தால் ஒரு கணிப்பொறி நிறுவனமோ, ரோபோக்களின் தொழிற்சாலையோ என பிரமிக்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்தின் சகலத்தையும் பயன்படுத்தியுள்ளது தெரிகிறது; ரத்தம் வருமளவு கட்டிங் எட்ஜ் ப்ளீடிங் எட்ஜாக காட்சியளிக்கிறது. அரங்குக்குள் தொலைந்து போனால், அங்கிருக்கும் ‘கியோஸ்க்’ எனப்படும் கருவியில் கேட்கலாம்/தட்டச்சு செய்து கண்டுபிடிக்கலாம். உச்சரிப்பைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப் பட்டாலும், நம் பட்லர் இங்கிலீஷை இரண்டொரு முயற்சிக்குப் பிறகு சரியாகக் கண்டுபிடித்துவிடுகிறது. ஒரு முறை பதிவு செய்துவிட்டால், கவலை தீர்ந்தது. ஐ கேன் வாக் இங்கிலீஷ், டாக் இங்கீஷ் தான் ! சமத்து!
அதே போல், முன் தினம் நடந்த நிகழ்வுகளை சுருக்கமான காணொளியாக ஆங்காங்கு ஓடவிடுகிறார்கள். நமக்கு வேண்டியவற்றை நம் ஐபாடில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். முழு நிகழ்ச்சியையும் கட்டணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் முடிந்தவுடனேயே இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மெல்ல என் கால்கள் ஓவிய கூடாரத்துக்குள் நுழைந்தன. சவுத் பேங்கிலிருந்து பதினைந்து நிமிட நடையில் டேட் நவீன ஓவிய காட்சியகம் (Tate Gallery) உள்ளது. பாரிஸ் லூவருக்குப் பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த டேட் காலரியும் தேம்ஸ் நதிக்கரையில் உள்ளது. இறை தூதர் பாலின் தேவாலையத்திலிருந்து மில்லனியம் பிரிட்ஜ் எனப்படும் பாலத்தின் வழி தேம்ஸைக் கடந்தால் டேட் காலரி வாசலில் முட்டி நிற்போம். காலரியின் கதவுக்கு எதிரேயே ஒரு சந்து போகிறது. அதில் நுழைந்து மறு பக்கம் வெளியே வந்தால் டேட் நவீன ஓவியக்கூடம் இருக்கிறது. இவ்வளவு அருகருகே பல கலைக் கூடங்கள் இருப்பதால் சவுத் பேங்குக்கு மவுசு ஜாஸ்தி. 2000இல் மில்லினியம் பிரிட்ஜ் கட்டப்பட்ட சில நாட்களிலேயே ஊஞ்சலாடத் தொடங்கியது. அதைப் பிடித்து நிறுத்தி அஸ்திவாரத்தை பலப்படுத்தி சில மாதங்களில் மீண்டும் திறந்தார்கள். இன்று வரை மூச்! ஒரு ஆட்டமில்லை. சில வருடங்களுக்கு முன் அங்கு முதல் முறை சென்றபோதே எனக்குப் பிரச்சனை புரிந்துவிட்டது. டேட் காலரி வாசலைத் திறந்தவுடன் பிரிட்ஜ் , அது முடிந்தவுடன் நீண்ட தெரு! தெருவுக்கு நேரே கற்பூர வாசனையுடன் கமகமவென ஒரு சின்ன பிள்ளையார் சிலை வைக்ககூடவா யாருக்கும் தோன்றவில்லை?
டேட் அளவுக்கு இல்லாவிட்டாலும் சவுத் பேங்கின் ஓவியக் கூடம் தற்கால ஓவியங்களின் தொகுப்பாக உள்ளது. அனிஷ் கபூர், ரெளலியா போன்ற பிரபல ஓவியர்களின் கண்காட்சியும் இங்கு நடத்தப்படுகின்றன. இங்கிருக்கும் ஓவியக்கூடத்தில் ரவுண்ட் கட்டி பல ஓவியர்கள் சுற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் சென்ற போது ஏதோ ஒரு புரியாத மொழியில் மிக மிக நவ-நவீன ஓவியங்கள் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு மின்னிக்கொண்டிருந்தது. நான் புரியாமல் வலம் வருவதை பார்த்து ஓவியம் வரைவதையே குறுந்தாடி ஓவியர் நிறுத்திவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் உள்ளே நுழையவில்லை. இருபது பவுண்ட் தப்பித்தது.
நேரம் ஏழேகால் ஆனபோது ராயல் ஃபெஸ்டிவல் அரங்குக்குச் சென்றுவிட்டேன். ஒரு நிமிடம் தாமதாக வந்தால் கூட இடைவேளை வரை உள்ளே நுழைய முடியாது. மாஹ்லரே வந்தால் கூட இது தான் கதி. உள்ளே நுழைந்து என் இருக்கையில் உட்கார்ந்தேன். இந்த அரங்கத்துக்குப் பல முறை வந்திருக்கிறேன். பண்டிட் ரவிஷங்கரின் சிம்பனி அரங்கேற்றமும் இங்கு தான் நடந்தது. ஐரோப்பாவில் மிகத் துல்லியமான ஒலி அமைப்பு கொண்ட அரங்கம் என பிபிஸி மியூசிக், கிராமஃபோன் போன்ற இசை இதழ்கள் உத்திரவாதம் அளித்திருந்தன. ஒலி அமைப்புக்குத் தக்கவாறு அமைந்த அரங்கு, அதிக எதிரொலி இல்லாத சுவர்கள் என இசைக்கு உறுதுணையாக கட்டிடம்.
சரியாக ஏழரை மணிக்கு மாஹ்லரின் சிம்பனி-6 தொடங்கியது. ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சிம்பனி இசை ஆட்கொண்டுவிட்டது. அதற்கு இசை ஒரு காரணம் என்றால், ரசிகர்களின் அமைதி மற்றொரு காரணம். அதைத் தவிர ஆறரை மணி அளவில் மாஹ்லரின் சிம்பனி பற்றி அரைமணி நேரம் பிரசங்கம் இதே அரங்கில் நிகழ்ந்திருந்தது. அதை கவனிக்காமல் ஓவியக் கூடத்தில் பேமாரம் போல் சுற்றியிருக்கிறேன். கிட்டத்தட்ட சிம்பனி கேட்க வரும் அனைவரும் இந்த முன் பிரசங்கத்தைத் தவற விடமாட்டார்கள். இசைக்கலைஞர்களின் அறிமுகம், அவர்களது பங்கு, வாத்தியக்கருவிகளின் ரோல் என்னென்ன போன்றவற்றை இசை ஒருங்கிணைப்பாளர் விவரிப்பார். இதனால் சிம்பனிக்கு வரும் பெரும்பான்மையானவர்கள் இசை நுணுக்கங்கள் புரிந்த ’ஆஹா,பேஷ், பலே!’போடும் மிகத் தீவிர ரசிகராக இருப்பார். அந்த இரண்டு மணிநேரங்கள் இசையைத் தவிர எதுவும் அவருக்குத் தோன்றாது. பொதுவாகவே இப்படிப்பட்ட கூட்டம் அமைந்தால் இசையை ரசிக்க சரியான மனநிலை தானாகவே அமைந்துவிடும்.
டிராஜிக் என்றழைக்கப்படும் இச்சிம்பனி பெயருக்கேற்றார்போல் மிக இருண்மையான இசை வடிவங்களைக் கொண்டது. கொண்டாட்டம் என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்பது மாஹ்லருக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும், இதை மாஹ்லரின் darkest என விமர்சகர்கள் வருணிக்கிறார்கள். இசையைக் கேட்கும்போது நமக்கும் அந்த எண்ணமே தோன்றும். மிக உக்கிரமான கிளாரினெட்,ஓபோ, வயலின் இசைத் துண்டுகளுக்கிடையே ஒலிக்கும் மிலிட்டரி டிரம்ஸ் யுத்த காலத்தையோ பஞ்ச காலத்தையோ நமக்கு நினைவூட்டும். மாஹ்லரின் பல இசைத் துணுக்குகளை சார்லி சாப்ளின் படங்களின் பின்னணியாக பயன்படுத்தியுள்ளனர். சாப்ளினின் ஆவாரா சோகத்துக்கு இதை விட சரியான இசை அமைந்திருக்காது என்றே தோன்றுகிறது.
வயலின், கிளாரினெட் வாத்தியங்கள் நிறுத்தி மூச்சு வாங்கிக்கொள்ளும்போதெல்லாம் மெல்லிய ஓபோ/புல்லாங்குழல் இசை சூழ்நிலையைக் கலைத்துப் போட்டுவிடுகிறது. மிக bleak இசையாக நம் சகஜ எண்ணத்தைக் குலைத்து விடுகிறது. பாதி கேட்கும்போதே இசை நிகழ்ச்சி முடிந்து எப்போது அந்த இறுக்கம் குறையும் என்ற தவிதவிக்கும் எண்ணம் உருவாகிவிடும்.
நம் எதிரிக்கும் வரக்கூடாத கொடுமையான சோகம் யாருக்கோ வந்துவிட்டது போன்ற ஒலி மயக்கம். லியானார்ட் பெர்ன்ஸ்டைன் (Leonard Bernstein) ஒருங்கிணைப்பாளராக மாஹலரின் சிம்பனி 6 இயக்கிய காணொளியை இரவு நேர நிசப்தத்தில் கேட்டுப் பாருங்கள். ஒரு கனத்த சோகம் நம்முள் குடியேறுவதை தடுப்பது கடினம்!
எந்நேரத்திலும் பிரசவம் என்ற நிலையில் முட்டிக்கொண்டு பிதுங்கிய நிலையில் சில வருடங்களுக்கு முன் பல ஹார்ட் டிஸ்குகள் என்னிடம் சேர்ந்திருந்தன. பெங்களூரில் இருந்த சமயம். வகைதொகையில்லாமல் கிடைத்த எல்லா பாடல்களையும் mp3 வடிவத்துக்கு மாற்றி சேகரித்துக்கொள்வேன். வீட்டுப்பிராணிகள் போல் சமர்த்தாக பகுப்புக்குள் அடங்கும் திரையிசைப் பாடல்களைத் தவிர ஆங்கில பாப் ஆல்பங்கள், மைக்கேல் ஜாக்ஸனின் மேடையாட்டங்கள், ABBA , பீட்டில்ஸ், பிரின்ஸ் என கட்டுக்குள் அடங்காதவையும் அதில் அடக்கம். வீடு மாறும்போதெல்லாம் ஹார்ட் டிஸ்குகளை வைத்துக்கொள்வதா வேண்டாமா எனப் பரிசீலனை எழும். இன்று அனேகமாக இத்தொகுப்புகள் தேவையில்லை. எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையானதை தரவிறக்கிக்கொள்ளலாம். போன மாதம் வீடு மாறியபின்னர் கையடக்கமாக 1TB ஹார்ட் டிஸ்க் வாங்கி இவற்றையெல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு டப்பாவுக்குள் அடக்கியாயிற்று.
ஆனால் மறுபடியும் பழைய பிரச்சனை தலைதூக்கியது. தொகுப்புக்குள் அடங்காத தமிழ் ஆல்பங்களை என்ன செய்வது? இன்று அனேகமாக தமிழ் பாப் ஆல்பம் வருவதில்லை என்றே நினைக்கிறேன். முன்னர் மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், பீட் ரவி, கானாஸ் போன்றவர்கள் தமிழ் பாப்பின் பெரிய தலைகளாக இருந்த காலகட்டம். இப்போது முழுவதும் poop ஆகிவிட்ட நிலை. அனேகமாக இவை இன்று கேட்க சகிக்காது என்ற எண்ணத்தில் மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ் ஆல்பங்களை தூசி தட்டி எடுத்தேன்.
நேற்று சுரேஷ் பீட்டர்ஸின் மின்னல் ஆல்பத்தை பல வருடங்களுக்குப் பின் மீண்டும் கேட்டேன். மொத்தம் 30 நிமிடங்கள் கூட இல்லை. ஆனால் பாப் இசை வடிவத்தை கச்சிதமாக பின்பற்றி வெற்றிகரமான ஆல்பத்தை அந்நாளில் அவரால் வெளியிட முடிந்திருக்கிறது. ஆறு மாதம் ஊறவைத்தால் கேட்க முடியாமல் போகும் திரையிசைப்பாடல்கள், பெரும்பான்மையான பாப் ஆல்பங்களுக்கிடையே காலத்தைத் தாண்டி மின்னல் பளிச்சென வெட்டு வெட்டியிருக்கிறது. இன்றும் முழு ஆல்பத்தை எந்தவித சலிப்புமில்லாமல் கேட்க முடிவதே மின்னலின் வெற்றி. மனதில் தங்கக்கூடிய பாடல் வரிகள், சுரேஷ் பீட்டர்ஸின் வசீகரக் குரல், அற்புதமான இசை என எல்லா கட்டங்களையும் டிக் அடித்துவிடுகிறது.
இது வானம் சிந்தும் -
முகிலென -
மின்னல் ஆல்பத்துக்குப் பிறகு இரண்டொரு தனி ஆல்பங்கள் வெளிவந்திருந்தாலும், சுரேஷ் பீட்டர்ஸுக்கு அவை வெற்றியாக அமையவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில பாடல்கள் பாடினார், ஓரிரு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அத்துடன் சரி. பலதரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்திய மின்னல் போல் வேறொன்றும் அவருக்கு அமையவில்லை என நினைக்கிறேன் .
குறிப்பாக ’இது வானம் சிந்தும் ஆனந்த கண்ணீர்’, ’முகிலென’ (ஜாஸ் போல் அற்புதமான சாக்ஸபோன் தேன்!) போன்ற பாடல்களின் தந்தியிசை மிகவும் உருக்கமாக அமைந்திருக்கிறது. மழைக்கு முன் வரும் மின்னலின் துள்ளலைவிட, அடித்துவிட்ட மழைக்கு பின் சிந்தும் ஓரிரு துளிகளின் அமைதி இப்பாடல்களில் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய டேக் இட் ஈஸி, முஸ்தபா முஸ்தபா பாடல்களின் வேர் ’உன்னைப் பார்த்ததும்’, ’அ ஆ ரோஜா’ போன்ற பாடல்களில் இருக்கிறது. ஒரு குழுவில் இருந்ததால் ஒரே போன்ற இசை போக்குகள், ரசனைகள் என தங்கள் தனித்தன்மைகளாக சுரேஷ் பீட்டர்ஸும், ஏ.ஆர்.ரஹ்மானும் உணர்ந்திருப்பார்கள்.
இன்று தனிக்குழுக்கள் பல ஆல்பங்களை வெளியிட்டாலும், அவை பல வருடங்களாக சரியான சந்தர்பத்துக்காக காத்திருப்பது போல் தெரிகிறது. கிதார் பிரசன்னா, ரவிகிரண், நீலாத்ரி குமார் போன்றோர் தனி இசை ஆல்பங்கள் வெளியிட்டு பிரபலடைந்திருந்தாலும், தமிழ் பாப் எனும் வகை மின்னல் போல் தோன்றி மறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
Recent Comments