ஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :))
ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை விட அதன் காரணம் உப்பு குறைபாடென அறிவுமிலாத கொடுமையை என்னவென்று சொல்வது? ஆங்கிலேய வைத்தியர்கள் பலர் இங்கிலாந்து பார்லியமெண்டில் போராடிப்பார்த்த விஷயம் இந்திய மேல் வர்க்க தொழிலதிபர்களுக்குத் தெரிந்தபோதும், ஒரு பொது அறிவாக இது பரவவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. அதுவும், வரி வசூலிக்க நில வரியை அதிகப்படுத்தலாம் எனும் சாத்தியம் இருந்தும், எங்கே அதனால் தங்களுக்கு பாதிப்பு வருமோ என இந்திய நிலக்கிழார்கள் உப்புவரியை முன்னிறுத்திய சுய அழிப்பு மிகப் பெரிய அநியாயம்.
மூன்று விஷயங்கள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தின. இவை ஜெமோ கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் தான் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும்போது மனம் பதைபதைத்தது.
ஒன்று, சுங்கவேலி தொடர்பான சரித்திர சான்றுகளை எந்த வரலாற்று ஆசிரியரும் பெரியளவு குறிப்பிடாதது. அதுவும் பெரும் பஞ்சங்கள் நடந்த காலகட்டத்தில் உருவான இந்த வேலி பற்றி The Great Bengal Famine போன்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஒருசில புத்தகங்களில் குறிப்பிட்டிருந்தாலும், மிக விரிவாக எங்கும் இல்லை என ராய் மாக்ஸாம் குறிப்பிடுகிறார்.
ரெண்டாவது - ஒரு ஆறாத ரணமாக உப்பு வேலி பற்றி சதா தேடியபடி இருந்த ராய் மாக்ஸாம், கிட்டத்தட்ட இந்திய ஆத்மாவின் மையத்தை இத்தேடலின் வழி எட்டிவிட்டார் எனத் தோன்றுகிறது. நேரடியாகக் களத்தில் இறங்கிய அவரது அனுபவம் மிகத் தெளிவாக எழுதப்பட்ட வகையில், இந்திய தேசத்தின் நிறை குறைகளை, மக்களின் மன ஓட்டத்தை (உப்புவேலியைப் பார்த்துவிடவேண்டும் என சிவன் கோவிலில் வேண்டிக்கொண்டபின், பெரிய தப்பிழைத்தது போல, மீண்டும் உள் சென்று தன குடும்ப நலனுக்காகவும் வேண்டிக் கொள்கிறார்) , இந்திய அரசியந்தரத்தின் போக்கை (ஹைத்திராபாத் வானிலை மையத்தில், சுங்கவேலி இருந்த பகுதியின் செயற்கைக்கோள் வரைபடங்கள் கிடைக்க $15000 கேட்டிருக்கிறார்கள்) தெளிவாக முன்வைத்துள்ளார்.
மூன்றாவது - பெரிய திட்டத்துடன் பலவகைக் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி உப்புவேலியை உருவாக்கிய A .O .Hume பற்றிய சித்திரம். தான் செய்யும் வேலையின் கொடுமை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், சீனச் சுவர் போலத் திட்டமிட்டு ஹியூம் முழுமூச்சோடு இதை அமைத்திருக்கிறார். இதற்காக இங்கிலாந்து பார்லியமெண்டில் வாதாடி வென்றிருக்கிறார். இதை எதிர்த்த ஆங்கிலேய வைத்தியர்களின் குரல்களை அமுக்கியுள்ளார். ஆனால், உப்புவேலி பயன்படுத்தப்பட்டாத காலகட்டத்துக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி இந்திய விடுதலைக்காக பாடுபட்டிருக்கிறார். இவர் எழுதிய பறவையியலாளரின் நாட்குறிப்புகள் படித்துள்ளேன். கண்டிப்பாக, உப்பு பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உண்டாகயிருக்கும் பாதிப்பை இவர் உணர்ந்தேயிருப்பார். அப்போதே இதை எதிர்க்காமல், பின்னர் இந்திய காங்கிரசில் பாடுபட்டது எப்படி? எவ்வாறு இந்த மாற்றம் உருவாயிற்று? ஆச்சர்யமாக உள்ளது. இந்தியர்களுக்கு சவுக்கடி கொடுத்ததை எதிர்த்திருக்கிறார். 'சரக்கு' வரியை எதிர்த்திருக்கிறார். இந்திய பறவையியலில் குறிப்பிடத்தக்க பறவை குணாதிசய வகைமாதிரிகளை உருவாக்கியிருக்கிறார். கூடவே, ஏற்கனவே பஞ்சத்தில் தத்தளிக்கும் மறிகடல் பாழ்பட சுங்கவேலியை உறுதியான வேலியாக மாற்றவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவின் அடிப்படை சிக்கல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த புத்தகம் மிக அருமையான ஆவணமாக இருக்கிறது. அவர்கள் வரி விதித்த, தடை செய்த ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னும் இப்படி ஏதேனும் சரித்திரம் இருந்தே தீரும். பலவகையில் அவர்களது சுரண்டல்கள் வெளிவரும் இக்காலகட்டத்தில் களஆய்வுடன் செய்யப்படும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை நமது கல்விக்கூடங்கள் எடுத்துச்செய்ய முடியுமா? செய்தாலும், கல்வி அமைப்புகளால் அவற்றின் உண்மைகளை எந்தளவு சகித்துக்கொள்ள முடியும் எனும் கேள்வி இருக்கும்போது, இப்படிப்பட்ட தனிமனித முயற்சிகளும் புனைவுகளும் தான் நமக்கு நம் சரித்திரத்தின் நுழைவாயில்.
ஆக்ரா அருகில் இருக்கும் எளிஹான் எனும் கிராமத்தில் மிச்சமிருந்த சிறு சுங்கவேலியைக் கண்டுபிடித்த திருப்தியில் ராய் மாக்ஸாம் வீடு திரும்புகிறார். பழைய வரைபடங்களிலிருந்து உப்புவேலியின் பூமத்திய அட்சரேகைகளைக் கொடுத்துள்ளார். ராய் மாக்ஸமாக மாறி கூகிள் மேப்பில் தேடிப்பார்த்ததில் அதே இடங்களில் இன்றைய உப்புசுரங்கமான KFC யைக் கண்டு மகிழ்ந்தேன். போடா முட்டாபயலே, வெள்ளைக்காரன்னா சும்மாவா? உப்பு எடுத்த இடத்திலேயே இன்னிக்கு உப்பு அபிவிரித்தியா கொடுக்கிறான் பாரு என என் தாத்தா சொல்லியிருக்கக்கூடும்.



Recent Comments